dinamalar telegram
Advertisement

'வீடியோ' பதிவு கிடைக்காத விரக்தியில் காங்.,

Share

'வீடியோ' பதிவு கிடைக்காத விரக்தியில் காங்.,நாயர் தந்த ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''சந்தடி சாக்குல கோர்த்து விட்டுட்டாருல்லா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''திருப்பூர் மாவட்டம் மூலனுார் பகுதியில ஒரு தோட்டத்துல ஆத்து மணலை பதுக்கி வித்துட்டு இருந்தாவ... அந்த பகுதி மக்கள், எஸ்.ஐ., ஒருத்தரிடம் விஷயத்தை சொல்லி, 'யாரிடம், எப்படி புகார் குடுக்கிறது'ன்னு 'ஐடியா' கேட்டி
ருக்காவ வே...

''அந்த எஸ்.ஐ.,யும், தலைமை செயலர், டி.ஜி.பி., - ஐ.ஜி., - டி.ஐ.ஜி., - எஸ்.பி.,ன்னு பலரது மொபைல் போன் நம்பர்களையும் குடுத்து, 'மூலனுார் போலீசார் லஞ்சம் வாங்கிட்டு, மணல் கடத்தலை கண்டுக்காம இருக்காங்க'ன்னு புகார்ல ஒரு வரி சேர்த்துடுங்கன்னு சொல்
லிட்டாரு வே...

''ஏன்னா, எஸ்.ஐ.,க்கும், அந்த ஸ்டேஷன் போலீசாருக்கும் ஏற்கனவே முட்டல், மோதல் இருக்கு... அதுக்காக, எஸ்.ஐ., ஒண்ணும் அரிச்சந்திரன் கிடையாது வே...

''சேவல் சூதாட்டம், கட்டப் பஞ்சாயத்துன்னு, 'மாமூல்' வாழ்க்கையில ஊறியவர் தான்... கடைசியில எஸ்.ஐ.,யின் சதித் திட்டம் எஸ்.பி., ஆபீசுக்கு தெரியவர, அவரை வேற ஊருக்கு துாக்கி அடிச்சுட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கோவிந்தராஜ் இப்படி உட்காருங்க...'' என, இடம் தந்த அன்வர்பாயே, ''மாதாந்திர மாமூல் வசூலிக்கிறாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார்.

''இதுவும் போலீஸ் தகவலா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''இல்லை... சேலம் மாவட்டம், சங்ககிரி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுல, சாலை இன்ஸ்பெக்டர்கள் நாலு பேர் இருக்காங்க... இவங்க 10 வருஷத்துக்கும் மேலா, இடமாறுதலே இல்லாம ஒரே இடத்துல இருக்காங்க பா...

''இதுல, சங்ககிரி- - பவானி பிரதான நெடுஞ்சாலை பணியில இருக்கிற இன்ஸ்பெக்டர், சாலையோர ஆக்கிரமிப்புல இருக்கிற கடைகள், ஓட்டல்கள்ல மாதாந்திர மாமூல் வசூலிச்சிட்டு இருக்காரு... 'இவர் மேல, பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்கணும்'னு, சாலை பணியாளர்கள் சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தேவராஜன் வீடு வரைக்கும் போவணும்...'' என்றபடியே அண்ணாச்சி புறப்பட, ''காங்கிரசார் புலம்பலை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சமீபத்துல முடிஞ்ச சட்டசபை கூட்டம் முழுதையும் 'வீடியோ'வுல பதிவு செய்தா... அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசிய வீடியோ பதிவுகளை, அவாளுக்கு தனித்தனியா, 'காப்பி' போட்டு குடுத்திருக்கா ஓய்...

''அவா, அவற்றை சில, 'யுடியூப்' சேனல்கள்ல ஒளிபரப்பி, தொகுதி மக்கள் மத்தியில தங்களை பிரபலப்படுத்திண்டா... அதே மாதிரி, தங்களது பேச்சு பதிவுகளையும் தாங்கன்னு, காங்., - எம்.எல்.ஏ.,க்கள்
கேட்டிருக்கா ஓய்...

''ஆனா, இதுவரைக்கும் யாருக்கும் வீடியோ பதிவுகளை தரலை... 'ஆளுங்கட்சி கூட்டணியில இருந்தும், இந்த சின்ன விஷயத்தை கூட நம்மால சாதிக்க முடியலையே'ன்னு காங்கிரசார் வருத்தப்படறா ஓய்...''
என முடித்தார் குப்பண்ணா.பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement