dinamalar telegram
Advertisement

பள்ளி, கல்லுாரி வளாகங்கள் கண்காணிப்பது கட்டாயம்

Share

தமிழகத்தில், கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, சில நாட்களாக, 2000த்துக்கும் குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில், கொரோனா மூன்றாவது அலை பரவல், அக்டோபரில் உச்சமடையும் என, மருத்துவ வல்லுனர்கள் அடிக்கடி எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, ௧௮ மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன; அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.மேலும், பள்ளிகள் திறக்கப்படும் போது, ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் வாயிலாக, மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் அனைவரும் செப்டம்பர் ௫ம் தேதிக்குள் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக, நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த மாணவர்கள், பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்புகளுக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். அதேபோல, நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது, பெற்றோருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியை தந்தாலும், மற்றொரு புறம், தொற்றால் பாதிக்கப்பட்டு விடுவரோ என்ற அச்சமும் உள்ளது. ஆசிரியர்களோ, வகுப்பறைகளில் மாணவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளதோடு, நீண்ட நாட்களாக 'ஆன்லைன்' வகுப்புகளால் சோர்வடைந்திருக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர்.

ஏனெனில், நீண்ட நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்காததால், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தனித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கும் மாணவர்கள் பலர் ஆளாகியுள்ளனர்.கல்லுாரிகளில் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என, அரசு தரப்பு அறிவித்துள்ளது.


இருந்தாலும், பழைய முறைப்படி இல்லாமல் பாடங்களை நடத்துவது தொடர்பாக, புதிய பாட அட்டவணைகளை கல்லுாரிகளும், பள்ளிகளும் தயார் செய்ய வேண்டும்.பள்ளி, கல்லுாரி வளாகங்களில் மாணவர்கள் மெத்தனமாக இருப்பதை தவிர்க்க, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கிருமி நாசினியால் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை கண்காணிக்க, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடம் பெற்ற சிறப்புக் குழுவை, கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்கு கண்காணிக்க வேண்டியது அவசியம்.

இல்லையெனில், ஒரு மாணவருக்கு தொற்று பரவினாலும், அது பல மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினருக்கும் பரவும் மோசமான சூழ்நிலையை உருவாக்கி விடும். மேலும், வகுப்பறைகள் காற்றோட்டமான முறையில் இருக்க வேண்டும். முடிந்தால் திறந்த வெளியில் மேஜை, நாற்காலிகளை போட்டு, சில நாட்களுக்கு பாடங்களை நடத்த ஏற்பாடு செய்தாலும் பரவாயில்லை.பள்ளி, கல்லுாரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, சில நாட்களுக்கு சுகாதாரத் துறையினரும் கண்காணிக்க வேண்டும். இதற்கு திடீர் சோதனைகளை நடத்தினாலும் பரவாயில்லை. அத்துடன், ரேண்டமாக தொற்று பரிசோதனைகளையும் செய்யலாம்.

கொரோனாவை தடுக்க 2020 மார்ச் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவில், 15 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டதாகவும்,24 .7 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதாகவும் 'யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி 'டிவி' மற்றும் 'ரேடியோ' வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டாலும், அவை பெரிய அளவில் பலன் தரவில்லை என்றே கூறப்படுகிறது.ஆன்லைன் வாயிலாக பாடங்களை கேட்க 'ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட்' இணைப்பு அவசியம்.

அந்த வாய்ப்பு, நான்கு மாணவர்களில் ஒரு மாணவருக்கு மட்டுமே முழுமையாக கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. காரணம், கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள குடும்பங்களில், 24 சதவீதத்தினர் மட்டுமே இணையதள இணைப்பு வசதியை கொண்டிருந்தனர்.மேலும், ஆன்லைன் வகுப்புகளால், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களின் திறனை மேம்படுத்த, பள்ளி, கல்லுாரிகளை திறப்பது சரியே.இருந்தாலும், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் என அனைத்து தரப்பினரும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில், இன்னும் சில மாதங்கள் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். பிரச்னை வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement