dinamalar telegram
Advertisement

மகாத்மாவின் மனதை மாற்றிய மதுரை சம்பவத்திற்கு வயது 100

Share


இந்த மாதம் சில முக்கிய சம்பவங்களைக் கொண்டுள்ளது

செப்டம்பர் 5ம் தேதி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,க்கு நுாற்றைம்பதாவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

செப்டம்பர் 11 ம் தேதி மகாகவி பாரதியார் நாற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

அடுத்து செப்டம்பர் 22 ம் தேதியான நாளை ஒரு முக்கிய நாளாகும்.

அன்றைய தினம்தான் மகாத்மா காந்தி மதுரையில் தனது முழு ஆடைக்கு விடை கொடுத்துவிட்டு அரையாடைக்கு மாறினார், அந்த தினத்திற்கு நாறு ஆண்டுகளாகிவிட்டது.

1919,1921,1927,1934,மற்றும் 1946 என்று காந்தி மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார்.

இதில் 1921 ம் வருடம் செப்டம்பர் மாதம் 21 ம்தேதி மதுரை வந்தவர் கதவிலக்கம் 251 மேலமாசி வீதியில் உள்ள தனது நண்பர் ராம்ஜி என்பவர் வீட்டின் மாடியில் தங்கியிருந்தார்

மதுரைக்கு ரயிலில் வரும்போது வழியெங்கும் அவர் வயல்வெளிகளில் பார்த்த விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களில் பார்த்த பாமரர்களின் நிலை அவரது மனதை பிசைந்தது பலரும் மேல்சட்டை இல்லாமல் இடுப்பில் ஒரு துண்டையோ வேட்டியையோதான் கட்டியிருந்தனர்.

இதை நினைத்து இரவு முழுவதும் வேதனைப்பட்டவர் இனி அந்த விவசாயிகள் மற்றும் பாமரர்களின் நிலைதான் தன் நிலையாக இருக்க வேண்டும் அவர்களின் ஆடைதான் தன் ஆடையாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தார்.

மறுநாள் (22/09/1921) காலை ஒரு நாவிதரை அழைத்தார் தனது தலையை மழுங்க சிரைத்துக் கொண்டார் குஜராத்தி பாணியிலான சட்டையையும் அதன் மேல் போட்டுக்கொள்ளும் அங்கவஸ்திரத்தையும் ஒரு சேர துாக்கிப்போட்டார்.

கட்டியிருந்த எட்டு முழ வேட்டியை இரண்டாக்கினார் அதில் ஒன்றை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டார்

இப்படி வேட்டி மட்டும் அணிந்து சட்டை அணியாத வெற்று உடம்புடன் வீட்டிற்கு வெளியே வந்த காந்தியைக் கண்ட மக்கள் ஆராவரித்தனர்,அன்றயை தினம் அவரது பயணத்திட்டப்படி ராமநாதபுரம் செல்ல வேண்டும் செல்லும் வழியில் மக்கள் விருப்பப்படி இப்போது அலங்கார் தியேட்டர் அமைந்துள்ள பகுதியில் உள்ள பொட்டல் என்று சொல்லப்படும் வெற்று மைதானத்தில் ஏறி பேசினார்.

அவர் அரை ஆடையுடன் ஏறிய முதல் மேடை அதுதான் இதன் காரணமாக அன்றைய அவரது தோற்றத்துடன் வைக்கப்பட்ட சிலையை இப்போதும் அங்கு பார்க்கலாம் மேலும் அந்த இடம் இன்று வரை ‛காந்தி பொட்டல்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரு முறை முடிவு எடுத்த பிறகு அதில் எப்போதும் தீர்க்கமாக இருப்பவர் காந்தி, இதன் காரணமாக லண்டன் சென்ற போதும் இந்த அரை ஆடை தோற்றத்துடன்தான் சென்றார் அங்குள்ளவர்கள் தாங்கமுடியாத குளிர் காரணமாக கனத்த ஆடைகளை கோட் சூட் என்ற பெயரில் அணிந்திருந்த போதும் காந்தி தனது அரை ஆடை தோற்றத்துடன்தான் இருந்தார்.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்கு வரும் விருந்தினர்கள் கோட் சூட்தான் அணிய வேண்டும் அப்போதுதான் அனுமதி என்ற விதி பல காலமாக இருந்துவந்தது காந்திக்காக அவர் அணிந்திருந்த அரை ஆடைக்காக முதல் முறையாக அந்த விதி தளர்த்தப்பட்டது.


யார் இந்த அரை நிர்வாண பக்கரி? என்றுதான் சர்ச்சில் அலட்சியமாக இவரை எடை போட்டார், ஆனால் அவரே பின்னர் என்னால் வெல்லமுடியாத மனிதர் இவர் மட்டுமே என்று திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டார்.

காந்தி என்றால் எல்லோரது மனதிலும் வரும் உருவம் இந்த அரை ஆடை அணிந்த உருவம்தான்.

இந்த உருவத்தை தந்த மதுரை மேலமாசிவீதி இல்லம் தனியார் வசம் இருந்தது பின்னர் காதிகிராப்ட் நிறுவனம் இந்த வீட்டை வாங்கி கிழே காதி கிராப்ட் பொருட்கள் விற்கும் கடையாகவும், காந்தி தங்கியிருந்த மாடியை காந்தியின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி கூடமாகவும் நடத்தி வருகின்றனர்,வாசலில் காந்தி அரை ஆடை மனிதராக மாறியது இங்குதான் என்று ஒரு போர்டு வைத்துள்ளனர்.

காந்திக்கு புது உருவம் கொடுத்த நாளுக்கு நுாறு வருடங்களாகிவிட்டது, இந்த செப்டம்பர் 22 ந்தேதி நாறாவது வருடமாகும்.

நம்மைப் பொறுத்தவரை நம்மைக் கடந்து போகும் தினங்களில் இதுவும் ஒரு தினமாக இருக்கப் போகிறதா? அல்லது காந்தி சட்டையை கழட்டியது போல அந்த நாளில் நமக்குள்ளிருக்கும் அகந்தையை ஆணவத்தை ஆடம்பரத்தை அடுத்தவர் மீதான பொறாமையை தேவையற்ற கோபத்தை என்ற வேண்டாத சட்டைகளை கழட்டிப்போடும் நாளாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

-எல்.முருகராஜ்

Share
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • KRISHNAN R - chennai,இந்தியா

    அரை ஆடை மனிதரின் முடிவு.. உலகை வியந்து பார்க்கும்படி செய்தது.. அன்று....இன்று. இந்தியாவின் நிலை?... தவறு செய்தவர்கள்..தண்டனை இல்லா.. மல்... வலம் வரும்.. காட்சிகள்.... தாம்

  • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

    இப்பல்லாம்... இந்தாள யார் மதிக்குறாங்க...? இவரை திட்டி, திட்டிதான் சமூக வலைதளங்களில் பதிவிடுறாங்க...? இவரது “அகிம்சை” கொள்கை... கிண்டலடிக்கப்படுகிறது... கேலி பேசப்படுகிறது... இல்லையென்போர் “பொய்” சொல்கின்றனர்... இவரைக் கொன்ற “கோட்சே” தியாகி ஆக்கப்படுகிறார்... இதுதான் எதார்த்தம்... நிஜம்....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement