dinamalar telegram
Advertisement

கோவையில் தொடரும் அ.தி.மு.க., ஆட்சி... : கோலோச்சும் அதிகாரிகளே சாட்சி!

Share

வெளியில் கிளம்புவதற்காக சித்ராவும், மித்ராவும் வண்டியை எடுத்ததும், மழை வலுக்கத் துவங்கியது. இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் வந்து 'டிவி'யைப் போட்டு உட்கார்ந்தனர்.


டேபிள் மேலிருந்த நாளிதழ்களைப் புரட்டியபடியே சித்ராவிடம் கேட்டாள் மித்ரா.


''அக்கா! நம்ம பேசுன மாதிரியே அதிகாரிகள் டிரான்ஸ்பர் மேளா ஆரம்பிச்சிருச்சு...அடுத்து ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் 'கூண்டோடு மாற்றம்' கோலாகலமா நடக்கும்னு பேசிக்கிறாங்க...உங்கள்ட்ட எதுவும் தகவல் இருக்கா?''


''இப்போ மாத்துன அதிகாரிகள்ல காத்திருப்போர் பட்டியல்ல இருக்குற ரெண்டு பேரை, சஸ்பெண்ட் பண்ணுவாங்க...அரெஸ்ட் ஆகவும் வாய்ப்பிருக்குன்னு ஒரு தகவல் ஓடுது...!'' என்றாள் சித்ரா.


''ஆனா ரிஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட்ல நம்ம கொங்கு மண்டலத்துல இருந்த எட்டுப்பேரை என்கொயரி பண்ணி, ரெண்டு பேரை சஸ்பெண்ட்டே பண்ணீட்டாங்க...அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு அங்கயும்ஒரே பரபரப்பா இருக்கு!'' என்றாள் மித்ரா.


''கொடநாடு சம்பவத்துல இவுங்க தொடர்பு எதுவும் உறுதியானதாத் தெரியலை...அதனால ஹவுசிங் போர்டுக்கு கையகப்படுத்துன இடங்களை, தவறா ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணீட்டாங்க. அன்அப்ரூவ்டு சைட்களை பதிவு பண்ணிட்டாங்கன்னுதான் ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க!'' என்றாள் சித்ரா.


''ஓ...! ஆனா இதே மாவட்டத்துல அன்அப்ரூவ்டு சைட்களை ரிஜிஸ்டர் பண்ணுன, மத்த அதிகாரிகளை விட்டுட்டாங்க...கோவை 'மாஜி'யோட பி.ஏ.,வுக்கு, ரூம்மேட்டா இருந்த மண்டல உயரதிகாரி ஒருத்தர்தான், அந்த மாஜியோட வீட்டுலயே ராத்திரி 12 மணி வரைக்கும் இருப்பார்னு துறை ஆளுங்களே தகவல் சொல்றாங்க. அவர் ஒரே மாவட்டத்துல 25 வருஷமா இருந்ததைப் பத்தியும், போன கவர்மென்ட்ல அஞ்சு வருஷம் தொடர்ச்சியா கோவையில இருந்ததைப் பத்தியும், விஜிலென்ஸ் போலீஸ் விசாரிச்சிட்டுதான் இருக்காங்களாம்!'' என்றாள் மித்ரா.


''இப்பிடித்தான் போன ஆட்சியில ஆளும்கட்சி வி.ஐ.பி.க்களுக்கு விசுவாசமா இருந்தவுங்க, அவுங்க தயவுல இங்க நல்ல போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்தவுங்க பல பேரை, இன்னும் மாத்தாமலே இருக்காங்க...!'' என்றாள் சித்ரா.


''நீ எந்த டிபார்ட்மென்ட்டைச் சொல்றேன்னு தெரியலை!'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்குள் குறுக்கே புகுந்தாள்சித்ரா.


''மைன்ஸ் டிபார்ட்மென்ட்ல முக்கியமான பொறுப்புல இருக்குற ஒருத்தரோட சொந்த ஊரே எடப்பாடிதான். குவாரி, செங்கல் சூளை, எம்.சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள்ட்ட, வசூல் தட்டி எடுக்குறார்ன்னு அவரு மேல நிறைய புகார் இருக்கு. அதை வச்சு இப்போஇருக்குற சீனியர் மினிஸ்டர் ஒருத்தரைப் பார்த்து, 'காணிக்கை' செலுத்திட்டாராம். எல்லார்ட்ட இருந்தும் மாசாமாசம் மாமூல் வாங்கித்தர்றதுக்கும் வாய்மொழி ஒப்பந்தமே போட்டுட்டு வந்துட்டாராம்...அதனால அவரைக் கண்டுக்கலைங்கிறாங்க!''


''அதே மாதிரித்தான் நம்ம 100 அடி ரோட்டுல வானத்துக்கே பாலம் கட்டுனாரே ஹைவேஸ் இன்ஜினியர் ஒருத்தரு. அவரும் சேலத்துக்கு பக்கத்து ஊர்க்காரர்தானாம். எடப்பாடிக்காரருக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமா இருந்தவராம். கோயம்புத்துார், சேலம்னு மாறி மாறி கொழிச்சிருக்காரு. நம்ம ஊர்ல பல பாலங்கள் எதுக்கும் உதவாம டிசைன் பண்ணுனதுல இவரோட பங்குதான் அதிகம். ஆனா அவரை இன்னமும் ஏன் மாத்தாமல் இருக்காங்கன்னு டிபார்ட்மென்ட்ல பல பேரு கொந்தளிக்கிறாங்க!''


''அக்கா! ஆபீசர்கள் மட்டுமில்லை...கான்ட்ராக்டர்கள்ட்டயும் இதே புலம்பல்தான்...சமீபத்துல வில்லேஜ் பஞ்சாயத்துகள்ல போடுற ரோடுகள் தரமா இருக்கான்னு நம்ம கலெக்டர் களத்துல இறங்கி செக் பண்ணிருக்காரு. ஆனா எந்த டவுன் பஞ்சாயத்துலயும் செக் பண்ணலையாம். அங்கதான் ரொம்ப ரொம்ப மோசமா ரோடு போடுறாங்களாம். அங்கயும் அ.தி.மு.க., கான்ட்ராக்டர்களுக்குதான் அதிகமா வேலை கொடுக்குறாங்களாம். ஆட்சிக்கு வந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு தி.மு.க., ஆதரவு கான்ட்ராக்டர்கள் குமுறித் தள்ளுறாங்க!''


''இதெல்லாம் பரவாயில்லை மித்து...குடிசை மாற்று வாரியத்துல நம்ம கோவை 'மாஜி'யோட கருணையில, ஒரு வருஷம் பணி நீட்டிப்பு வாங்குன ஒரு இன்ஜினியர் இங்க இருக்காரு. அவரு சம்பளம் கொடுக்குற கவர்மென்ட்டுக்கு ஆதரவா வேலை பார்க்காம, பணி நீட்டிப்பு கொடுத்தவுங்களுக்கு விசுவாசமா வேலை பாக்குறாருன்னு ஹேவேஸ் இன்ஜினியர்கள் புலம்புறாங்க!''


''புரியலை...தெளிவாச் சொல்லுக்கா!''


''போன கவர்மென்ட் இருந்தப்போ, வேகவேகமா வீடுகளைக் காலி பண்ணிக் கொடுத்த இந்த ஆபீசர், இப்போ திருச்சி ரோடு பாலத்துக்கு இறங்குதளம் கட்டுற இடத்துல இருக்குற ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு, மாற்று வீடுகளை ஒதுக்காம இழுத்தடிக்கிறாராம். அதனால அந்த வேலை அப்படியே நிக்குது...டோபிகானா கட்டுற வேலையையும் ஜவ்வா இழுக்குறதால, செல்வபுரம் பைபாஸ் ரோட்டுலயும் இறங்கு தளம் கட்ட முடியலையாம். நம்மூர்ல இன்னும் ஏடிஎம்கே ஆட்சிதான் நடக்குதுன்னு, ஹைவேஸ் ஆபீசர்ஸ் கடுப்பாகுறாங்க!''''இதெல்லாம் பேரு ராசி போல இருக்குக்கா... சிங்காநல்லுார்ல டிராபிக்ல இருக்குற எஸ்.ஐ.,ஒருத்தரும் பேருக்கேத்தது மாதிரி தீயா வசூல் பண்றாராம். அந்த வழியில போற சரக்கு வண்டிகள் எல்லாத்தையும் நிறுத்தி, டிரைவருக்கு மேல ஒரு ஆள் இருந்தாலும் ஆயிரம், ரெண்டாயிரம்னு பைன் போட்டுத் தீட்டுறாராம்!''


''ரூல்ஸ்படிதானே அவர் செய்யுறாரு?'' என்று கேட்டாள் சித்ரா.''அக்கா...அவரோட ரூல்ஸ் எல்லாம் 'வேற லெவல்'...ஒவ்வொரு சரக்கு வண்டியும் அவருக்கு மாசாமாசம் ரெண்டாயிரம் கொடுத்துரணுமாம். அப்பிடியில்லைன்னா இப்பிடித்தான் ரூல்ஸ் படி பைன் போடுவாராம்!''


''கேபிள் டிவி ஆபீசரா இருக்குற ஒருத்தரு, புதுசா ஒரு ரூல்ஸ் போட்ருக்காராம்...மாசத்துக்கு ஒரு நாள்தான் ஆபீசுக்கு வருவாராம். அன்னிக்கு மொத்த பைல்கள்லயும் கையெழுத்துப் போட்டுட்டுப் போயிருவாராம். கேபிள் டிவி ஆபரேட்டர்கள் யாராவது பார்க்கணும்னா அவர் வர்ற நாளைப் பார்த்து வந்து பார்த்துக்கணுமாம்...இது எப்பிடி இருக்கு?''வெளியில் வந்து பார்த்த மித்ரா, ''அக்கா! மழை விட்ருச்சு...கோனியம்மன் கோவிலுக்குப் போலாமா?'' என்று கேட்டாள்.''போகலாம் மித்து...நீ கோனியம்மன் கோவில்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு...அந்த கோவிலுக்கு காவி கட்டி, பட்டை தீட்டி, பயபக்தியோட தினமும் ஒரு பக்தர் வர்றாராம். அவரை 'வாட்ச்' பண்ணுங்கன்னு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவுங்க போலீஸ்ல சொல்லிருக்காங்க. ஏன்னா அவரு குண்டு வெடிப்பு கேசுல, கைதியா இருந்தவராம்!''


''என்னக்கா சொல்றீங்க...எனக்கே அதிர்ச்சியா இருக்கு!''


''உளவுத்துறை விசாரிச்சதுல, புளியம்பட்டியிலுள்ள ஒரு சாமியார் மூலமா அவர்மதம் மாறீட்டாராம். காவி உடுத்தி, ருத்ராட்சம் போட்டு கோவிலுக்கு வர்றதாத் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும் அவரைத் தீவிரமா கண்காணிச்சிட்டு இருக்காங்க!'' என்றாள் சித்ரா.''இன்னொரு போலீஸ் மேட்டர்...எஸ்.பி.,ஆபீஸ்ல இருக்குற ஒரு முக்கியமான லேடி ஆபீசர், கீழ இருக்குற பெண் போலீஸ்களை வாடி போடின்னு கொஞ்சங்கூட மரியாதையே இல்லாமப் பேசுறாராம். யார்ட்ட போய் இதைச் சொல்றதுன்னு புலம்புறாங்க!''


''போலீஸ், மிலிட்டரி எங்க இருந்தாலும் பெண்களுக்குப் பாதுகாப்பும், மரியாதையும் கிடைக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு...நம்ம ஊர் ஏர்போர்ஸ் அதிகாரி மேல, ஒரு பெண் அதிகாரி புகார் கொடுத்ததும், எப்பிடி ஆக்சன் எடுக்குறதுன்னு தெரியாம முதல்ல சிட்டி போலீஸ் ஆபீசர்ஸ் யோசிச்சிருக்காங்க. அப்புறம் தைரியமா பண்ணிட்டாங்க. அந்த ஆபீசரை அரெஸ்ட் பண்ணப் போனப்போ, சிவில் போலீஸ் எப்படி எங்க ஆபீசரை அரெஸ்ட் பண்ணலாம்னு அங்க பெரிய பிரச்னையாயிருக்கு. உள்ளேயே விடலையாம்!''


''பரவாயில்லை...அந்த லேடி ஆபீசருக்கு இப்பதான் நியாயம் கிடைச்சிருக்கு...முதல்லயே அவுங்க உயரதிகாரிகளே நடவடிக்கை எடுத்திருந்தா, இந்த விவகாரமே வெளிய வந்திருக்காதே!'' என்றாள் மித்ரா.


''மித்து! ஒரு இன்ட்ரஸ்டிங் தகவல்...நம்ம ஊரு மாவட்ட போலீஸ் ஆபீஸ்ல ஒரு நல்ல முயற்சி பண்ணிருக்காங்க. அதுலயும் ஓர் அரசியல் நடந்திருக்கு. தற்கொலை எண்ணங்கள்ல இருக்குறவுங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குறதுக்காக, ஒரு மையம் அமைச்சிருக்காங்க. அதுக்குப் பேரு 'விடியல்'னு வச்சிருக்காங்க. ஸ்டாலின்தான் வாராரு...விடியல் தரப் போறாரு...புரியுதா!'' என்று சிரித்தாள் சித்ரா.


''என்ன பேரு வச்சா என்ன...நல்ல விஷயம் நடந்தா சரி...ஆனா சிட்டி போலீஸ்ல நில அபகரிப்பு பிரிவுன்னு பேரு வச்சிட்டு, அதுல பணம் அபகரிப்பு வேலைதான் நடக்குது. அதுலயும் அங்க இருக்குற எஸ்.ஐ.,ஒருத்தரு, என்ன கம்பிளைன்ட் வந்தாலும் பஞ்சாயத்துப் பேசியே காசை கறந்துர்றாராம். அஞ்சு வருஷமா அவருக்கு இதே தான் வேலையாம். அவரை இங்கயிருந்து நகர்த்தவே முடியலைங்கிறாங்க!'' என்றாள் மித்ரா.''அரசியல் செய்தி ஒண்ணுமே இல்லையா மித்து?''


''ஓ... இருக்கே...அ.தி.மு.க.,வுல இருந்து தி.மு.க.,வுக்கு அவரு வர்றாரு, இவரு வர்றாருன்னு கதை வுட்டாங்க;ஒருத்தரும் வர்றது மாதிரித் தெரியலை. அஞ்சு வருஷத்துல பாதிக்காலம் 'சிட்டி டாடி'யா இருந்த 'மாஜி' ஒருத்தர்தான் தேர்தலுக்கு முன்னால தி.மு.க.,வுக்குத் தாவுனாரு. அவருக்கு அந்தப் பதவியை பாதியில விட்டுக் கொடுத்த 'மாஜி', இப்போ தி.மு.க.,வுக்குப் போறது உறுதியாயிருச்சாம்!''''இதைத்தான் நீ பாதி; நான் பாதின்னு சொல்றாங்களோ!'' என்று சிரித்த சித்ரா, ''என்கிட்ட ஒரு ஏடிஎம்கே மேட்டர் இருக்கு...நம்மூரு மாஜி, அவரோட அண்ணன், தம்பி, பினாமிகள், ஆபீசர்ஸ் வீடுகள்ல விஜிலென்ஸ் ரெய்டு நடந்தப்போ, நிறைய பேரு வந்து போராட்டம் நடத்துனாங்களே...


அப்போ அ.தி.மு.க., வக்கீல் அணியைச் சேர்ந்தவுங்களும் வந்து போராடுனாங்க. அன்னிக்கு வந்தவுங்களை லிஸ்ட் எடுத்து, 120 வக்கீல்களுக்கு தலைக்கு ஒரு 'விவோ' ஆண்ட்ராய்டு போனும், 15 ஆயிரம் ரூபாயும் கொடுக்கச் சொல்லி, வக்கீல் அணி நிர்வாகி ஒருத்தர்ட்ட 'மாஜி' கொடுத்திருக்காரு. ஆனா அவரு, பாதிப்பேருக்கு போனும், பாதிப்பேருக்கு பணமும் கொடுத்திருக்காரு. அதுவும் அவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவுங்களுக்கு மட்டும்தான் கிடைச்சிருக்கு. எதுவுமே கிடைக்காத வக்கீல்கள், மாஜியைப் பார்த்து கம்பிளைன்ட் பண்ணிருக்காங்களாம்!'' என்றாள்.

''மழை வர்றதுக்குள்ள போயிட்டு வந்துரலாம்!'' என்று வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement