dinamalar telegram
Advertisement

கொலு பொம்மை இல்லாத நவராத்திரிகள் வெறும் ராத்திரிகளே

Share

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது அஸ்தகிரி தெரு
ஆனால் அஸ்தகிரி தெரு என்றால் யாருக்கும் தெரிவதில்லை பொம்மைக்கார தெரு என்றால்தான் தெரிகிறது
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா,மகராஷ்ட்ரா உள்ளீட்ட பல மாநிலங்களுக்கும் தேவைப்படும் கொலு பொம்மைகள் இங்கு இருந்துதான் செல்கின்றனமுன்னுாறு வகையான கடவுள் பொம்மைகளும், ராமாயணம் மகாபாரதம் கல்யாண ஊர்வலம் உள்ளீட்ட செட் பொம்மைகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன
இங்குள்ளவர்கள் மூன்று தலைமுறையாக இந்த பொம்மை தொழிலில் ஈடுபட்டுள்ளனர் ஐந்து ரூபாய் முதல் ஐம்பாதாயிரம் ரூபாய் வரையிலான விலையில் பொம்மைகள் கிடைக்கின்றன அரை அடி உயரத்தில் இருந்து பதினாறு அடி உயரம் வரையிலும் கூட பொம்மைகள் செய்யப்படுகின்றன.இங்குள்ள முப்பதிற்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டிற்கு நாற்பது பேர் என்று ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த தொழில் மூலம் வாழ்ந்து வருகின்றனர்.
வருடம் முழுவதும் செய்யப்படும் பொம்மைகள் விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் விற்றுத்தீர்ந்துவிடும் நவராத்திரி நேரத்தில் இவர்களது பொம்மைகள் யாவும் அரசு மற்றும் தனியார் கடைகளை விற்பனைக்காக அலங்கரிக்க சென்றுவிடும் நிலையில் இவர்கள் மகிழ்வுடன் ஒய்வில் இருப்பர்.ஆனால் இதெல்லாம் இரண்டு வருடத்திற்கு முந்தைய பழங்கதை
இப்போது எல்லாமே தலை கீழ் கொரோனா இவர்களது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது.
யாராக இருந்தாலும் வாசலைத் தாண்டி வராதீர் என்று எழுதாத சட்டத்தின் கீழ் எல்லோரும் சிக்கிக் கொண்ட நிலையில் நவராத்திரியை கொண்டாட யாரும் யார் வீட்டிற்கும் செல்லவும் இல்லை அழைக்கவும் இல்லை நிறைய வீடுகளில் கொலுவே வைக்கவில்லை.
யாரையும் அழைக்காமல் யாரும் வராமல் நவராத்திரிகள் வெறும் ராத்திரிகளாக ஆன நிலையில் யாரும் கொலு பொம்மைகள் வாங்க வரவில்லை கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் கொலு பொம்மைகள் அப்படியே தேங்கிவிட்டன.செய்வதறியாது திகைத்துப் போனார்கள் கொலு தயாரிப்பாளர்கள்.மளிகை, வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்பு என்று எந்த செலவையும் குறைக்க முடியாத நிலையில் பொம்மைத் தொழிலாளர்கள் பலரும் கடனாளியானார்கள்.
மற்றவர்களால் முடியாத கலையை படைக்கும் கலைஞர்கள் என்ற பெருமையை கலைத்துவிட்டு வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வீட்டு வாசல்களை சிறு பெட்டிக்கடையாக மாற்றி ஐந்திற்கும் பத்திற்கும் வீட்டிற்கும் சமையல்கட்டிற்குமாக ஒடிக்கொண்டு இருக்கின்றனர்.ஆண்களோ பொம்மை செய்வதைத் தவிர எந்த வேலையும் தெரியாது ஆனால் இப்போது எந்த வேலை கொடுத்தாலும் செய்யத்தயார் என்று கூலி வேலை தேடி வெளியே சென்று வருகின்றனர்.
ஆடிய கால்களும் ஒடிய பாடிய வாயும் ஒயாது என்பது போல இந்த வருட நவராத்திரி நெருங்கியதும் கொரோனா ஒரளவு தணிந்துவிட்டது ஆகவே மக்கள் பழையபடி நவராத்திரி கொண்டாடுவர் என்று எண்ணி கிடப்பில் இருந்து பழைய பொம்மைகளை துாசு தட்டி எடுத்து வைத்ததுடன் இந்த வருட புதிய பொம்மைகளையும் செய்யத்துவங்கினர்.
சோதனையாக இந்த வருடம் இவர்களுக்கு களிமண் கிடைக்கவில்லை காரணம் ஏரிகளில் களிமண் எடுக்க அரசு வேறு காரணங்களுக்காக போட்ட தடை உத்திரவு இவர்களை கடுமையாக பாதித்தது, தடை இல்லாத இடங்களில் இருந்து களிமண் பெற மிகக்கூடுதலாக செலவு செய்தனர் ஐநுாறு ரூபாய் கொடுத்த இடத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினர் செய்யும் பொம்மைகள் மூலமாக சம்பாதித்துக் கொள்வோம் என்று நம்பினர்.
ஆனால் அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் சிக்கல்
கொலு பொம்மைகள் பெரும்பாலும் கோவில்களிலும் கோவிலைச் சுற்றியுள்ள வளாகத்திலும்தான் அதிகமாக விற்கும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்வர்.ஆனால் டாஸ்மாக்கில் காட்டும் ‛ஒழுங்கு' கோவில்களில் இருக்காது என்று எண்ணும் அரசு விசேஷ நாட்களான வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் கோவில்களை பக்தர்களுக்கு சாத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே தேங்கிக்கிடக்கும் கடந்த வருட பொம்மைகளுடன் இந்த வருட பொம்மைகளும் சேர்ந்து தேங்கிக்கிடக்கிறது பல்வேறு ஊர்களில் இருந்து சாரை சாரையாக வாகனங்களில் வந்து பொம்மைகள் வாங்கிச் செல்லும் வாகனங்களில் ஒன்றைக்கூட காணாமல் அது வரும் வழிமீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
பொம்மைகள் எல்லாம் கடைகளுக்கு போயிருச்சுங்க அங்க போய் வாங்கிக்குங்க என்று பதில் சொல்லும் பொம்மைக்கார தெருவாசிகள் முதல் முறையாக பிடித்த பொம்மைகளை எடுத்துக் கொள்ளுங்கள் விலை குறைத்து தருகிறோம் என்று சொல்லி வீட்டு வாசலிலும் வாசலை ஒட்டியுள்ள தெருவிலும் பொம்மைகளை போட்டு வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் இது காஞ்சிபுரம் பொம்மைக்கார தெரு வரலாற்றிலேயே நடந்திராத அவலமாகும்.
வருகின்றன ஏழாம் தேதி நவராத்திரி துவங்க உள்ள நிலையில் நாட்கள் நெருங்குகின்றன பொம்மைத் தொழிலாளர்களையோ பொருளாதாரம் நெருக்குகிறது.
குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் குதுாகலித்து மகிழும் ஒன்பது நாள் நவராத்திரி பண்டிகையை பழையபடி மக்கள் கொண்டாட வேண்டும் இந்த பண்டிகை மூலம் உறவுகள் மலரட்டும் நட்புகள் புதுப்பிக்கப்படட்டும் கூடவே பொம்மைக் கலைஞர்கள் வாழ்வும் முன்பு போல சிறக்கட்டும்.
இந்த வருடம் இவர்கள் செய்த பொம்மைகளில் களிமண்ணோடு தண்ணீர் மட்டுமின்றி தங்கள் கண்ணீரையும் செந்நீரையும் சேர்த்து பிசைந்து குழைத்தே செய்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து இதுவரை பொம்மை வாங்காதவர்கள் இந்த வருடம் வாங்குங்கள் பொம்மை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒன்றுக்கு இரண்டாக வாங்குங்கள் இதனால் காப்பாற்றப்படுவது பொம்மைக் கலைஞர்கள் மட்டுமல்ல கலையும்தான்.
-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • Visu Iyer - chennai,இந்தியா

    திட்டமிடாத மத்திய அரசின் செயல்பாடு.. முழு அடைப்பு என அறிவித்து இவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து விட்டது.. திறமை இல்லாத மத்திய அரசு இது போல பல தொழிலார்களின் பொருளாதார நிலையை பதம் பார்த்து விட்டது..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement