dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: 'நீட், சமூக நீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும், அதிலிருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு விலக்கு பெற வேண்டும்' என்று அம்மாநில முதல்வருக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி.


'டவுட்' தனபாலு: காங்கிரஸ்காரர்களை நம்பி ஒரு காரியத்தை செய்ய முடியுமா... தமிழகத்தில் ஒரு மாதிரி, கேரளாவில் இன்னொரு மாதிரி கொள்கை கொண்டவர்கள் அவர்கள். அவர்களை நம்பி தேசிய அளவில் எந்த விவகாரத்திலும் இறங்க முடியாது. எனவே, மஹாராஷ்டிரா காங்., தலைவருக்கு என்ன நிர்பந்தமோ என்ற, 'டவுட்' உங்கள் அறிக்கையால் வருகிறது!


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன்:
'நீட்' ஓர் உயிர்க்கொல்லி தேர்வு என உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழு. உண்மைகளை வெளிக்கொணர்ந்து, சட்ட போராட்டத்திற்கான வழிமுறைகளையும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. எனவே, தமிழக அரசு தாமதம் செய்யாமல், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டங்களை உடனடியாக துவக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: நீட் வேண்டாம் என சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இன்னமும் என்ன சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. அரசியல்வாதிகளால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாததால், மாணவர்களை போராட அழைக்கிறீர்களோ என்ற டவுட்டும் சேர்ந்து கொள்கிறது!


தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி
: நகை தள்ளுபடி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. 'தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்தில் தெரிவித்தார். தற்போது, 'கூட்டுறவு வங்கியில் மட்டும்' என தெரிவித்துள்ளனர். எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: நகைக்கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில், 'முறையான நபர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது உறுதி என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆபத்பாந்தவனாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதால், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதில், இப்போதைக்கு யாருக்கும், 'டவுட்' இல்லை!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement