dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடப்பது அம்பலமாகி உள்ளது. அதுவும், தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்கள் 1 கி.மீ.,க்குள் நாற்புறமும் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே இந்த திருட்டு நடந்துள்ளது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே!


'டவுட்' தனபாலு: இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது... கடந்த ஆட்சியில் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., கூறிய முறைகேடுகள், செயல்பாடுகள் அனைத்தையும், இப்போது ஆட்சியில் உள்ள தி.மு.க.,வினர் செய்கின்றனர் என்கின்றனர் நடுநிலையாளர்கள். எனவே, எந்த ஆட்சி மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறப் போவதில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!


பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை:
கரூரில், விநாயகர் சிலையை உடைத்து காவல் துறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. காவல் துறையின் கண்ணியம் காற்றில் பறந்து விட்டது. அனைத்து மதங்களையும் மாண்புடன் மதிக்கும் பா.ஜ.,வில் உள்ளது மதச்சார்பின்மை. ஒரு சாராரை வாழ்த்தும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்துக்களை தாழ்த்துவதா மதச்சார்பின்மை; இதுவா மத நல்லிணக்கம்?


'டவுட்' தனபாலு: இதுபோல ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்; அதை வைத்து கொஞ்ச நாளைக்கு அரசியல் செய்யலாம் என்பதற்காகத் தானோ, தமிழக அரசு தடை விதித்த பின்பும், விநாயகரை வைத்து, பா.ஜ., அரசியல் செய்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. இப்படித் தான் கடந்த ஆட்சியின் போது தி.மு.க., செய்து இப்போது ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த, 'லாஜிக்'கை நீங்கள் அறிந்து விட்டீர்களோ என்ற, 'டவுட்'டும் உள்ளது!


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்க பொதுச் செயலர் ஷாஜஹான்:
போக்குவரத்து துறையில் பணியாற்றும் 1.40 லட்சம் தொழிலாளர்கள், 60 ஆயிரம் ஓய்வூதியர்கள் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் எவ்வித அறிவிப்பும் மானிய கோரிக்கையில் இல்லை. எங்களின் கோரிக்கை எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.


'டவுட்' தனபாலு: மதம், கோவில், வழிபாடு, மொழி, திராவிடம், ஈ.வெ.ரா., 'நீட்' போன்ற விவகாரங்களுக்கு மட்டும் தான் இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும். பிற விவகாரங்கள் எல்லாம் பின்னுக்குத் தான் தள்ளப்பட்டுள்ளன. எனவே, போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் உங்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாதது ஏனோ என யாருக்கும் பெரிய 'டவுட்' எல்லாம் ஏற்படவில்லை!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அரசுக்கு சட்டமன்றத்தில் ஆளுக்கு ஆள் லாவணி, இசைப்பாட்டு பாடவும், இருக்கும் கடனை ஏற்றிக்கொண்டு தெருவுக்கு ஆறு சிலை, ஊருக்கு நூறு நினைவிடம் என்று வாரிவிடத்தான் நேரமிருக்கும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement