dinamalar telegram
Advertisement

ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு: மாநில அரசுகளுக்கு நிம்மதி

Share

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 2017 ஜூலையில் அறிமுகமான போது, பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் போன்றவை அந்த வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை.

ஏனெனில், இந்தப் பொருட்கள் வாயிலான வரி வருவாயை மத்திய - மாநில அரசுகள் பெருமளவு நம்பியிருந்தன. கடந்த ஏப்ரலுக்கு பின், கச்சா எண்ணெய் விலை பெருமளவு அதிகரித்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால் அவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வலுத்தது. அதற்கு ஏற்றாற்போல, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தொட்டதால், சாதாரண பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் சமீப நாட்களாக உயர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 45வது கூட்டம், உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 17ம் தேதி நடந்தது. 2019 டிசம்பருக்கு பின் முதல்முறையாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேரடியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டதும் அதற்கு முக்கிய காரணம். அத்துடன் வேறு பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி.,யை மாற்றி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புற்றுநோய்க்கான மருந்து உட்பட சில உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கை அறிவித்தார். அதே நேரத்தில், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் தற்போதைக்கு பெட்ரோல், டீசலை கொண்டு வர வாய்ப்பில்லை என்றார். மேலும், ஜி.எஸ்.டி., வரிமுறைக்கு மாநிலங்கள் மாறியதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, 2022 ஜூன் 30ம் தேதி வரை இழப்பீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும். கூடுதல் மாதங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என, பல மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையையும், மத்திய - அமைச்சர் நிராகரித்து விட்டார். இது, பல மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால், அவற்றின் அடிப்படை விலை மீது அதிகபட்சம் 28 சதவீதம் மட்டுமே வரி விதிக்க முடியும். கலால் வரி, மதிப்பு கூட்டு வரி என மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் எல்லாம் ரத்தாகி விடும். பெட்ரோல் விலை லிட்டர் 50 முதல்60 ரூபாய் அளவுக்கு குறைந்து விடும். இதனால், மத்திய - மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், அவற்றுக்கு மாற தயக்கம் காட்டப்பட்டுள்ளது. பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளதால், தற்போது இந்த எரிபொருட்கள் வாயிலாக கிடைக்கும் கணிசமான வருவாயை இழக்க விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வருவாயாக, மத்திய - மாநில அரசுகள் ஆண்டுதோறும் 5 லட்சம் கோடி ரூபாயை பெற்று வருகின்றன. ஜி.எஸ்.டி., வரம்பிற்கு இவை மாறினால், மாநிலங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், கலால் வரி மற்றும் பத்திரப்பதிவு வாயிலான வருவாய் தவிர, மாநிலங்களுக்கு பெருமளவிலான வரி வருவாய் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வாயிலாகவே கிடைக்கிறது. அதனால் தான் பல மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர ஆதரவு தெரிவிக்கவில்லை.

குறிப்பாக, பா.ஜ., ஆளும் மாநிலங்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டிருந்தால், தொழில் துறையினரும், பொதுமக்களும், வாடகை வாகனங்கள் வைத்திருப்போரும் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பர். ஆனால், மத்திய - மாநில அரசுகளுக்கு பெரும் சுமை உருவாகி இருக்கும். ஏழைகளின் நல்வாழ்வுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளையும், மானியங்களின் அளவையும் குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கும்.

இருந்தாலும், பொதுமக்கள், தொழில் நடத்துவோரின் சிரமங்களை குறைத்திடவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தடுத்திடவும், சுங்கக் கட்டணத்தை குறைப்பது உட்பட வேறு சில நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இல்லையெனில், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரியை சிறிதளவு குறைத்து அவற்றின் விலையை குறைக்க முற்பட வேண்டும். அப்படிச் செய்தால் மக்கள் நிம்மதி அடைவர். அதை மத்திய - மாநில அரசுகள் செய்யும் என நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • canchi ravi - Hyderabad,இந்தியா

    ஏதாவது செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முயலுங்கள்.

  • ஷண்முகநாதன் -

    அரசின் வருமானத்திற்காக மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா...? பெட்ரோல், டீசல் வரியை GST க்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும். மக்கள் நல திட்டங்களை காரணம் சொல்லி அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஏமாற்ற கூடாது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement