dinamalar telegram
Advertisement

துயரங்கள் நம்மைக் கவர்வது ஏன்?

Share

"சுலபமாக வெற்றிபெற்ற காதல்களை யாரும் கவனிப்பது இல்லை. காதல் கைகூடாமல் பிரியும் காதலர்களே மனதில் நிலைத்து நிற்கின்றனர். ஆனந்தமாக இருப்பவர்களை விட அவஸ்தை படுபவர்களே அதிகம் பேசப்படுகிறார்கள். துயரங்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவது எதனால்? சத்குருவின் இந்த உரை, நமது மனநிலையின் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறது.

சத்குரு:
"நம் வளர்ப்புச் சூழல் அப்படி இருக்கிறது. மக்களுடைய கவனம் எதிலாவது போகவேண்டும் என்றால், அங்கே பெரிய நாடகம் ஏதாவது அரங்கேற வேண்டி இருக்கிறது.

இப்படித்தான் ஒருநாள் சங்கரன்பிள்ளை, மருந்துக்கடைக்குப் போனார். 'சாப்பிட்டால், நிமிடத்தில் உயிர் போகிறமாதிரி சயனைட் வேண்டும்' என்றார். அவர் முகத்தைப் பார்த்தால் வீட்டில் ஏதோ சண்டை போட்டுவிட்டு வந்ததுபோல இருந்தது.

'அப்படியெல்லாம் இங்கே விற்பதில்லை' என்றார் கடைக்காரர்.

சங்கரன்பிள்ளை விடுவதாக இல்லை. கடைக்காரர் மறுக்க மறுக்க... மறுபடியும் மறுபடியும் கெஞ்சினார்.

ஒரு கட்டத்தில் கடைக்காரர், 'எதற்காக சயனைடு கேட்கிறாய்?' என்று கேட்டார்.

'என் மனைவிக்குக் கொடுக்கத் தேவைப்படுகிறது'.

கடைக்காரர் அதிர்ந்தார். 'அப்படியானால் நிச்சயமாக நான் கொடுக்க முடியாது'.

சங்கரன்பிள்ளை பாக்கெட்டில் இருந்து தன் மனைவியின் புகைப்படத்தை எடுத்து நீட்டினார்.

கடைக்காரர் அதைப் பார்த்துவிட்டு, 'இந்த அம்மாளா? அடடா! உன்னிடம் பிரிஸ்கிரிப்ஷன் இருக்கிறது என்று முதலிலேயே சொல்லி இருக்கலாமே' என்றார்.
சங்கரன்பிள்ளையின் நிலையைப் பார்த்துச் சிரித்து ரசிக்கிறோம். 'யாரோ இரண்டு பேர் அன்பாக இருந்தார்கள், ஆனந்தமாக வாழ்ந்தார்கள்' என்று கேள்விப்பட்டால், அதில் என்ன கவர்ச்சி இருக்கிறது? அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், அது சப்பென்று இருக்கிறது. அவர்கள் படாத பாடுபட்டு அங்கே இங்கே அலைக்கழிக்கப்பட்டு, பந்தாடப்பட்டு உயிர்போகிற நிலைமைக்கு வந்தால், அதை ரசித்துப் பார்க்கத் தயாராகிறீர்கள். இது காதல் பற்றி மட்டும் அல்ல... அன்பு பற்றி மட்டும் அல்ல... எதுவாக இருந்தாலும், நமக்குக் கொஞ்சம் நாடகம் வேண்டியிருக்கிறது.
தோட்டத்தில் நேற்று இல்லாத புல் இன்று முளைத்திருக்கிறது. ஆனால் அதைக் கவனிக்க ஆள் இல்லை. புல்லுக்கு நடுவே சின்னச் சின்னதாக மிக அழகான பூக்கள் மலர்ந்து இருக்கின்றன. அது கவனத்தில் பதிவது இல்லை. அதே தோட்டத்தில் ஒரு சின்னஞ்சிறு பாம்பு நெளிந்து ஓடட்டுமே, எத்தனை ஆர்ப்பாட்டங்கள் களைகட்டுகின்றன? இத்தனைக்கும் பாம்பை அத்தனை பேரும் ஒருசேரப் பார்க்கவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஒருவர் பார்த்தால் போதும் அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள மக்கள் எப்படி ஆர்வமாகக் கூடிவிடுகிறார்கள்? பாம்பு சிறியதாக இருந்தாலும் அது குறித்து பேசிப்பேசி அதை எவ்வளவு பிரமாண்டமாக்கி விடுகிறார்கள்?

வாழ்க்கையும் இப்படித்தான். உங்களுக்குப் பரபரப்பு தேவைப்படுகிறது. அதேசமயம், உங்கள் வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்க உங்களுக்குத் தைரியம் இல்லை. எந்தச் சவாலும் இல்லாமல், நீங்கள் எதிர்பார்க்கிறபடி, ஒரே கோட்டில் வாழ்க்கை சமநிலையாக நடக்கவேண்டும். அதில் உயிரே இல்லை என்றாலும் பரவாயில்லை.

உங்களைப் புரட்டிப்போடும் நாடகங்களில் ஒரு பாத்திரமாக இருக்க நீங்கள் விரும்புவது இல்லை. வேறு யார் வாழ்க்கையிலோ ஏதாவது காரசாரமாக நடந்தால், அதைத் தள்ளி நின்று பார்ப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. இதுதானே உங்கள் நிலைப்பாடு?

போதிதர்மர் தன் நான்கு சீடர்களை அழைத்தார். 'இதுவரை என்னிடம் கற்றதன் சாரம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்பவரே எனது வாரிசாக முடியும்' என்றார்.

'மனம், உடல் இவற்றைத் தாண்டிச் செல்வது பற்றி அறியவைப்பதே உங்கள் நோக்கம்' என்றார் முதல் சீடர்.

'நான் என்பது பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என்பதே உங்கள் போதனைகளின் சாரம்' என்றார் இரண்டாவது சீடர்.

'நான் கற்றதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது' என்றார் மூன்றாமவர்.

நான்காவது சீடர் எதுவும் சொல்லாமல், போதிதர்மரின் பாதங்களில் வீழ்ந்தார். அவர் கண்களில் இருந்து நீர் பெருகி ஓடியது.

போதிதர்மர் அவரை எழுப்பி அணைத்தார். 'முதல் மூவர் சொன்னவற்றிலும் உண்மை இருக்கிறது. ஆனால் நீயே என் வாரிசு' என்றார்.

விவரிக்க இயலாது என்று விவரிக்கப் பார்ப்பதைக்கூட அவர் ஏற்கத் தயாராக இல்லை. அவ்வளவு நிசப்தமாக அற்புதங்கள் நிகழ்கின்றன.

உங்களால் கற்பனை செய்ய இயலாத பிரமாண்டமாக ஆகாயம் விரிந்திருக்கிறது. அதில் பல அண்டங்கள் எண்ணுதற்கு அரிய விதத்தில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடக்கும் எதையும் கவனித்து பிரமிக்க உங்களுக்கு நேரம் இல்லை. யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் மட்டும் ஆர்வத்துடன் திரும்பிப் பார்ப்பீர்கள்.

அதற்காக, இன்னொருத்தருக்குப் பாதிப்பு வந்தால்தான் நமக்குச் சந்தோஷமாக இருக்கிறது என்ற வக்கிரமான புத்தி நமக்கு இருக்கிறது என்று அர்த்தமல்ல. தள்ளி நின்று நாடகத்தைப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் வாழ்க்கையின் மிக முக்கியமான, மிக ரம்மியமான, மிக அற்புதமான தன்மைகள் எல்லாம் ஆர்ப்பாட்டம் இல்லாமல்தான் நடக்கின்றன.

மண்ணில் விழுந்த ஒரு விதை செடியாக முளைக்கிறது. அது ஒன்றும் சாமானியமான விஷயம் அல்ல. அது நடக்கவில்லை என்றால், நமக்குச் சாப்பாடு கிடையாது. ஆனால் செடி உயிர்க்கும் நேரத்தில் உங்கள் கவனத்தைக் கவர்வதற்காக அது 'டட்ட... டட்ட' என்று சப்தித்துக்கொண்டு இருப்பது இல்லை. ஒரு பூ அற்புதமாக மலர்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அது சத்தம் எதுவும் போடுவது இல்லை. பின்னணியில் இசை எதுவும் வாசிக்கப்படுவது இல்லை. அப்புறம் எப்படி அதைக் கவனிப்பீர்கள்?

ஞானோதயம் மலர்வதும் அப்படித்தான். இந்த பிரம்மாண்டமான உலகத்தையே கைப்பற்றி ஒரு சிறு மனிதன் தனக்குள் ஓர் அங்கமாகச் சேர்த்துக்கொள்கிறான். எந்தவிதச் சத்தமும் இல்லாமல், அது சும்மா நடக்கிறது. அதனால் யாருக்கும் அதன் மகத்துவம் புரிவது இல்லை.

நாடகத்தனம் இல்லாமல், சத்தம் இல்லாமல் உங்களைச் சுற்றி நடக்கும் அற்புதங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். அப்படி இல்லாமல், எல்லாவற்றிலும் ஏதோ பரபரப்பான நாடகம் ஒன்று நடக்க வேண்டும் என்றால், உங்களை இருட்டு அரங்கத்தில்தான் உட்கார்த்திவைக்க வேண்டும்".

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement