dinamalar telegram
Advertisement

புதிய கவர்னரை காங்., எதிர்ப்பதன் பின்னணி!

Share

புதிய கவர்னரை காங்., எதிர்ப்பதன் பின்னணி!''சத்தமில்லாம நழுவிட்டாங்க பா...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் அன்வர்பாய்.

''யாரு, எங்கவே நழுவிட்டா...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''திருப்பூர்ல, உதயநிதி ரசிகர் மன்றம் சார்புல, சமீபத்துல கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்துச்சு... இதுல, போலீஸ் கமிஷனர் வனிதா உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துக்கிறதா 'போஸ்டர்கள்' அடிச்சிருந்தாங்க பா...

''அதே நேரம், பா.ஜ., சார்புல, 'விநாயர் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கிற போலீசார், இந்த மாரத்தானுக்கு மட்டும் எப்படி அனுமதி தரலாம்'னு பிரச்னையை கிளப்பிட்டாங்க...

''இதனால, உஷாரான கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், மாரத்தான் போட்டிக்கு போறதை தவிர்த்துட்டாங்க... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சில உள்ளூர் பிரமுகர்களை வச்சு நிகழ்ச்சியை நடத்தி முடிச்சாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''கேட்டது கிடைக்கலைன்னா, காரியம் ஆகாது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்த அரசு அலுவலகத்தைச் சொல்றீங்க...'' என, 'பட்'டெனக் கேட்டார் அந்தோணிசாமி.

''கற்பூர புத்திங்காணும் உமக்கு...'' என பாராட்டிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சென்னை, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துல ரெண்டு பேர் இருக்கா... இவா ரெண்டு பேருமே, எந்த விண்ணப்பத்துலயும், 'வெயிட்' இல்லாம கையெழுத்து போடவே மாட்டா ஓய்...

''லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், 'பர்மிட்' சம்பந்தப்பட்ட 'பைல்' கள் வந்தா, அவா கேக்கறதை பேரம் கீரம் பேசாம சத்தமில்லாம குடுத்துடணும்... இல்லேன்னா, பைல்ல ஏடாகூடமா ஏதாவது எழுதிடுவாளாம்... இதனால, இவா ரெண்டு பேரையும் பார்த்தாலே, பொதுமக்கள் அலறி அடிச்சுண்டு ஓடறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''செந்திலும், ஆறுமுகமும் இவ்வளவு அவசரமா எங்கவே போறாவ...'' என, தெருவைப் பார்த்து முணுமுணுத்த அண்ணாச்சி, ''அலறல் அறிக்கைக்கு பலமான பின்னணி இருக்குல்லா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.

''யார் அறிக்கையைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''தமிழக புதிய கவர்னரா ஆர்.என்.ரவியை நியமிச்சிருக்காங்கல்லா... ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசு பணியில இருந்தப்ப ரொம்பவே கறார் அதிகாரியா இருந்திருக்காரு வே...

''காங்கிரஸ் ஆட்சியில, உள்துறை அமைச்சரா இருந்த நம்ம ஊர் சிதம்பரத்துக்கும், ரவிக்கும் சில விவகாரங்கள்ல மோதல் ஏற்பட்டிருக்கு... அமைச்சருக்கு வளைஞ்சு குடுக்காம, ரவி விறைப்பா இருந்திருக்காரு வே...

''அதனால, சிதம்பரம் சொல்லித்தான், அவரது சிஷ்யரான அழகிரி, புதிய கவர்னருக்கு எதிரா அறிக்கை விட்டிருக்காரு...

''அதே நேரத்துல, 'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி'ங்கிற கதையா, 'இவர் ஏன் தேவையில்லாம கவர்னர் நியமனத்துல தலையிடுதாரு'ன்னு ஆளுங்கட்சியினர் அழகிரி மேல அதிருப்தியில இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.மேலும் சிலர்பெஞ்சில் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இனி தெருவில் நடந்தால் கூட லஞ்சம் கொடுத்துதான் நடக்க வேண்டுமென்று வந்தால் கூட வியப்பில்லை

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    அதிகாரிகள் வராங்களோ இல்லியோ, மாரத்தான் போட்டியை நடத்தி முடிச்சாங்களா இல்லியா ? அப்போ அந்த மாரத்தான் போட்டிக்கு அனுமதி கொடுத்தவங்க யாரு ? எப்படி குடுத்தாங்க ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement