சமீபத்தில் டில்லியில் ஏழு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் அரசியல் பயணம், உலகில் நாம் இதுவரை கண்ட எந்த அரசியல் தலைவரின் பயணம் போன்றதும் இல்லை.குஜராத் முதல்வராக அக்டோபர் 2001ல் ஆமதாபாத்தில் தொடங்கிய இந்த பயணம், ஜனநாயக வரலாற்றில் இணை இல்லாத நீண்ட தொடர்ச்சியாக செல்கிறது. இருபது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் மற்றும் நாட்டின் நிர்வாகத் தலைவராக இருந்து இன்னும் தனது பணியை அறத்தின் வழியில் தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
எல்லோரும் எதிர்கொள்ள அச்சப்படும் தங்கள் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்போ அல்லது மக்கள் ஆட்சியின் மேல் அடையும் சோர்வையோ ஒவ்வொரு தேர்தலிலும் திறமையினால் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார். முக்கியமாக நம் நாட்டைப் பற்றிய கூறுரைகளை நம் குடிமக்கள் மனதிலும் சர்வதேச அரங்கிலும் முழுதும் மாற்றியிருப்பது பிரதமர் மோடியின் சாதனைகள் இன்றி வேறென்ன! பல சிக்கல்கள் கொண்ட நம்மை போன்ற ஜனநாயகத்தில், எண்ணற்ற கலாச்சாரங்கள், பிராந்தியம் சார்ந்த அரசியல் நுணுக்கங்கள், இரும்பு கை கொண்டு தங்கள் பிராந்தியங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்கள் என்று பல சவால்கள் இருக்கின்றன.
இவை இருந்தாலும், அனைத்தையும் தாண்டி மோடி, மக்கள் மனதில் செழித்து வளர்வது மட்டுமல்ல, உண்மையில் ஒவ்வொரு நாளும் மக்களால் அதிகமாக நேசிக்கப்படுகிறார். இது சாத்தியமானது எப்படி? இது வெறும் வாய்ப்பா, எதிர்ப்போரின் பலவீனமா, பேச்சு திறமையா அல்லது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இவர்இருப்பதினாலா?
உன்னை உணர்ந்தால்
நம் பிரதமரின் வாழ்க்கையை உற்றுநோக்கும் எவரும் மேற்கூறிய எவையும் இவர் வெற்றிக்கு காரணமல்ல என்பதை புரிந்து கொள்வர். அன்றாட வாழ்வே போராட்டமாக இருந்த ஒரு எளிய பெற்றோருக்கு 1950ல் குஜராத்தில் மகனாக பிறந்த இவர், ஆர்.எஸ்.எஸ்.,சில் 8 வயதில் பால் ஸ்வயம்சேவக்காக சேர்ந்தார். அந்த ஷாக்காக்களில்தான் அவர் தன் வாழ்க்கையின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் கண்டுபிடிப்பதற்கான பயணத்தைத் தொடங்கினார்.
மோடியின் சாதி வழக்கப்படி, குடும்பத்தினர் அவருடைய 18வது வயதில் அவரது திருமணத்தை ஏற்பாடு செய்தனர். தன் பெற்றோரின் மீது பெருமதிப்பு இருந்தும், திருமணத்தின் மீது நாட்டமில்லாத அவர் தன்னை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்தியா முழுதும் பயணிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். பல ரிஷிகளின், முனிவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த மேற்கு வங்கம், அசாம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு பயணித்து, 20வது வயதில் வீடு திரும்பினார்.
பெற்றோருடன் ஒரு இரவு தங்கிய பிறகு, வாழ்க்கையைத் தொடர மீண்டும் ஆமதாபாத் புறப்பட்டார். வாழ்க்கை அவருக்கு வேறு பல விஷயங்களை வைத்திருந்தது. கடந்த, 1971ல் பாகிஸ்தானுடன் கடுமையான போர் மூண்ட நாட்களில் அவர் ஆர்.எஸ்.எஸ்.,சில் ஒரு பிரச்சாரக்காக தன் வாழ்வை துவங்கினார். அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் ஈவிரக்கமற்று வேட்டையாடப்படுவதைக் கண்டார். அடுத்த 14 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் மிக வேகமாக உயர்ந்து, பா.ஜ.,வுக்கு அனுப்பப்பட்டார்.
உள்ளிருந்து மாற்றம்
கடந்த 1985ல் பா.ஜ.,வுக்குள் அவர் நுழைந்தபோது, குஜராத் மாநிலம் காங்கிரஸ் பாணியில் பிரித்தாளும் சாதி அரசியலில் மூழ்கி இருந்தது. அந்த அரசியலை சுத்தம் செய்வதற்கான கடுமையான செயல்முறைகளை கட்சியின் அடிமட்டத்திலிருந்து தொடங்கினார். கருத்தியல் கூர்மையுடன் பா.ஜ., ஒரு கட்சியாக மாற்றப்பட்டு, நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெறத் தொடங்கியது. மோடி 1987 முதல் கட்சியின் அமைப்பு செயலாளராக பணியாற்றினார்.குஜராத்தில் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ராம் ரத யாத்திரை மற்றும் 1991- - 92ல் எம்.எம்.ஜோஷியின் ஏக்தா யாத்திரை ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்து, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணம் செய்து, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.
கடந்த 1995ல் குஜராத் சட்டசபை தேர்தலின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்த அவர், நவம்பர் 1995ல் டில்லிக்கு கட்சியின் தேசிய செயலராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டார். அடுத்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களின் பொறுப்பாளராக இருந்து, மே 1998ல் தேசிய அமைப்பு செயலராக பதவி உயர்வு பெற்று, அக்டோபர் 2001ல் குஜராத்முதல்வரானார்.
சேவையே வாழ்க்கை
குஜராத் முதல்வராக அவர் என்னவெல்லாம் சாதித்தார் என்பதும், இப்போது நாட்டின் பிரதமராக என்ன சாதித்து கொண்டிருக்கிறார் என்பதும், வேறொரு நாள் பேச வேண்டிய ஒரு தலைப்பு.கடந்த 2001ல் குஜராத் முதல்வரின் நாற்காலியில் அமர்ந்த மோடி என்ற மனிதர் சிறப்புரிமைகளோ, தனிச் சலுகைகளோ உடைய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல, அந்நாற்காலியை தன் உரிமை என்று எடுத்து கொண்டவரும் அல்ல. விதி அவரை தொடர்ச்சியான பல தடைகள், தடங்கல்கள் மற்றும் இன்னல்கள் மூலம் அப்பதவியை நோக்கி அழைத்து வந்தது. மன உறுதியும், நாட்டின் மேல் கொண்ட பற்றும், முக்கியமாக தன் லட்சியத்தை அறிந்த தன்மையும் அவரை ஒரு மனிதராக வடிவமைத்தது.
இன்னொருபுறம், துறவறம் மேற்கொள்ள விரும்பிய மோடியை ராம கிருஷ்ணா மிஷன் பல முறை தடுத்ததுடன், சுவாமி ஆத்மஸ்தானந்தாஜி 'விதி செல்லும் பாதை வேறு, அதை நீங்கள் தேடி உணர வேண்டும்' என்று அவருக்கு தெளிவாக எடுத்துரைத்தார். மோடியின் உள்ளத்தை உணர்த்தும் சரிதையை எழுதிய ஆன்டி மரினோவுக்கு அளித்த நேர்காணலிலும், பம்பாயின் மனிதர்கள் வலைப்பதிவிற்கும், நடிகர் அக்ஷய் குமாருடனும் அவர் செய்த கலந்துரையாடல்களிலும் அவர் தன்னை பற்றி அறிந்து கொண்டுள்ளதைக் காணலாம்.இந்த மனிதகுலத்திற்கும், இந்த நாட்டிற்கும் சேவை செய்யவே அவர் பிறந்துள்ளார். கே.அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவர்
வேடிக்கை என்னவென்றால் வேண்டுமென்றே இன்று சொரியானின் பிறந்தநாளை காட்டும் டி வி யில் மோடி பிறந்த நாள் குறித்து ஒரு வார்த்தை இல்லை???நேற்று ராமசாமி படையாச்சியார் என்று காட்டிய தி வியில் எம் எஸ் சுந்தராம்பாள் பிறந்த நாள் என்று ஒரு வார்த்தையில்லை???பண மீடியா இருக்கும் வரை நாட்டில் உருப்படியாக செய்தி வருவதில்லை ஏதோ கிளு கிளுப்பு வார்த்தைகள் தான் வருகின்றன செய்தியின் வடிவில்