dinamalar telegram
Advertisement

தடுப்பூசி கேட்டு 'மெசேஜ்'; எஸ்.ஐ., துாக்குறாரு 'லக்கேஜ்'

Share

சமூக வலைதளத்தில் மூழ்கியிருந்தாள் சித்ரா. அமைதியாக அறைக்குள் நுழைந்த மித்ரா, தோளில் தட்டி எழுப்பி, ''என்னக்கா! வெளிய போலாம்னு சொன்னீங்க... கிளம்பாம ட்விட்டர்ல ஆராய்ச்சி பண்ணீட்டு இருக்கீங்க?'' என்று கேட்டாள்.

''ஒண்ணுமில்ல...நம்ம ஊரு பெரியவர் ஒருத்தரு, வீட்டுக்கு வந்து தடுப்பூசி போடுறதுக்கு ரிஜிஸ்டர் பண்ணிருக்காரு. யாருமே வரலை. உடனே, அதைப்பத்தி ட்விட்டர்ல எழுதி, ஹெல்த் மினிஸ்டர், கலெக்டர் எல்லாருக்கும் மெசேஜ் போட்டுட்டாரு. அதுவும் மினிஸ்டர் மா.சு. கோயம்புத்துார் வந்த அன்னிக்கு கரெக்டா போட்ருக்காரு,''

''அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு?''

''மொத வேலையா ஓடிப்போய் அவருக்கு தடுப்பூசி போட்டுட்டு, 'அய்யா! இதையும் ட்விட்டர்ல போட்ருங்க'ன்னு கெஞ்சிட்டு வந்திருக்காங்க. அவரும் 'தடுப்பூசி போட்டாச்சு, எல்லாம் சிறப்பா செஞ்சாங்க'ன்னு மறுபடியும் ட்விட்டர்ல போட்ருக்காரு!''

''வெரிகுட்''

''எல்லா டிபார்ட்மென்ட்லயும் ஆளும்கட்சி தலையீடு அதிகமாயிருச்சுன்னு தகவல் வருதுக்கா...

டவுன்ஹால்ல நம்ம கோனியம்மன் கோவிலுக்கு எதிர்ல இருக்குற கார்ப்பரேஷன் பார்க்கிங் ஏரியாவுல, அரசாங்கத்துக்குச் சொந்தமான 13 சென்ட் இடத்தை, ஒரு பெரிய ஓட்டலுக்குப் பல வருஷம் குத்தகைக்கு விட்ருக்காங்க. ஆனா அவுங்க குத்தகைத் தொகையையும் கட்டலையாம். அந்த இடத்தை மீட்குறதுக்காக தாசில்தார் தலைமையில ரெவின்யூக்காரங்க போயிருக்காங்க. வேலியும் போட்ருக்காங்க. ஆனா திடீர்னு எங்க இருந்தோ உத்தரவு வந்ததும், அங்கயிருந்து கிளம்பீட்டாங்களாம்!'' என்றாள் மித்ரா.

''நம்மூர்ல அவ்ளோ பவர்புல்லா ஆளும்கட்சி ஆளுங்க யாருமில்லையே?''

''போன் வந்தது நம்மூர்ல இருந்து இல்லையாம்; சாத்துார் பேரைக் கொண்ட மீசைக்கார வி.ஐ.பி.,யோட பி.ஏ.தான் அங்க இருந்த ஆபீசருக்கு நேரா போன் பண்ணி, 'ஒண்ணும் பண்ண வேணாம்'னு சொல்லிருக்காரு. அவர் சொல்லியும் அந்த ஆபீசர் கேக்கலையாம். அதுக்கு அப்புறம்தான் மாவட்ட ஆபீசரே, நேரடியா அந்த ஆபீசருக்கு போன் பண்ணி, 'கிளம்பி வந்துருங்க'ன்னு சொல்லிருக்காரு. அப்புறம்தான் அந்த டீம், அரைகுறையா வேலியைப் போட்டுட்டு கிளம்பி வந்திருக்காங்க!''

''நம்ம மாவட்ட ஆபீசர் நேர்மையானவர்ன்னு சொல்றாங்களே!'' என்று விழி விரியக்கேட்டாள்சித்ரா.

''ஆமாக்கா...அவரு நேர்மையானவரா இருக்கலாம்; ஆனா ஆளும்கட்சியில இருந்து பிரஷர் வர்றப்ப என்ன பண்ணுவாரு... எல்லாருக்கும் 'சர்வைவல்'ன்னு ஒண்ணு இருக்கே!'' என்றாள் மித்ரா.

இருவரும் பேஸினோவில் வெளியில் கிளம்பினர். எதிரில் அடுத்தடுத்து போலீஸ் ஜீப்பும், மாநகராட்சி ஜீப்பும் கிராஸ் செய்ததும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள் சித்ரா.

''மாவட்டம் முழுக்க பல டிபார்ட்மென்ட்கள்ல, ஏகப்பட்ட அதிகாரிகளை மாத்தப்போறதா பேச்சிருக்கே!'' என்றாள் மித்ரா.

''ஆளும்கட்சியிலயும் முக்கியமான நாலு பேரைத் துாக்கப் போறதா வாட்ஸ்ஆப்கள்ல உடன் பிறப்புகள் உற்சாகமா சேதி பகிர்ந்துட்டு இருக்காங்க. எப்ப வேணும்னாலும் நம்மளத் துாக்கிருவாங்கன்னுதான், டாஸ்மாக், கார்ப்பரேஷன்னு வசூலை வேகமாக்கீட்டாங்களாம்!''

''டாஸ்மாக்ல ஆளும்கட்சிக்காரங்க வசூல் பண்றது ஒரு பக்கம்...இதுக்காகவே ஆளும்கட்சிக்கு சிலர் வந்திருக்குறது இன்னொரு பக்கம்...பீளமேட்டுல போன கவர்மென்ட் இருந்தப்போ, அ.தி.மு.க.,காரர் ஒருத்தரு மூணு, நாலு இடங்கள்ல பார் நடத்திட்டு இருந்தாரு.அவரோட 'பார்'கள்ல 24 X 7 சரக்கு விப்பாங்களாம். இப்பவும் அதே மாதிரி வியாபாரம் நடக்குது. அவரு இப்ப உடன்பிறப்பா மாறீட்டாரு. அதனால போலீசும் கரெக்டா மாமூலை வாங்கிட்டு கண்டுக்கிறதே கிடையாது...இந்த 'பார்'கள்ல இருந்து டோர் டெலிவரியும் தர்றாங்கங்கிறதுதான் ஹை லைட்!''

''இங்க இப்படின்னா, சூலுார்ல சில தாபா ஓட்டல்கள்ல சரக்கு வித்து காசு பாக்குறதுல ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அசத்தல் கூட்டணி போட்ருக்காங்க. அதுலயும் அங்க இருக்குற ஒரு தனியார் கல்லுாரிக்குப் பக்கத்துல, 24 மணி நேரமும் 'டபுள்ரேட்'டுல சரக்கு விக்குறாங்களாம். ஏகப்பட்ட காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் அங்கேயே சுத்திச்சுத்தி வர்றாங்களாம்!'' என்றாள் சித்ரா.
இருவரும் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பேக்கரிக்கு வெளியில் நின்றபடியே டீ குடித்தனர். அப்போது கிராஸ் செய்த அரசு டவுன்பஸ்சைப் பார்த்ததும் மித்ரா மீண்டும் ஆரம்பித்தாள்...

''அக்கா! டிஎன்எஸ்டிசியில ஆளும்கட்சி யூனியன் காரங்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில பெரிய போர் நடந்துட்டு இருக்காம். ஒண்டிப்புதுார் 1 கிளையில செட் அவுட் லேட்டா பண்ணீட்டாங்கன்னு ஒரு டிரைவர், கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க. அதை எதிர்த்து ஆளும்கட்சி யூனியன்ல ஸ்டிரைக் பண்ணப் பார்த்திருக்காங்க. ஆனா கட்சித்தலைமை கண்டிக்கும்னு கைவிட்டுட்டாங்க. ஆனா மேல இருந்து பிரஷர் வந்து அந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப வாங்கீட்டாங்க.கொங்கு பெல்ட் அ.தி.மு.க., கோட்டைங்கிறதால, இப்போ நடந்த சஸ்பெண்ட்ன்னால, வர்ற தேர்தல்ல தி.மு.க.,வுக்கு பாதிப்பாகும்னு இங்க இருக்குற பெரிய ஆபீசர்களைத் துாக்குறதுக்கு, யூனியன்காரங்க காய் நகர்த்துறாங்களாம்!''

''மித்து! நேத்து ஏர்போர்ட் போயிருந்தேன்...அங்க பார்த்த ஒரு காட்சி கொடுமை!'' என்றாள் சித்ரா.

''அப்பிடி என்னக்கா பார்த்தீங்க?''

''கொரோனாவுக்கு அப்புறம் கோயம்புத்துார் ஏர்போர்ட்ல லக்கேஜ், ட்ராலி தள்ளுறதுக்கு வச்சிருந்த வேலையாட்களை நிறுத்திட்டாங்க. இப்போ அந்த வேலைகளை 'செக்யூரிட்டி பிராஞ்ச்' கட்டுப்பாட்டுல எஸ்.ஐ., அந்தஸ்துல இருக்குற ரெண்டு பேர் செஞ்சுட்டு இருக்காங்க... இவங்க 'சபாரி' சூட் போட்டுக்கிட்டு பயணிகளின் உடைமைகளை தூக்கிட்டு இருக்காங்க பா!''

''அடப்பாவமே!''

''அதை விடப் பாவம் என்னன்னா...இப்படி யூனிபார்முல லக்கேஜ் தூக்குறதுக்கு பயணிகள் யாராவது 50, 100ன்னு கொடுக்குறதையும் அவுங்க கூசாம வாங்கிக்குறதுதான்!'' என்று சிரித்த சித்ரா, வண்டியைக் கிளப்பினாள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement