dinamalar telegram
Advertisement

கப்பலோட்டிய தமிழனை கொண்டாடுவோம்

Share


உச்சபட்ச செல்வத்தையும்,வறுமையையும் அனுபவித்த ஒரே மனிதன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரமாக மட்டுமே இருக்க முடியும்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்பவர்
நாட்டு விடுதலைக்காக தன்னையே மெழுகாய் உருக்கிக் கொண்ட ஒப்பற்ற தியாகி
வசதியான வழக்கறிஞர் வீட்டுப் பிள்ளையாய் பிறந்து சட்டப்படிப்பையே பட்டப்படிப்பாக படித்து சிறந்த வழக்கறிஞர் எனப் பெயரெடுத்தவர்.தனது சட்ட அறிவு ஆற்றல் அனைத்தையும் ஏழைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியவர்.மகாகவி பாரதியின் நட்பு இவரை விடுதலை வேள்வியில் ஈர்த்தது பின் இதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்ற உறுதியை ஏற்கவைத்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவரானார்.
வணிகம் செய்ய வந்து நாட்டையே தனதாக்கிக் கொண்டவர்களை அதே வணிக உத்தி மூலம் வீழ்த்த வேண்டும் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக தனது சொத்துக்கள் அனைத்தும் விற்றும் நிதி திரட்டியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்து இரண்டு கப்பல்களை வெற்றிகரமாக இயக்கிகாட்டினார்.
இதை பொறுக்கமுடியாத ஆங்கிலேயர்கள் வ.உ.சி.,யை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது பொய்க்குற்றம் சாட்டி இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறையில் தள்ளினர்.இரட்டை ஆயுள் தண்டனை என்பது அன்று நாற்பது ஆண்டு கால சிறைத்தண்டனையாகும்.காற்றோட்டமோ, சுகாதாரமோ இல்லாத தனியறையில் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு நிலையில் வ.உ.சி. அடைக்கப்பட்டார். தலையை மொட்டை அடித்தார்கள். முரட்டுத்துணியாலான சாக்கு போன்ற சட்டை அளிக்கப்பட்டது.
ஆயிரமாயிரம் பேருக்கு அறுசுவையோடு உணவு படைத்த அவருக்கு புளித்தும், புழுத்தும் போன கேழ்வரகு களியைக் கொடுத்தார்கள். அரிசி சோறு வேண்டுமென்று கேட்டதற்காக மூன்று நாட்கள் எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். அளிக்கிற உணவில் கல்லும், மண்ணும் கலந்திருந்தன.
முதலில் சணல் கிழிக்கும் எந்திரத்தைச் சுற்றும் வேலையைச் செய்ய வைத்தார்கள். கொடுத்து சிவந்த அந்த கரங்களின் தோல் கிழிந்து, ரத்தம் வழிந்தது. பார்த்தவர் கண்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன.
'கைகளில்தானே ரத்தம் வருகிறது' என எண்ணெய் ஆட்டும் செக்கில் மாட்டுக்குப் பதிலாக அந்த மாமனிதரைப் பூட்டினார்கள். கொளுத்திய வெயிலில் நாள் முழுக்க செக்கிழுக்க வைத்தார்கள். அதில் தடுமாறி கீழே விழுந்த போதெல்லாம் மாட்டை அடிப்பதைப் போன்றே அடித்தார்கள். தனது தோள்களில் செக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு இழுத்தை பார்த்து சிறையில் அழாதவர்களே கிடையாது.
அவரது பிறப்பு வளர்ப்பு அறிவு ஆற்றல் தியாகம் இதை எல்லாம் உணராத ஆங்கில அரசின் இந்த அராஜக செயல்களை தாங்கிக் கொள்ள முடியாத சிறையில் இருந்த வ.உ.சி.,யின் ஆதரவாளர்கள் சிறைக்குள்ளே கலகம் செய்தனர் வ.உ.சி.,க்கு பதிலாக செக்கை அவர்களே இழுத்தனர்.
இதனால் இன்னும் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் வ.உ.சி.,யை சக கைதிகள் பார்க்க முடியாதபடி கோவை சிறையில் இருந்து இன்றயை கேரளாவில் உள்ள கண்ணனுார் சிறைக்கு மாற்றினர்.1908-ல் சிறை சென்றவர் பின் ஆறு ஆண்டுகள் கழித்து மெலிந்த தேகத்துடன் வந்தவரை தேசம் மறந்திருந்தது.
சிறையில் இருந்து வெளிவந்தவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலேயரின் சூழ்ச்சி காரணமாக,அவர்களை எதிர்த்து கப்பல் கம்பெனியை நடத்த முடியாது என சுதேசி கப்பல் இயக்குனர்கள் ஒரு சேர முடிவெடுத்து வ.உ.சி.,க்கு சொல்லாமலே கம்பெனியை மூடிவிட்டனர் அதைவிட கொடுமை யாரை எதிர்த்து வ.உ.சி.,கப்பலை இயக்கினாரோ அவர்களுக்கே கப்பல்களையும் விற்றுவிட்டனர் அது மட்டுமின்றி கம்பெனியை நடத்த தெரியாமல் நஷ்டப்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டும் வ.உ.சிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.எல்லாவற்றையும் கேட்டு வ.உ.சி.,யால் வேதனைப்படத்தான் முடிந்தது.
அதன்பிறகு பெரிய அவமானங்களையும் துயரங்களையும் அதன் பிறகு வாழ்ந்த 24 ஆண்டுகளில் அனுபவித்தார்,அவர் எங்கு போனாலும் அவரை வாழவிடாமல் தடுத்து முடக்கி ஆனந்தப்பட்டனர் ஆங்கிலேயர்கள்.
சிறைக்குப் போய்விட்டு வந்ததால் வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமம் ரத்தானது. அதனால் தனக்கு தெரிந்த வக்கீல் தொழிலைச் செய்ய முடியவில்லை. நண்பரான தண்டபாணியின் அரிசிக்கடையில் மாதம் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள், வ.உ.சி.,யின் தொடர்பைக் காரணம் காட்டி தண்டபாணியின் அரிசிக்கடை உரிமத்தையே ரத்து செய்தனர். கடை மூடப்பட்டது. ஊருக்கே படி அளந்தவரின் குடும்பத்திற்கு கிடைத்து வந்த அரை வயிற்று அரிசி கஞ்சிக்கும் ஆபத்து வந்தது.
மனைவி, மக்களைக் காப்பாற்ற மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். இதற்காக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் 'பிராமிசரி நோட்' எழுதி கொடுத்து விட்டு, 10 ரூபாய் கடன் வாங்கினார்.அந்த பத்து ரூபாய் கடனை அடைக்கமுடியாமல் பல தவனை கேட்டிருக்கிறார் அப்படியும் அடைக்கமுடியாமல் வியாபாரத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டார்.
வேலை தொழில் வியாபாரம் எல்லாம் கைவிட்ட நிலையில் சென்னை பெரம்பூர் அஞ்சலகம் அருகே ஒரு சிறிய வீட்டில் குடியேறி, ஆன்மிகச் சொற்பொழிவு, புத்தகம் எழுதுதல் எனக் காலங்கழித்தார். அருமையான மனையியல் மற்றும் இலக்கிய நூல்களை எழுதி குவித்தார். அதெல்லாம் தமிழுக்கு அழகு சேர்த்தன ஆனால் எழுதிய வ.உ.சி.,யை பல நாள் குடும்பத்துடன் பட்டினி போட்டன.
'வந்த கவிஞர்க்கெலாம் மாரியெனப் பல்பொருளும்தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று சந்தமில் வெண்பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்நாச்சொல்லும் தோலும் நலிந்து'
இப்படி நண்பர் ஒருவருக்குத் தன் நிலையைக் கவிதையாக வடித்து சிதம்பரனார் எழுதிய கடிதம் படிக்கும் போதே நெஞ்சைப் பிசைகிறது.ஆனாலும் தனது கையறு நிலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தேசமே பெரிதென தனது சொற்பொழிவுகளாலும் எழுத்தாலும் வாழ்ந்து மறைந்திட்டார்.
நாட்டுப்பற்றுக்கும், தியாகத்துக்கும், போர்க்குணத்துக்கும், அஞ்சாமைக்கும், அயராத உழைப்புக்கும் அரிய உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் தீரர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள்தான் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று துவங்கி அடுத்த செப்டம்பர் வரை அவரது பிறந்த நாளை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஓராண்டு காலத்தில் வ.உ.சி.யின் தியாக வரலாற்றையும், போராட்டக் குணத்தையும், அவர் அனுபவித்தக் கொடுமைகளையும் இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி பாட நூல்களில் வ.உ.சிதம்பரனாரின் தியாக வரலாற்றை சேர்க்க வேண்டும்.
வரும் தலைமுறை வ.உ.சி.,யின் தியாகத்தை அறிய வேண்டும் காரணம் வ.உ.சி.,வேறு நாடு வேறு அல்ல
-எல்.முருகராஜ்

Share
Advertisement

Home வாசகர் கருத்து (12)

 • sankar - chennai,இந்தியா

  இவரைப்பற்றி பேசும் பொது சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் படம் கண்முன்னே நின்று கண் கலங்க வைக்கிறது

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இவருக்கு சிலை நெல்லை மாநகராட்சி எதிரே -வ வு சி மைதானம் என்று அழைக்கப்படுகிறது .-அங்கே நிறுவ வேண்டும் .அங்கு உள்ள ராமசாமி நாயக்கனின் சிலை ஊருக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் ஆனால் இவரின் கழுத்தளவு சிலை நெல்லையப்பர் தெப்பக்குளத்தை ஒட்டி அதிகம் பேர்களின் கண்களில் படாத இடத்திலேயே இது வரை உள்ளது .நெல்லை மக்கள் கவனம் கொள்ள வேண்டும்.

 • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

  தன குடும்பம் சுகமா இருந்தால் போதும் என்று வ வு சியை மாட்டை அடிப்பதைப் போன்று அடித்தவர்களும் தமிழர்கள்தான். எட்டப்பன் தனி மனிதனல்ல. அந்த குணம் இந்தியனிடம் ஊறி இருந்ததால் வ வு சியைப்போன்ற தியாகிகள் செல்வம் இழந்தார்கள். உயிரை சுதந்திரத்திற்காக பணயம் வைத்தார்கள். இன்றும் அந்த குணம் மாறவில்லை சட்டம் இயற்றும் சபையில் இருப்பவர்களிடம். இவர்கள் தங்கள் சுகத்திற்காக செல்வாக்கு உள்ளவர்களை துதி பாடுவது, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது சாதாரணமாகிக் கொண்டுவருகிறது. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால்." ஒரு விண்ணப்பம்: இன்று வ வு சி வாரிஸ்கலுக்காவது அரசாங்கம் உதவி செய்தால் சரி.

 • Gobalakrishnan s.v - Chennai,இந்தியா

  வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் மனிதர்களில் மாணிக்கம்.அவரைப் போன்ற எண்ணற்ற சுயநலமற்ற சுதந்திர தியாகிகளின் தியாகத்தினால்தான் நாம் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.இப்போதைய இளம் பருவத்தினருக்கு வ.உ.சி போன்ற தாய் நாட்டினருக்காக தங்கள் இன்னுயரைத் தந்தவர்களின் வரலாற்றை புரிய வைக்க வேண்டும்.தாய் நாட்டின் பெருமையை அவர்கள் இதயபூர்வமாக நேசித்து உணர வேண்டும்.சும்மா வரவில்லை சுதந்திரம்.அரசியலில் நுழைய நிறைய கட்டுபாடுகளை விதிக்க வேண்டும்.தகுதி பெற தேர்வுகள் வைத்து அதன் பின் அவர்கள் அந்தமான் சிறைச்சாலையில் நம் சுதந்திர தியாகிகள் பிரிட்டீஷ் அரசாட்சியில் துன்புற்று வாடினார்களோ அதே போல் தகுதி அரசியல் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அதே அந்தமான் சிறையில் ஒரு ஏழு வருடங்கள் வெளித் தொடர்பு இல்லாமல் நம் தியாகிகள் அல்லலை அனுபவித்தது போல் அனுபவிக்க வைத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதை புரிய வைத்து அதன் பின்னரே அவர்கள் அரசியலுக்குத் தகுதியானவர் என்று அறிவிக்க வேண்டும்.இப்படிச் செய்தால் மிக நல்ல தலைவர்கள் நாட்டுக்கு கிடைப்பார்கள்.சுதந்திரதின் பெருமையை உணர்ந்து நல்லாட்சிக்கு வித்திடுவார்கள் வந்தே மாதரம்.ஜெய் ஹிந்த்.

 • krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்

  அவர் தியாகம் நம் எல்லோரையும் இப்பொழுது வாழ வைக்கிறது. ஜெய் ஹிந்த்.. வந்தே மாதரம்

 • Seena - Salem,ஐக்கிய அரபு நாடுகள்

  வ வு சி க்கு தலை வணங்குவோம். மாபெரும் தேசபக்தர்.

 • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

  Great man. Salute to him. I am just comparing that Chidambaram family and this Chidambaram 😡family

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  அட மட சங்கிகளே!! T R பாலுதான் கப்பலோட்டிய கப்பலோட்டும் தமிழன்!!!இது கூடப் புரியவில்லை!!

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  வ வு சி க்கு தலை வணங்குவோம்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இந்த மாதிரி பெருந் தலைவர்கள் ஜாதிகளுக்கு பெருமை சேர்த்த வர்களே தவிர ஜாதி சண்டையை வளர்த்த தில்லை .மேலும் சில அரசியல் வாதிகள் அந்த பெயரை நீக்க வேண்டும் என்று கிளம்பியுள்ளார்கள் போலும் .பின்னர் எதற்கு பள்ளிகளை ஜாதி ? மேலும் இனிமேல் தமிழகத்தில் பாரதியார் சிதம்பரம் பிள்ளை போன்ற தேசிய வாதிகளோ திறமை சாலிகளோ பிறக்க போவது தடை (?) செய்யப்பட்டது என் கூறலாம் .மகா கவி என்று கூறி வந்த நாம் -கவி பேரரசு _என்றே கூற துவங்கியாச்சு .செக்கிழுத்த செம்மல் என்ற வார்த்தையை மறந்து வருஷங்கள் பல ஓடி விட்டன .இப்போ பேஷன் 'முத்தமிழ் அறிஞர் ' உலக தலைவர் என்ற வார்த்தைகளும் .பெரியார் 'என்ற வார்த்தைகளும் மட்டுமே .அப்போ மற்றவர்களெல்லாம் 'சிரியார்களா ?தமிழ் நாடு எங்கோ போயி ட்டது /இந்த பட்டங்களும் கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டு உண்மையான வரலாறு இப்போது உருவாகும் தலை முறைக்கு கற்று தரப்பட வேண்டும் ,இல்லையேல் இலங்கை தமிழன் முடிவே இந்திய தமிழ னுக்கும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement