dinamalar telegram
Advertisement

'மட்டன்' விருந்துடன் 'கட்டிங்' கறக்கும் அதிகாரி!

Share

'மட்டன்' விருந்துடன் 'கட்டிங்' கறக்கும் அதிகாரி!



''ஆய்வுக் கூட்டம், குறைதீர் கூட்டம் மாதிரி ஆகிடுச்சு பா...'' என்றபடியே, நாயர் கடை பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''திருப்பூர் மாவட்டத்துல, திருப்பூர் லோக்சபா தொகுதி மட்டுமில்லாம, ஈரோடு, கோவை, பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளும் வருது பா...

''மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்தணும்னு, திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயனும், கோவை மார்க்சிஸ்ட் எம்.பி., நடராஜனும் கலெக்டருக்கு மனு கொடுத்துட்டே இருந்தாங்க... போன ஆட்சியில யாரும் கண்டுக்கல பா...

''ஆட்சி மாறிய நிலையில, திருப்பூரைச் சேர்ந்த செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனை அழைச்சு, சமீபத்துல கூட்டத்தை நடத்துனாங்க பா... அப்ப, 'தொகுதியில எங்களை அதிகாரிகள் மதிக்கிறதே இல்லை... எந்த துறையில, என்ன பணி நடக்குதுன்னே தெரியல... மத்திய அரசு திட்டப் பணிகளை கூட எங்களிடம் சொல்ல மாட்டேங்கிறாங்க'ன்னு எம்.பி.,க்கள் புலம்பி தள்ளியிருக்காங்க...

''உடனே, 'இனிமே அரசு துறைகள்ல எந்த பணிகள் நடந்தாலும், எம்.பி.,க்களுக்கு பட்டியல் குடுத்துடணும்'னு அமைச்சர் உத்தரவு போட்டுட்டு போயிருக்காரு பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''நிர்வாக நலன்னு சொல்லி 50 லட்சம் ரூபாயை காலி பண்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தமிழக வேளாண் துறையில, விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறைன்னு ஒண்ணு இருக்கு... இதன் தலைமையிடம் 40 வருஷமா கோவையில இருக்குதுங்க...

''நிர்வாக நலன் கருதி இதை சென்னைக்கு மாத்தப் போறதா, அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம், சமீபத்துல சட்டசபையில அறிவிச்சாரு... இதுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கிஇருக்காருங்க...

''யாருமே கேட்காம, ஒரு அலுவலகத்தை 400 கி.மீ., தள்ளி மாத்த என்ன அவசியம்னு வேளாண் துறையில முணுமுணுப்பு கிளம்பிடுச்சுங்க... 'அமைச்சர் பொறுப்பு ஏற்றதும், அந்த துறையின் முக்கிய அதிகாரி, அவரை நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லாததும் கூட, இந்த மாற்றத்துக்கு காரணமா இருக்கலாம்'னு சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''கிடா விருந்தோட, மாமூலையும் வாங்கிண்டு வந்துடறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்டம் மணப்பாறை வருவாய் துறை அதிகாரி ஒருத்தர், 'சார்ஜ்' எடுத்ததுல இருந்து மணல் கடத்தல் லாரிகளை பிடிக்கறதே குறைஞ்சுடுத்து... மணல் கடத்தல் கும்பலிடம் 'டீலிங்' பேசறதுக்கே அதிகாரி, தனித்தனி போன்களை வச்சுருக்கார் ஓய்...

''மணல் கடத்தல் புள்ளி ஒருத்தருக்கு தொப்பம்பட்டியில பண்ணை வீடு இருக்கு... அங்க அடிக்கடி கிடா விருந்து நடக்கும்... இதுல, மணல் கடத்தற எல்லாரும் பங்கேற்பா...

''இதுக்கு போற அதிகாரி, மூக்கு பிடிக்க வெட்டிட்டு, அப்படியே மணல் மாமூலையும் வசூல் பண்ணிண்டு வந்துடறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சுதந்திர போராட்டத்துல ஈடுபட்ட பஞ்சாப் சிங்கம்னு ஒருத்தரை சொல்லுவாங்களே... அவர் பேரு என்னங்க...'' என அந்தோணிசாமி கேட்க,

''லாலா லஜபதிராய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement