dinamalar telegram
Advertisement

ஒரு உழைப்பு திலகத்திற்கு கிடைத்த நீண்ட ஒய்வு

Share


101 வயதிலும் எளியர்வகளுக்கான உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கவுசல்யா பாட்டி இன்று மண்ணிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் விடைபெற்றார்.
சென்னை நங்கநல்லுார் 45 வது தெரு முனையில் ‛பராசக்தி டிபன் சென்டர்' என்ற பெயரில் தள்ளு வண்டியில் காலை நேர உணவுக்கடை நடத்திவந்தார். இட்லி,பூரி,பொங்கல்,கிச்சடி,வடை உள்ளீட்ட இவரது உணவு பதார்த்தங்கள் விலை குறைவு ஆனால் தரம் நிறைவு.கடைக்கு வரும் வாடிக்கையாளர் பலரது பெயர் இவருக்கு அத்துப்படி, பெயரைச் சொல்லி,‛ நல்லா சாப்பிடுப்பா' என்பார் கூடவே ‛ஒரு இட்லி வச்சுக்க' ‛கொஞ்சம் கிச்சடி போட்டுக்க' ‛இன்னோரு வடை சாப்பிடு ஒண்ணும் பண்ணாது எல்லாமே வீட்டு சாப்பாடு' என்று சொல்லி சொல்லி பரிமாறுவார், இப்படி இவர் கொடுக்கும் எல்லாவற்றையும் சாப்பிட்டாலும் பில் என்னவோ முப்பது நாற்பது ரூபாயை தாண்டாது.இவரது மகள் கமலாவும் மகன் கிருஷ்ணமூர்த்தியும் கடையையும் வாடிக்கையாளர்களையும் பார்த்துக் கொண்டு பாட்டியை சும்மா உட்காரவைத்திருப்பர், ஆனால் பாட்டியால் ஐந்து நிமிடத்திற்கு மேல் உட்கார முடியாது எழுந்து வந்து வாடிக்கையாளர்களிடம் பேசியபடி கூட மாட வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்.
இறக்கும் வரை கண் பார்வை தெளிவாக இருந்தது கண்ணாடி போட்டது து கிடையாது காது நன்றாக கேட்டது ஞாபக சக்தி அபாரமாக இருந்தது, அதிகாலை 3 மணிக்கு எழுந்து காலை உணவுகளை தயார் செய்ய ஆரம்பித்தால் மூன்று மணி நேரத்தில் அனைத்தையும் தயார் செய்து மகன் மகளுடன் கடைக்கு வந்துவிடுவார்.காலை பத்து மணிக்குள் உணவுகள் தீர்ந்துவிடும் பிறகு கடையை மூடிவிட்டு கிளம்பிவிடுவார்.
வீட்டிற்கு போனதும் மகளும் மகனும் சிறிது ஒய்வு எடுப்பர் ஆனால் கவுசல்லா ஒய்வு எடுக்காமல் அவர்களுக்கு தேவையான மதிய உணவும் வத்தல் குழம்பும் தயார் செய்து இரண்டு அப்பளத்தையும் சுட்டு வைத்துவிடுவார்.பிறகு மறுநாளைக்கு உண்டான வேலைகளில் இறங்கிவிடுவார்.
மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்ட கவுசல்யா பாட்டி வீட்டில் பலரும் சமையல் கலையில் கொடிகட்டிப் பறந்தவர்களே அந்த பக்குவமும் கைநேர்தியும் கவுசல்யா பாட்டிக்கும் அவரது மகள் கமலாவிற்கும் எப்போதுமே உண்டு.சென்னைக்கு வந்த பிறகு இருவரும் சேர்ந்து ஆரம்பித்த கடைதான் இது.
பெரிதாக வருமானம் இல்லை என்றாலும் பலரை திருப்திப்படுத்தக்கூடிய தொழில் செய்கிறோம் என்ற மனதிருப்தியுடன் இருந்தார் கடந்த வருடம் இவரை சந்தித்த போது தனது கைவித்தை எல்லாம் காண்பித்து பராம்பரியமான இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் தன் ஆசை என்றார் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது.
இவரது நங்கநல்லுார் கடைக்கு விடுமுறையே கிடையாது கொரோனா காரணமாக ஒரு இருபது நாட்கள் கடை போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது கூட தன்னைப்பற்றி கவலைப்படாமல் வாடிக்கையாளர்கள் டிபன் சாப்பிட எங்கே போவார்கள் என்றுதான் கவலைப்பட்டார்.
நினைவு தெரிந்த நாள் முதல் உழைத்துக் கொண்டிருந்த கவுசல்யா பாட்டிக்கு உண்மையில் மரணம் நீண்ட ஒய்வு கொடுத்திருக்கிறது.-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (8)

 • Murugan - tokyo,ஜப்பான்

  RIP

 • Premanathan S - Cuddalore,இந்தியா

  அருமையான வாழ்வு. ஆண்டவன் பாதத்தில் இளைப்பாறட்டும். ஓம் நம சிவாய

 • Sethu Thangavelu - Chennai,இந்தியா

  ஆழ்ந்த இரங்கல்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  'ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்' என்கிறார் வள்ளுவர். பல்லாயிரவரின் பசியாற்றிய அந்த உயர்ந்த ஆத்மா இறைவனின் செல்ல மகளாக அவர் மடியில் இளைப்பாறட்டும் 🙏

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  கவுசல்யா பாட்டி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  திரு முருகராஜ் அவர்களின் கட்டுரைகள் மனதை வருடுவதுடன். நாம் வாழும் வாழ்க்கையில் செய்யும் நற்காரியங்களை தொடர்ந்து செய்ய தூண்டும். மலரின் வாசகர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர். நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீங்களும் பேனாவால் உழைத்து கொண்டே இருக்க இறைவனின் அனுகிரகங்கள் என்றும் கிடக்கட்டும். உங்களுக்காக வாசகர்களின் சார்பில் நான் ப்ரார்திக்கிறேன். எத்துணையோ பேர் வடை சுடும் பாட்டியாக பார்த்திருக்கிறார்கள். நீங்கள் தான் உழைப்பின் உன்னதத்தை உழைப்பே திருப்தி தரும் என்பதை பார்த்திருக்கிறீர்கள். உழைப்பால் திருப்தியுற்று இறைவனின் அழைப்பை ஏற்று கடைமை முடித்து வானுலகம் சென்றதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். தெருவோர வாழ்க்கையில் கூட கண்ணியத்தை கடைபிடிக்கும் நமது சமூகத்தை வெளிக்கொண்டு காண்பித்திருக்கிறீர்கள். தினமலரில் இந்த செய்தி வந்ததால் அந்த குடும்பம் மிகுந்த மனத்தெம்பும் உற்சாகமும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. சிறு சிறு நிகழ்வுகளையும் உங்கள் பேனா வழியாக பார்க்கும் பொது அது அருமையாக இருக்கிறது. வணக்கங்கள் பலப்பல

 • seenivasan - singapore,சிங்கப்பூர்

  இந்த நல்ல ஆன்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். "நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை - மூதுரை 10"

 • P. S. Ramamurthy - Chennai,இந்தியா

  மிக நல்ல தகவல். வாழ்க. உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement