dinamalar telegram
Advertisement

சேமிப்பின் முக்கியத்தை புரிய வைக்கலாம்!

Share

சேமிப்பு மற்றும் முதலீடுகளில் நடுத்தர வயது பெண்கள் முதன்முறையாக ஈடுபடும்போது சந்திக்கக்கூடிய சவால், அதற்கான தீர்வுகளை கூறும், நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்: 40 வயதில் குடும்பம், குழந்தைகள் சார்ந்து நிறைய செலவுகள் இருக்கும் என்பதால், ஓரளவுக்கே சேமிக்க முடியும்.


எனவே, குறைவான பணமானாலும், முதலீடு செய்ய தயங்க வேண்டாம்.சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களில், ஏதாவது தப்பாகி விடுமோ என்ற பயமிருந்தால், கணவர் அல்லது உடன் பிறந்தவர்கள், தேவைப்பட்டால் நிபுணர்களிடம், இதுதொடர்பான தகவல்களைக் கேட்ட பின், முடிவு எடுக்கலாம்.முதலீட்டுக்கான தொகையை எக்காரணம் முன்னிட்டும், மற்ற தேவைகளுக்கு செலவழிக்கக் கூடாது.


நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பித்த புதிதில், சரிவுகள் ஏற்படலாம். நீண்டகால முதலீட்டில் அது சரியாகிவிடும் என்பதால், பதற்றம் வேண்டாம். சேமிப்பையும், முதலீட்டையும் தொடர்ந்து, 10 ஆண்டு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் இருந்தால், தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச அளவாக, 1 கிராமில் ஆரம்பித்து, 5, 10, 50 மற்றும் 100 கிராம் வரையிலான, தங்கக் கடன் பத்திரங்கள் உள்ளன. தபால் அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் வாங்கிக் கொள்ளலாம்.ஓர் ஆண்டுக்கு எத்தனை முறை, எந்தெந்த தேதிகளில், தங்கக் கடன் பத்திரம் வெளியிடப்படும் என்ற தகவல், தபால் அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ஒட்டப்பட்டிருக்கும்; அந்த நேரங்களில் தங்கக் கடன் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.தங்கக் கடன் பத்திரத்தில் எட்டு ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். முதல் ஐந்து ஆண்டுகள், 'லாக் இன்' காலம். அதன்பின், தேவைப்படும்போது பத்திரங்களை விற்று, அன்றைய தங்க விலையை வாங்கிக் கொள்ளலாம்.


செய்கூலி, சேதாரம் கொடுத்து தங்க நகைகளை வாங்கி சேமிப்பதை விட, நாணயங்களாக வாங்கி நகையாக மாற்றும் போது லாபமாக இருக்கும். மேலும், ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் கிடைக்கும்.மியூச்சுவல் பண்டை பொறுத்தவரை, சீரான முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் பணம் போடலாம்; 1,000 ரூபாய் கூட போதும்.பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை பரிசாக கொடுத்து, சிறு வயதில் இருந்தே சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை அவர்களுக்கும் புரிய வைக்கலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement