dinamalar telegram
Advertisement

பணத்தின் அருமையை உணர்ந்தேன்!

Share

பின்னணி பாடகர் வேல்முருகன்:விருத்தாசலம் அருகே, முதனை கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். என்.எல்.சி-.,யில் வேலை பார்த்தார் அப்பா. அவரை நம்பியில்லாமல், வயக்காட்டு வேலைக்கு செல்வார் அம்மா. அந்த எண்ணம் எனக்கும் ஏற்பட்டு, பள்ளி வார விடுமுறையில் எங்களது மற்றும் அக்கம் பக்கத்து வீட்டினரின் ஆடு, மாடுகளை மேய்க்க செல்வேன்.ஒரு ஆட்டுக்கு 4 அணாவோ, 10 பைசாவோ கொடுப்பர். அதுதான் என் முதல் சம்பாத்தியம்.

கோடை விடுமுறையில் அம்மாவுடன் விவசாய வேலைகளுக்கு செல்வேன். கோவையில் ஐ.டி.ஐ., படிக்கும்போதும், அங்குள்ள கம்பெனிகளில் பகுதி நேர வேலைக்கு சென்று, அந்த பணத்தை படிப்புக்கும், வீட்டு தேவைக்குமான பொருட்கள் வாங்கவும் பயன்படுத்துவேன். ஐ.டி.ஐ., முடித்து விருத்தாசலத்தில் பிளஸ் 1 படிக்கும்போது, சைக்கிள் டிரைவராக ஒருவரிடம் வேலை பார்த்தேன். அவர் கூப்பிடும் இடத்துக்கெல்லாம் சைக்கிள் மிதித்து சென்றால், ஒரு நாளைக்கு 5 ரூபாய் தருவார். ஒரு நாள் அவர், பணம் தர மறந்து விட, அன்றிரவு கையில் காசின்றி பட்டினியாக இருந்த போது தான், பணத்தின் அருமையை முழுமையாக உணர்ந்தேன்.

மறுநாள் காலையில் ஒரு இடத்தில் உட்கார்ந்து, எனக்கு பிடித்த பாடல்களை பாடிக் கொண்டிருந்தேன். 'நீ ரொம்ப நல்லா பாடுறே'ன்னு சொல்லி 100 ரூபாய் கொடுத்தார் ஒருவர். இதற்கிடையில் அப்பாவும், அம்மாவும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். சென்னை அடையாறில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லுாரியில் சேர்ந்து குரலிசை படித்தபடியே, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

முதலில், ஒரு பத்திரிகை அலுவலகத்திலும், அடுத்து, துார்தர்ஷனில் மாதம் 800 ரூபாய் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. இசைக்கல்லுாரி மாணவன் என்ற அடையாளத்துடன், இசைக் குழு ஒன்றில் சேர்ந்து இரவு நேர கச்சேரிகளில் பாட ஆரம்பித்தேன்.

இசைக் கல்லுாரியில் பரதநாட்டியம் படித்த கலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 2007-ல் விஜய் 'டிவி'- நிகழ்ச்சியில் பங்கேற்று பாடினேன். அந்த பாடலை தற்செயலாக கேட்ட இயக்குனர் சசிகுமார், சுப்பிரமணியபுரம் படத்தில், 'மதுரை குலுங்க' பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார். அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு வர ஆரம்பித்தது.

எதுவுமே இன்றி சென்னை வந்த எனக்கு, இன்று சொந்த வீடு, பி.எம்.டபிள்யூ., கார் இருக்கிறது. இந்த நிலைக்கு காரணம், நான் சம்பாதித்தது மட்டுமில்லை. முறையாக சேமித்ததும் தான்.வாழ்க்கையில் பணம் ரொம்ப முக்கியம். அதற்காக பணத்தின்பின்னால் ஓடக் கூடாது; பணம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    "நான் சம்பாதித்தது மட்டுமில்லை, முறையாக சேமித்ததும் தான்".வாழ்க்கையில் முன்னேறக் காரணம் என்று சேமிப்பின் முக்கியத்துவத்தை மிக அருமையாகக் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் வளர வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement