15ஆயிரத்து 632 அடி உயரத்தில் உள்ள உலகின் உயரமான பனிப்பாறையாக கருதப்படும் சியாச்சின் மலை உச்சிக்கு பல்வேறு குறைபாடுகள் உடைய எட்டு பேர் கொண்ட இந்திய குழு சென்று சாதனை படைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையின் மீதுள்ளது சியாச்சின் பனிமலை பகுதி. ஆண்டு முழுவதும் பனிகட்டிகளால் நிறைந்து காணப்படும், சாகச பயணத்தை விரும்பும் குழுவினர் அரசு அனுமதி பெற்று சென்று வருவர்.ஆனால் மாற்றுத்திறனாளிகள் என்று கருதப்படும் உடல் ஊனமுற்றவர்கள் யாரும் ஒரு குழுவாக இங்கு சென்றது இல்லை.
காரணம் திடீரென ஏற்படும் பள்ளங்கள்,உருகி ஒடும் ஆறு,பனிப்பொழிவு,பனிச்சரிவு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் நல்ல உடல் திடகாத்திரமுள் ளவர்கள் அதிலும் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.இந்த நிலையில் ராணுவத்தினரின் துணையுடன் இந்தப்பகுதிக்கு செல்ல பார்வை குறைபாடு மற்றும் கை ஊனமுற்றவர்கள் குழு விண்ணப்பித்தது, அரசும் அனுமதித்தது.இருபது பேர் தேர்வு செய்யப்பட்டு ஆறுமாதமாக கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது இந்த பயிற்சியின் முடிவில் எட்டு பேர் மட்டுமே தேறினர்.
‛ஆபரேசன் ப்ளூ ப்ரீடம்' என்ற பெயரிடப்பட்ட இந்த குழு கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று மலையேற ஆரம்பித்தனர், சிறிது சிறிதாக தங்கள் இலக்கை நோக்கி முன்னேறியவர்களுக்கு ராணுவ வீரர்கள் மிகவும் உதவினர்.
கடைசியாக இந்தக்குழுவினர் அனைவரும் வெற்றிகரமாக தங்கள் இலக்கை அடைந்தனர்.இலக்கை அடைந்ததும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
உலகிலேயே ஊனமுற்றவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இங்கே சென்றிருப்பது உலக சாதனையாக கருதப்படுகிறது.உடல் ஊனமுற்றவர்களால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தவே தாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டதாக இந்த அணியின் தலைவர் ஜேக்கப் உயரத்தில் இருந்து உரக்கச் சொல்லியுள்ளார்,உண்மைதானே.
-எல்.முருகராஜ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!