dinamalar telegram
Advertisement

கற்பனைக்கேற்ப வருமானம் ஈட்டலாம்!

Share

பொம்மை அலங்காரம் மற்றும் 'ஹோம் மேட்' சாக்லேட் தயாரித்து வரும், மதுரை, மேலுாரைச் சேர்ந்த பிரேமா பாலசந்தர்: மதுரையைச் சேர்ந்த நான் பி.எஸ்சி., படித்துள்ளேன். என்னுடைய சிறு வயதிலேயே அப்பா இறந்து விட, அம்மா தான் என்னையும், அக்காவையும் வளர்த்தார்.'ஜுவல் மேக்கிங்' பயிற்சி முடித்தேன். 2017ல் அம்மாவுக்கு இதய பிரச்னை காரணமாக, இரவு பகலாக கவனித்துக் கொண்டேன்.அப்போது, எனக்கிருந்த மன அழுத்தத்தை போக்க, 'சோஷியல் மீடியா'வில், பொம்மை அலங்காரம் செய்யும் 'வீடியோ'வை பார்த்து கற்றுக் கொண்டேன்.என் கணவர், வீடியோ எடிட்டராக உள்ளார். குடும்ப வருமானத்திற்காக, நான் செய்து கொண்டிருந்த பொம்மை அலங்காரத்தை இன்னும், 'கிரியேட்டிவ்' ஆக செய்ய முடிவெடுத்தேன்.நான்கு ஆண்டுகளுக்குமுன், அக்காவுக்கு குழந்தை பிறந்திருந்த சமயத்தில், சென்னைக்குப் போன போது துணியால் விதவிதமான பொம்மைகள் செய்வதை விளையாட்டாக கற்றுக் கொண்டேன். அந்த அனுபவத்தைப்பயன்படுத்தி விதவிதமான பொம்மை அலங்காரங்களை செய்தேன். பொம்மை அலங்காரத் துக்கான சிலிகான் பொம்மைகளை, மதுரையிலேயே வாங்கிக் கொள்கிறேன். உதாரணமாக, சிலிகான்பிளேன் பொம்மை, அலங்காரத்துக்கு தேவையான கற்கள் எல்லாம் சேர்த்து 50 ரூபாய்க்கு வாங்கியதை, 250 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறேன். நம் கற்பனை திறனுக்கேற்ப கூடுதல் வருமானத்தை பெறலாம். பொம்மைகளை அலங்காரம் செய்து இந்தியா மற்றும் அமெரிக்காவிலும்கூட விற்று வருகிறேன். சிவன் - பார்வதி, கிருஷ்ணன் - ராதா எனக் குறிப்பிட்டு, 'ஆர்டர்' கொடுக்கின்றனர். 4.5 அங்குலம் முதல், 2.5 அடி உயரம்வரையுள்ள பொம்மைகளை அலங்காரம் செய்து விற்கிறேன். முதன் முதலில் ஐதராபாதிலிருந்து 4 அங்குலம்அளவிலான 12 பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்தார் ஒருவர்; மொத்தமாக 6,000 ரூபாய் கிடைத்தது. இதே போல, வளைகாப்புக்கு வருவோருக்கு பரிசாக கொடுக்க, அமெரிக்காவிலிருந்து 20 'செட்' கிருஷ்ணர் பொம்மை கேட்டனர். 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்' என, சமூக வலைதளங்கள் வாயிலாக நிறைய ஆர்டர் கிடைக்கிறது. நவராத்திரி சமயங்களில் அதிகளவில் ஆர்டர் வரும்.பொம்மை அலங்காரம்செய்யும் 40 பேர் இணைந்து, பெங்களூரில் நடந்த கண்காட்சியில் 3,000 பொம்மைகளைக் காட்சிக்கு வைத்தோம். நான் காட்சிக்கு வைத்திருந்த பொம்மை அலங்காரத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு பலரும்என்னிடம் கேட்டனர். இந்த கண்காட்சி நிகழ்வு, 'கின்னஸ் ரெக்கார்டில்' பதிவானது.பொம்மை அலங்காரம் செய்வதில் செலவுகள் எல்லாம் போக, மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இதுதவிர, 'ஹோம் மேட் சாக்லேட்' தயாரிப்பு வாயிலாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருகிறது.நமக்குள் இருக்கும் திறன்களை கண்டுபிடித்து, சரியான மார்க்கெட்டிங் உத்திகளை கையாண்டால் சுலபமாக தொழிலில் ஜெயிக்கலாம்.தொடர்புக்கு: 78689 63077

வாரத்தில் மூன்று நாள் கீரை சாப்பிடலாம்!கூந்தல் பிரச்னைகளிலிருந்து விடுபட எளிய வழிகளை கூறும், சென்னையை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி: ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றவர் பயன்படுத்தும்போது பொடுகு பரவும். எனவே, தனி சீப்பை பயன்படுத்துவது நல்லது.
மரச்சீப்பு பயன்படுத்தினால் தலையில் இருக்கும் எண்ணெய் பசை சீராக பரவும்; வேர்க்கால்கள் உறுதியடையும்; முடி உதிர்வும் கட்டுக்குள் வரும்.ஷாம்பூ குளியலுக்கு முன், 'ஆயில் மசாஜ்' செய்வது அவசியம். பாதாம் எண்ணெய், நெல்லிக்காய் சாறு, கறிவேப்பிலை சாறு ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து சூடு
படுத்தவும். கை பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் முடி அடர்த்தியாக வளரும்.

தலைக்கு குளிக்க சீயக்காய் அல்லது கெமிக்கல் இல்லாத ஷாம்பூ பயன்படுத்தலாம். பூந்திக்கொட்டை- - 3, சீயக்காய் -- 2 துண்டு, செம்பருத்திப் பூக்கள் -- 2, வெந்தயம் -- ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் எல்லாவற்றையும் கசக்கி, தண்ணீரை மட்டும் வடித்து ஷாம்பூக்குப் பதிலாக பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தேய்த்து மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால், வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வு நின்றுவிடும்.இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, மிளகுத்துாள் -- அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழச் சாறு -- அரை டீஸ்பூன், தயிர் -- ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, வாரம் ஒரு முறை கூந்தலில் தடவி குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.கற்றாழையை இரண்டாக கீறி, அதிலிருக்கும் கொழகொழப்பான திரவம் வெளியேறும் வரை நன்றாக கழுவவும். அதன் பின் கற்றாழையின் உள், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வைத்து மூடவும்.


இரண்டு நாள்கள் கழித்து அந்த வெந்தயத்தை, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால், கூந்தல் பளபளப்பாகும்.தலைக்கு குளித்தவுடன் வெகு நேரம் கூந்தலில் டவலை கட்டி வைத்திருந்தால், முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி முடி உதிர்வு ஏற்படும். புரதம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம். வாரம் மூன்று முறையாவது உணவில் கீரை சேர்த்துக் கொள்வது அவசியம்.பராமரிப்பின்மை தவிர, ஹார்மோன் பிரச்னை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களாலும் முடி உதிரலாம். ஒரு மாதத்துக்கும் மேலாக முடி உதிர்தல் தொடர்ந்தால், மருத்துவரைச் சந்தித்து தீர்வு காண்பது நல்லது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement