Load Image
dinamalar telegram
Advertisement

தனித்துவம் தான் 'தினமலர்' நாளிதழின் அடையாளம்!

கடந்த 1987 ஜூன் 3ம் தேதி; ராமேஸ்வரம் தன் வரலாற்றில், அப்படி ஒரு பரபரப்பை எப்போதும் சந்தித்தது இல்லை. சர்வதேச பத்திரிகையாளர்களின் கூட்டத்தை தாங்க முடியாமல், அந்த சின்னஞ்சிறு தீவு திணறியது.'உணவின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய கப்பல் படை வாயிலாக உணவு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த உணவு கப்பலில் பத்திரிகையாளர்களும் அழைத்து செல்லப்படுவர்' என அறிவிக்கப்பட்டு இருந்தது.கப்பலை நிறுத்தக்கூடிய அளவிற்கு கடற்கரை பகுதி ஆழமாக இல்லை என்பதால், கரையை விட்டு வெகு தொலைவில் நடுக்கடலில், உணவு கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. முன்னுாறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், கேமிராவும் கையுமாக கப்பலுக்கு செல்வதற்கு முண்டியடித்தனர். அவர்கள் ஐம்பது, ஐம்பது நபர்களாக பெரிய மீன்பிடி படகு வாயிலாக கொண்டு போய் கப்பலில் ஏற்றப்பட்டனர். ஆறாவதாகவும், கடைசியாகவும் சென்ற படகில் செல்வதற்கு தான், எனக்கும், என்னுடன் வந்த உதவி ஆசிரியர் கந்தவேலுக்கும் இடம் கிடைத்தது. ஆறாவது படகு செல்ல கொஞ்சம் நேரமானது.அந்த நேரத்தில், எதற்காக கப்பலில் போகிறோம், ஏன் போகிறோம், எதனால் இவ்வளவு பதட்டம் என்று சொல்லி விடுகிறேன்.

சுண்டைக்காய்விடுதலை புலிகள் உடனான உள்நாட்டுப் போரால், இலங்கையில் உச்சக்கட்ட உக்கிரம் தாண்டவமாடியது. பாதிக்கப்பட்டது அங்குள்ள பாவப்பட்ட யாழ்ப்பாண தமிழர்களே. அரசு மற்றும் போராளிகள் குழுவிடம் இருந்து உதவிகள் நிவாரணங்கள் கிடைக்காமல், குறிப்பாக உணவிற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.தங்கள் தொப்புள் கொடி உறவுகள் பட்டினியால் சாவதைக் கண்டு பொறுக்க முடியாமல், தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்போது, பிரதமராக இருந்தவர் ராஜிவ். இயல்பாகவே தமிழர்கள் மீது இரக்கமும், அன்பும் கொண்டவர். இலங்கை தமிழர்கள் பட்டினிச்சாவு பற்றி கேள்விப்பட்டதும், கப்பல் வாயிலாக அவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்படும் என்று அறிவித்தார்.


இது, சிங்கள அரசுக்கு சர்வதேச அரங்கில் அவமானத்தை தேடித்தரவே, 'எங்கள் மக்களை நாங்கள் பாதுகாப்போம்; யாரும் உணவு கொண்டு வரவேண்டாம்; மீறி எங்கள் நாட்டு எல்லைக்குள் உணவு கப்பல் வந்தால் தாக்குவோம்' என்று அறிவித்த அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கை பிராந்தியத்துக்குள், இந்திய கப்பலை நுழைய விட வேண்டாம்' என்றும் கட்டளை பிறப்பித்திருந்தார். சுண்டைக்காய் நாடு நமக்கு சவால் விடுவதா என்று கோபப்பட்ட பிரதமர் ராஜிவ், 'குறிப்பிட்ட தேதியில், அங்குள்ள மக்களுக்கு உணவு கிடைக்கும்; கப்பல் கிளம்பும்' என்று அறிவித்தார்.ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் உணவு கப்பல் தாக்கப்படுமா; தகர்க்கப்படுமா? இல்லை தடைகள் தாண்டிச் சென்று உணவு வழங்குமா என்பது போன்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை காணவே பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.

சாதாரண 'லேண்ட் லைன் போன்' கூட எம்.பி., சிபாரிசில் வாங்கி பேசிக் கொண்டிருந்த காலம் அது. பத்திரிகைகளும், துார்தர்ஷனும் மட்டுமே தகவல் தொடர்பு சாதனங்கள்.ராமேஸ்வரம் போஸ்ட் ஆபிசிற்கு சென்று, மதுரை தினமலர் அலுவலக போன் எண்ணை சொன்னால், அவர்கள் கையில் சுற்றும் கருவி மூலமாக பல்வேறு வயர்களை மாற்றி மாற்றி செருகி, பலரிடம் பேசி 'லைன்' வாங்கிக் கொடுத்து, பின் நாங்கள் 'ஹலோ ஹலோ' என்று ஊருக்கே கேட்கும்படி செய்தி சொல்லிய காலம் அது.

கடமைஇந்தச் சூழ்நிலையில், இந்த உணவு கப்பல் விவகாரத்தை எப்படி கையாள்வது என்று, முதல் நாளே செய்திப் பிரிவினர் கூடி விவாதித்தனர்.அதன்படி, ஆறாவது படகில் சென்ற நான், எனக்கு முன்னதாக படகில் சென்ற பத்திரிகையாளர்களையும், நடுக்கடலில் நின்ற இந்திய அரசுக்கு சொந்தமான கப்பலையும், அதன் ஒரத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் படை வீரர்களையும், படகில் செல்லும் போதே படங்களை எடுத்து குவித்தேன்.அப்போது, 'பிளாக் அண்ட் ஒயிட் பிலிம்' போட்டு எடுக்கும் காலம்; ஒரு இல்போர்டு 400 ஏ.எஸ்.ஏ., பிலிம் போட்டு எடுத்தால், 36 படங்கள் எடுக்கலாம். ராமேஸ்வரம் கரையில் இருந்து கப்பலுக்கு போவதற்குள், 36 படங்களை எடுத்த நான், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆனால், யாருமே எதிர்பார்க்காதபடி, பிலிம் ரோலை 'ரீவைண்ட்' செய்து, அதற்கான டப்பாவில் பத்திரமாக போட்டு, என்னுடன் வந்த உதவி ஆசிரியர் கந்தவேலிடம் கொடுத்தேன்.

'நீங்கள் கப்பலுக்கு வரவேண்டாம்; இப்படியே திரும்பிச் செல்லுங்கள். கரையில் உங்களை பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல இருசக்கர வாகனம் காத்திருக்கும். பிறகு பஸ் ஏறி மதுரை சென்று பிலிமை 'டெவலப்' செய்து படம் போட ஏற்பாடு செய்து விடுங்கள்' என்று சொல்லி விட்டு, நான் மட்டும் கப்பலில் ஏறி விட்டேன்.இல்லை; நானும் கப்பலில் வருவேன், எனக்கு அந்த 'திரில்' அனுபவம் வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், செய்திக்கான கடமையை ஆற்ற, கந்தவேலும் நான் சொன்னபடியே செய்தார்.இதை எந்த பத்திரிகையாளர்களும் எதிர்பார்க்கவில்லை; எல்லோரிடமும் கேமிராவும் இருந்தது, எடுத்த படங்களும் இருந்தன; ஆனால், அதைக் கொண்டு போய்ச் சேர்க்க வழியில்லாமல் இருந்தது.என்னை கப்பலில் சேர்த்த படகு திரும்புகையில், அதே படகில் பயணித்த கந்தவேலு, திட்டமிட்டபடி அடுத்தடுத்து செயல்பட, மறுநாள் 'தினமலர்' நாளிதழில் மட்டும், முன்பக்கத்திலும், போஸ்டரிலும், உள்பக்கத்திலும் உணவு கப்பல் தொடர்பான படங்கள் நிரம்பி வழிந்தன. வாசகர்களும், பொதுமக்களும் உற்சாகமாயினர்.
அரிசி 850 டன், பருப்பு 50 டன், உப்பு 5 டன், காய்கறிகள் 8 டன், பால் 10 டன், சமையல் எண்ணெய் 18 டன், மஞ்சள் 150 கிலோ; 50 ஆயிரம் தீப்பெட்டிகள்.ஆறாயிரம் ரொட்டிகள், மருந்துகள் மற்றும் மண்ணெண்ணெய் எண்ணெய் என மொத்தம், 950 டன் உணவு உள்ளீட்ட பொருட்களுடன் நாங்கள் சென்ற கப்பல், ஒரு குறிப்பிட்ட துாரம் சென்றதும், நிறுத்தப்பட்டு விட்டது.
அடுத்த உத்தரவு வந்தால் தான் செல்லும் என்றும் கூறி விட்டனர். நாம் இந்திய எல்லையில் இருக்கிறோமா, இலங்கைக்குள் இருக்கிறோமோ என்று எதுவுமே தெரியாத நிலை. இந்த நேரத்தில் தான், அந்த 'ட்விஸ்ட்' நிகழ்ந்தது.

ஆனந்த கூச்சல்நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்டபடி இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவை வழங்குவோம் என்று பிரதமர் ராஜிவ் அறிவித்தபடி... அதே நாளில் அதே நேரத்தில், ராமநாதபுரம் உச்சிப்புளி விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய உணவு பொருட்கள் ஏற்றிய போர் விமானங்கள், இலங்கைக்குள் புகுந்து தமிழர்கள் பகுதியில், அந்த உணவு பொருட்கள் மூட்டைகளை போட்டு விட்டு திரும்பின. இலங்கை அரசின் கவனம் முழுவதும், கடல் மார்க்கமாக வரும், இந்திய உணவு கப்பலை தடுப்பதிலேயே இருந்த போது, அவர்கள் கொஞ்சமும் எதிர்பாராதபடி, விமானம் வாயிலாக உணவுப் பொருட்கள் கொண்டு போய் சேர்க்கப்பட்டன.

அன்று இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஷோபனா ரவி, 'தங்கள் இருப்பிடத்திற்கு மேலே தாழப்பறந்த விமானங்களை பார்த்து விட்டு, முதலில் அவை வழக்கம் போல குண்டு போட வந்த இலங்கை போர் விமானங்களோ என, இலங்கை தமிழர்கள் பயந்தனர்.
'பிறகு தான் அவை குண்டு போட வந்த இலங்கை விமானங்கள் இல்லை; நமக்கு தொண்டு செய்ய வந்த இந்திய விமானங்கள் என அறிந்து உற்சாகமடைந்தனர்' என்றார்.

ராமேஸ்வரம் வர்தகன் வீதியில் உள்ள ராமநாதா லாட்ஜ் வாசலில் நின்றிருந்த நுாற்றுக்கும் அதிகமானவர்கள், அந்த, 'டிவி' செய்தியை கேட்டு ஆனந்த கூச்சலிட்டது இப்போது தான் கேட்பது போலிருக்கிறது...உணவு போய் சேர்ந்தாச்சு; கப்பல் புறப்பட்ட இடத்திற்கே திரும்பலாம் என்ற உத்தரவு கிடைக்க, கப்பல் மீண்டும் கரைக்கு வந்து படகு வாயிலாக ராமேஸ்வரம் வருவதற்குள் இருட்டி விட்டது. அதன்பிறகு நடந்ததை செய்தியாக்கவே, அனேகருக்கு முடியாமல் போனது.மறுநாள் 'தினமலர்' நாளிதழில் மட்டும், உணவு கப்பல் தொடர்பாக பக்கம் பக்கமாய் வந்த படங்களால், பல பக்கங்களில் இருந்தும் பாராட்டு மழை குவிந்தது.

இந்தக் கதை இப்போது ஏன் என்று நினைக்கலாம்; 71 ஆண்டு கால தினமலர் இதழின் வெற்றி வரலாற்றில், இதெல்லாம் தான் படிக்கற்கள், நாட்டுப்பற்று, சமூக நலன் இதையெல்லாம் தாண்டி நிற்பது அதன் தனித்துவம் தான்.அந்த தனித்துவத்திற்கான எடுத்துக்காட்டு தான் இந்த சம்பவம். -எல்.முருகராஜ்- பத்திரிகையாளர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement