உலகில் உள்ள பல மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து, சிதைந்து, ஆய்வாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் ஒதுங்கி விட்டன. ஆனால் தமிழ் மட்டுமே அதன் தன்மை மாறாது வளர்ந்து நிற்கிறது.
இதற்கு பலரும் தங்கள் உழைப்பை, அறிவை, ஆற்றலை, பொருளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, கால நேரம் பார்க்காது வாரி வழங்கி, மொழியை வளப்படுத்தியது தான் முக்கிய காரணம்.அப்படி ஒரு நிலையில் இருந்தவர் தான், இன்று 113வது பிறந்த நாள் காணும், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்.,தன் இறுதிக் காலம் வரை பல்வேறு துறையைச் சார்ந்த தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து, அவர்களிடம் பரிவும், பாசமும் செலுத்தினார். அறிஞர்களையும், அவர்கள் வாயிலாக மொழியையும் வளமுற செய்தார்.
மக்கள் திரண்டனர்
'மொழி வளர்ச்சி, பழைய தலைமுறையோடு நின்று விடக் கூடாது;இளம் தலைமுறையினரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்க முன்வர வேண்டும்' என, தணியாத ஆவலுடன் செயல்பட்டார். 'மூத்த மொழி' என்பது பெருமை தருமே தவிர, அதன் வளர்ச்சிக்கு உதவாது; அது, மக்கள் மொழியாக மாற வேண்டும் என்பதில் டி.வி.ஆர்., உறுதியாக இருந்தார். இதன் காரணமாக, நாகர்கோவிலில் தமிழ் அறிஞர்கள் மாநாட்டை நடத்தினார்.
எல்லா மாநாடுகளும் சென்னையை மையமாக வைத்து நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் எழுத்தாளர்களின் ஆறாவது மாநில மாநாட்டை, 1958 மே 31 மற்றும் ஜூன் 1ம் தேதி குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடத்தினார் டி.வி.ஆர்.'தமிழகத்துடன் இணைந்த குமரி மாவட்ட மக்கள், நாம் எப்பேர்பட்ட வளமையான மொழியின் கீழ் உள்ளோம் என்று நினைத்து பெருமைப்பட வேண்டும்; அதற்கு தமிழ் அறிஞர்கள் பலரது பேச்சைக் கேட்க வேண்டும்.
தமிழ் அறிஞர்கள் இருக்கும் இடத்திற்கு மக்களை அழைத்து செல்ல முடியாது; ஆனால், மக்கள் இருக்கும் இடத்திற்கு அறிஞர்களை அழைத்து வர முடியும் என்பதால், இந்த மாநாட்டை இங்கு நடத்துகிறேன்' என, அவர் காரணமும் சொன்னார்.கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, தமிழின் மீதுள்ள பற்றும், பாசமும் அதிகம். அதற்கு காரணம் மலையாள மக்கள்!குமரி மக்களிடம் வலிய தங்கள் மொழியை திணித்து, தமிழை மறக்கவும், மழுங்கடிக்கவும் முற்பட்டனர்.
எதன் மீது அழுத்தம் அதிகமாகிறதோ அது வெடித்து கிளம்பும் என்பது போல, தமிழை அழிக்கவும், ஒழிக்கவும் எடுத்த முயற்சிகளைக் கண்ட தமிழ் மக்கள், தம் மொழிக்கு ஆதர வாக நின்றனர். அதற்காகத் தான் மாநாட்டை டி.வி.ஆர்., நடத்துகிறார் என்றதும், மக்கள் திரண்டனர்.தாய் தமிழகத்துடன் இணைந்து விட்ட குமரி மாவட்டம் பற்றி இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் முழுக் கவனம் செலுத்துவர்; அவர்களின் எழுத்து வன்மையால் குமரி மாவட்டம் பல துறைகளில் முன்னேற்றம் காணும் என, அவர் நம்பினார். இதனால் மாநாட்டில் அவரது துவக்க உரையே நெருப்பு உரையாக இருந்தது.
எழுத்தாளர்கள் யார்
'எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இங்கு தோன்றியுள்ளனர். கே.என்.சிவராஜ பிள்ளை, செய்கு தம்பி பாவலர், தசாவ தானம் ஆறுமுகம் பிள்ளை முதலானவர்களை நீங்கள் அறிவீர்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றி அறியாத தமிழர்களே இல்லை எனலாம்.'கலை உலகில் புகழ் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.கே.எஸ்., சகோதரர்களும் இந்த ஜில்லா மக்களே.'நீலத் திரைகடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி எங்களை எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறாள். நாங்கள் அண்மைக் காலம் வரை மலையாள நாட்டுடன் இணைந்திருந்தோம். பெரிய போராட்டம் நடத்தி இப்போது தான் தமிழகத்தோடு இணைய முடிந்தது.
'மலையாள சூழ்நிலையில் இருந்தும் கூட இந்தப் பகுதி, தாய் மொழிக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 'எழுத்தாளர்கள் யார் என்றால் கம்பரும், காளிதாசரும் மட்டுமல்ல; ஒரு சிறிய பத்திரிகைக்கு எழுதுபவரும் எழுத்தாளரே. தமிழ் எழுத்தாளர்கள், பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல; ஒருபடி மேலாகக் கூட சொல்லலாம்.
புதிய படைப்பிலோ, மொழிபெயர்ப்பிலோ, தழுவலிலோ தமிழ் மொழி வேகமாக முன்னேறி வருகிறது.'தமிழகத்தில் கல்வியறிவு இன்று மேற்கு நாடுகளைப் போலவோ, அண்டையிலுள்ள கேரளத்தைப் போலவோ கூட பரவவில்லை.'அப்படி இருந்தும், தமிழ் தின, மாத, வார பத்திரிகைகள் எல்லாம் இந்தியாவிலேயே கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. 100க்கு 100 என்ற கல்வி நிலை எய்தி விட்டால் எழுத்தாளர்கள் ஓய்வு எடுக்க முடியாத நிலை வந்துவிடும். அவர்களுக்கு ஒளி வீசும் எதிர்காலம் அப்போது உண்டு.
'இவற்றை நன்றாக உணர்ந்து தான், புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். 'நறை செவிப் பெய்தன்ன' என்ற கம்பனின் சொற்றொடரை, 'தேன் வந்து பாயுது காதினிலே' என புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பை பாருங்கள்.'நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்மில் பலர் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் கற்று, அதன் சாரத்தை எல்லாம் நம் தாய்மொழியில் கொணரச் செய்ய வேண்டும்.
உயர்த்திப் பிடிப்போம்
'விஞ்ஞானத்தை தமிழில் மொழிபெயர்க்கும் போது பல சிரமங்கள் ஏற்படலாம், அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒருவித தடுமாற்ற நடையோடு எழுதினாலும் குற்றமில்லை. காலப் போக்கில் அது மாறி, நல்ல உருவில் அமைந்து விடும்.'ஆரம்ப காலத்தில், வடமொழி சொற்களை மிகுதியாகக் கொண்டு, ஒரு மணிப்பிரவாள நடையாகத் தான் தமிழில் வசனமும் இருந்தது. இப்போது அந்த நடை முற்றிலும் மாறி தனக்கென ஓர் உயர்ந்த பாணியில் மிளிருகிறது அல்லவா...'வாள் போல் அழிவுப் பாதையில் நம் பேனாவை செலுத்தாமல், ஆக்க வேலைக்கு பயன்படுத்துவோம் என, விரதம் கொள்ளுவோமாக. தமிழை உலகப் பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நம் கடமை; அதைச் செய்தே தீருவோம்.
'இந்திய மொழிகளில் எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கே உண்டு. இலக்கிய வளம் நிறைந்தது; இனிமை மிக்கது. 'ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைப் பேரிலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழே. அது மட்டும் அல்ல, சங்கிலிக்கோர்வை போல் தடைபடாத, விடுபடாத நீண்ட மரபு, தமிழைப் போல் வேறெந்த மொழிக்குமே கிடையாது. ஆண்டுகள் பல்லாயிரம் ஆன பின்பும் இளமைப் பொலிவு குன்றாக் கன்னி மொழி இது.'இரண்டாயிரம் ஆண்டு களாக தமிழ் மொழி மாறவில்லை.
எழுத்தறிவு இல்லாதோர் கூடத் தமிழ் காவியங்களை, பிறர் படிக்கக் கேட்டு புரிந்து கொள்ளக் கூடிய பெருமை, தமிழ் மொழிக்கு உண்டு.'இந்த காரணத்தால் தான் உலகின் எந்த மொழியையும் விட தமிழ் சிறந்ததெனக் கருதப்படுகிறது' என்று, தமிழ் மொழி பற்றி தன் கருத்துகளைக் கூறினார்.தொடர்ந்து எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபடாமல் தங்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் மொழி வழியாய் வெளியிட வேண்டும் எனக் கூறி, தமிழ் தன் உயிருக்கு நேர் என்று சொல்லாமல் சொல்லிய டி.வி.ஆர்., புகழ் பாடுவோம்; அவர் விரும்பியபடி தமிழை உயர்த்திப் பிடிப்போம்!
நன்றி: கடல் தாமரை
(தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,வாழ்க்கை வரலாறு புத்தகம்)
- எல்.முருகராஜ்
இ - மெயில்: murugaraj@dinamalar.in
டிவிஆர் தமிழ் மக்களின் யுக புருஷன். போலி நாடக தலைவர்கள் போல அல்லாமல் உண்மையில் நாட்டுக்கும் மொழிக்கும் உழைத்த உத்தமர்.