dinamalar telegram
Advertisement

கோவா பீச்சில் கல்யாணம் 'தாட்பூட்' : வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை தனி 'ரேட்!'

Share

ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலுக்குச் சென்றிருந்த சித்ரா, மித்ரா, சுவாமி தரிசனத்துக்கு பின், நகர்வலம் புறப்பட்டனர்.

கலெக்டர் முகாம் அலுவலகத்தை கடந்ததும், ''இலக்கை தாண்டி கொரோனா தடுப்பூசி போட்டதால, மாவட்ட நிர்வாகமும், ஹெல்த் டிபார்ட்மென்ட்டும் பூரிப்புல இருக்குதாமே,'' என, கேட்டாள் மித்ரா.

''ஆமாப்பா, மக்கள் மத்தியில நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. ஆனா, கிராம மக்களிடம் இன்னும் தடுப்பூசி போயி சேரலையாம். இரவு, 7:00 மணி வரை முகாம் நடக்கும்னு அறிவிப்பு வெளியிட்டிருந்தாங்க. ஏகப்பட்ட இடங்கள்ல, மத்தியானமே மருந்து காலியாயிடுச்சாம். ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துல திரும்பி போயிட்டாங்களாம்,''

''கார்ப்பரேஷன் லிமிட்டுல, கிட்டத்தட்ட, 80 ஆயிரம் பேர் 'செகண்ட்டோஸ்' போடணுமாம்; மெகா முகாம் நடத்தியும், 28,201 பேரே, 'செகண்ட் டோஸ்' ஊசி போட வந்தாங்களாம். மறுபடியும் மெகா முகாம் நடத்துறதுக்கு பிளான் போடுறாங்களாம்,''

''ஆனா, ரூரல் ஏரியாவுல இருக்குற ஹெல்த் டிபார்ட்மென்ட் ஊழியர்களுக்கு, மெகா கேம்ப்ன்னு சொன்னாலே உதறல் எடுக்குதாம்,''

''இருக்காதா பின்னே! சிறப்பு முகாம்னா, கூடுதலா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யணும். சில முகாம்களுக்கு, 50 ஊசியே கொடுத்திருக்காங்க. மக்களுக்கு பதில் சொல்ல முடியாம, செவிலியர்கள் திணறிட்டாங்களாம்,''

''சூலுார் ஏரியாவுல ஆளுங்கட்சிக்காரங்களும் ரொம்பவே 'அப்செட்' ஆகிட்டாங்களாம். தடுப்பூசி தீர்ந்து போச்சுன்னு சொன்னதும், காத்திருந்த ஜனங்க, உடன்பிறப்புகளை உலுக்கி எடுத்துட்டாங்களாம்,''

''முன்னாள் அமைச்சர் வேலுமணி, கொடியேற்று விழாவுல உற்சாகமாக கலந்துக்கிட்டாராமே,''

''ஆமா, மித்து! எம்.ஜி.ஆர்., மார்க்கெட் முன்னால ஆட்டோ தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்துச்சு. சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டு, கட்சிக்கொடி ஏத்திட்டு, போயிருக்காரு. சென்னையில இருந்து கோவைக்கு வந்தாலே, எப்பவும்போலவே, ஏதாச்சும் விழாக்கள்ல கலந்துக்கிறாராம்,'' என்றபடி, செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள பேக்கரி முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

காபி, சால்ட் பிஸ்கட் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான, கல்லுாரி நிர்வாகி, தனது மகனின் திருமணத்தை, கோவா பீச்சுல கமுக்கமா நடத்தி முடிச்சிட்டாராமே,'' என, கொக்கியை போட்டாள்.

''ஆமாப்பா, உண்மைதான்! நானும் விசாரிச்சேன். உறவினர்களை மட்டும் அழைச்சிட்டுப் போயி, சிம்பிளா நடத்துனதா சொல்றாங்க. கூடாரத்தை பார்த்தா, நுாத்துக்கும் மேற்பட்டவங்க கலந்திருப்பாங்க போலிருக்கு. நம்மூர்ல மூணு நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப் போறதா சொல்றாங்க. கல்யாணத்துக்கு யாரெல்லாம் போனாங்கன்னு உளவுத்துறைக்காரங்க விசாரிக்கிறாங்களாம்,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.

சால்ட் பிஸ்கட் சாப்பிட்ட மித்ரா, ''கடந்த ஆட்சி காலத்துல, இலைக்கட்சி பிரமுகர்கள் பின்புலத்துடன் இடத்தகராறு, சொத்துப்பிரச்னையில தலையிட்டு, கல்லா கட்டுனவங்க யார் யாருன்னு, 'லிஸ்ட்' எடுக்குறாங்களாமே,''

''யெஸ் மித்து, கரெக்ட்டுதான்! சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சதும் ஏகப்பட்ட அதிரடி நடக்கப் போகுதாம். கைது நடவடிக்கை இருக்கும்னு பேசிக்கிறதுனால, இலைக்கட்சி பிரமுகர்களும், அவர்களது ஆதரவுல ஆட்டம் போட்டவங்களும் அடங்கியிருக்காங்களாம்,''

''தொண்டாமுத்துார் தொகுதிக்கு தேர்தல் அலுவலரா இருந்த, தெற்கு ஆர்.டி.ஓ., செந்தில்அரசனை துாக்கிட்டு, காத்திருப்போர் பட்டியல்ல வச்சிருக்காங்க. அதே மாதிரி, மாநில நெடுஞ்சாலைத்துறையில மாவட்ட பொறுப்புல இருந்த அதிகாரியை சென்னைக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சு, 'டம்மி'யான போஸ்ட்டிங்ல ஒக்கார வச்சிருக்காங்களாம்,''

''அக்கா, இதுல, நேர்மையான அதிகாரிகளும் சிக்கி, அவஸ்தைப்படுறாங்களாமே,''

''அப்படியா,'' என, வாயைப்பிளந்தாள் சித்ரா.

''கவர்மென்ட் ஆஸ்பத்திரியில மருந்து வினியோகிக்கிற செக்சன்ல புதுசா ஒருத்தரை நியமிச்சிருக்காங்க. மருந்து, மாத்திரைகளை திருட்டுத்தனமா விக்கிறதை கண்டுபிடிச்சிருக்காரு. யாரெல்லாம் தப்பு பண்றாங்கன்னு கண்டுபிடிச்சு, களையெடுக்கற வேலையை ஆரம்பிச்சிருக்காரு. உடனே, அவரை மாத்துறதுக்கு காய் நகர்த்த ஆரம்பிச்சிருக்காங்க. பீளமேட்டுல இருக்கற மெடிக்கல் காலேஜ்க்கு மாத்துறதுக்கு அழுத்தம் கொடுக்கறாங்களாம்,''

''மித்து, நம்மூர்ல நேர்மையா இருக்கறதுதான் ரொம்ப கஷ்டம்,'' என்ற சித்ரா, ''சைபர் கிரைம் பிரிவுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி, ஒரு உயரதிகாரி வந்தாரு. சைபர் கிரைம் மோசடி சம்பந்தமா, ஜனங்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினாரு; 'ஆக்டிவ்'வா செயல்பட்டாரு. அவரையும் திடுதிப்புன்னு தென்மாவட்டத்துக்கு மாத்திட்டாங்களாம். ஏன் மாத்துனாங்க; என்ன காரணம்னு தெரியாம, சக போலீஸ்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

ரவுண்டானாவை சுற்றிச் சென்றபோது, ரேஷன் பொருட்களுடன் ஒரு லாரி கடந்து சென்றது. அதை கவனித்த மித்ரா, ''ஸ்மார்ட் கார்டு, பயோமெட்ரிக் சிஸ்டம் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தல் ஜாஸ்தியாகிடுச்சாமே,'' என, கேட்டாள்.

''ஆமாப்பா, அன்னுார் தாலுகாவுல ரேஷன் அரிசி கடத்துறது யாரு, அதை வாங்குறது யாருன்னு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரங்களுக்கு நல்லாவே தெரியுமாம். ஆனா, வசூலில் மட்டுமே குறியா இருக்காங்களாம். இதே மாதிரி, ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு கடையில இருந்தும் ஒரு தொகை கொடுக்கணும்னு கூட்டுறவு துறை உயரதிகாரிகளும் நெருக்கடி கொடுக்கறதுனால, ரேஷன் கடைக்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்,''

''இதே மாதிரி, குளங்கள்ல இருந்து மணல் கடத்துறதும் அதிகமாயிடுச்சாம். வி.ஏ.ஓ.,ல இருந்து தாசில்தார் வரைக்கும், ஒவ்வொருத்தருக்கும் ஒரு 'ரேட்' பிக்ஸ் பண்ணி, மாசம் தவறாம செட்டில் பண்ணிடுறாங்களாம். அதனால, மண் கடத்துற கும்பலை வருவாய்த்துறையினர் கண்டுக்கறதில்லையாம்,''

''டாஸ்மாக் குடோன்ல இருந்தே மதுபாட்டில்களை அமுக்கிடுறாங்களாமே,'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள் மித்ரா.

''அதுவா, டிரான்ஸ்போர்ட் பிரிவுகாரங்க மதுபாட்டில்களை பார்சல் செய்றபோது, பெட்டிக்கு ஒரு பாட்டிலை எடுத்திடுறாங்களாம். ஒவ்வொரு நாளும், நுாத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை அமுக்குறாங்களாம். பீளமேடு பாலத்துக்கு பக்கத்துல உள்ள கடையில கொடுத்து விக்கிறதுக்கு ஏற்பாடு செய்றாங்களாம். இந்த வழியில மட்டும் பல லட்சம் சம்பாதிக்கிறதா, கடைநிலை ஊழியர்கள் சொல்றாங்க,'' என்றபடி, காந்திபுரம் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

''போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ்காரங்க ரொம்பவே மெனக்கெடுறாங்களாமே,''

''ஆமா, மித்து! போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார், 'டிராபிக் ஜாம்' ஆகுற இடத்துக்கு நேர்ல போயி, ஆய்வு செய்றாரு. போக்குவரத்து மாற்றம் செய்றது எப்படின்னு விவாதிச்சு, உடனே அமல்படுத்துறாரு; தேவையான போலீஸ்காரங்களை நியமிக்கிறாரு,''

''அதுக்குப்பிறகு, நெரிசல் குறைஞ்சிருக்கான்னு, காலையிலும் மாலையிலும் திடீர் திடீர்ன்னு விசிட் அடிக்கிறாரு. போலீஸ்காரங்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்துறாங்களா; 'ஸ்மார்ட் போன்' பார்த்திட்டு இருக்காங்களான்னு கண்காணிக்கிறாரு. துணை கமிஷனர் எப்ப வேணும்னாலும் வருவாருன்னு, வெள்ளைக்காரன் மாதிரி போலீஸ்காரங்க வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்; அவிநாசி ரோட்டுல, 'டிராபிக் ஜாம்' ஆகுறது குறைஞ்சிடுச்சாம்,''

''இதே மாதிரி, ஆத்துப்பாலம் ஏரியாவுக்கும் வந்தா, நல்லா இருக்கும்,''

''சொல்லிட்டா போச்சு,'' என்ற சித்ரா, நஞ்சப்பா ரோடு ரவுண்டனாவை கடந்தாள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement