தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரவி, நாகாலாந்து பிரிவினைவாதிகளுடன் நடத்திய பேச்சு தோல்வி அடைந்து விட்டதால், தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதைத் தவிர அவரின் நியமனத்தில் விசேஷம் எதுவும் இல்லை.
'டவுட்' தனபாலு: அவர் பெயரை அறிவித்த உடனேயே, 'அவர் கூடாது; உடனே முடிவை வாபஸ் பெறுங்கள்' என சில கட்சிகளின் தலைவர்கள் அலறுகின்றனர். பா.ஜ.,வினர் அவரை, பாட்ஷா படத்தின் ரஜினி 'ரேஞ்சுக்கு' உயர்த்தி பேசுகின்றனர். ஆனால் நீங்கள் வேறு விதமாக கூறுகிறீர்கள். எது தான் உண்மையோ என்பதே, இப்போதைய, 'டவுட்!'
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: மது பாட்டில்களில், 'குடி குடியைக் கெடுக்கும்;- குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இருந்தன. அவை நீக்கப்பட்டு, 'மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்; மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்' என்ற வாசகங்கள் புதிதாக உள்ளன. இந்த வாசகங்கள், மதுவின் தீமையை உரக்க சொல்வதாக இல்லை; எனவே பழைய வாசகங்களே தொடர வேண்டும்.
'டவுட்' தனபாலு: பா.ம.க.,வுக்கு மது என்ற வார்த்தையே பிடிக்காதே... எனினும், மது பாட்டில்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் மாறியதை எப்படி கண்டுபிடித்ததோ என்ற, 'டவுட்' 'குடி'மகன்களுக்கு வந்திருக்கும். இதெல்லாம் பெரிய தலைவர்களின் செயலர்கள், 'அட்மின்'கள் எழுதும் அறிக்கை என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக சட்டசபையில் தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம்; விவசாயிகள் நலன் காக்கும் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்; தற்போது, 'நீட்' தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதால், சிறுபான்மையினருக்கோ, விவசாயிகளுக்கோ, மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.
'டவுட்' தனபாலு: 'நீட்' தேர்வு முடிந்த மறுநாள் ரொம்ப பக்குவமாக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால், தமிழகத்தில் நீட் வராது என்ற எண்ணத்தை மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். அந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை என நீங்கள் கூறுவதால், தமிழகத்தில் நீட் தொடருமோ என்ற, 'டவுட்' மாணவர்களுக்கு வந்திருக்கும். எனினும், அது தான் உண்மை என்பதை போகப் போக அறிந்தும் கொள்வர்!
காங்கிரஸும் திருட்டு கும்பலுடன் சேர்ந்து ரொம்பவேமா கீழிறங்கி விட்டது என்பதற்கு தமிழ்நாட்டு காங்கிரஸ் குட்டி தலைவர்கள் அவர் அவர்களுக்கு தோன்றியதை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.கவர்நேர் எப்போதும் மத்திய அரசு தான் நியமனம் செய்யும் இது காங்கிரஸும் நடைமுறையில் தான் செய்து கொண்டிருந்திருக்ல்கிறது. காக்க பிடிப்பதற்காகவும் நன்றி விசுவாசத்தை காட்டவும் நன்றி உள்ள ஜென்மங்கள் வால் ஆட்டிக்கொண்டிருக்கின்றன.