dinamalar telegram
Advertisement

பெண்களின் உரிமைகளை மதிப்பரா தலிபான்கள்?

Share

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதிபராக இருந்த அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் மட்டுமே, அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, குறிப்பிட்ட அளவிலான அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர்.

நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது, அஷ்ரப் கனி தப்பி ஓடி, ஐக்கிய அரபு எமிரேட்சில் தஞ்சம் அடைந்ததற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏன் அமெரிக்கா கூட, அவரின் செயல்பாட்டை கண்டித்துள்ளது. தலிபான்களின் எளிதான வெற்றிக்கு அதிபராக இருந்த அஷ்ரப் கனியும், ஆப்கானிஸ்தான் ராணுவமுமே காரணம் என்றும் விமர்சித்துள்ளது.

ஆனால், 1999ம் ஆண்டு, முன்னாள் அதிபர் நஜிபுல்லாவுக்கு நேர்ந்தது போன்ற கொடுமை, தனக்கு நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், அஷ்ரப் கனி தப்பியிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆப்கனில், 60ம் ஆண்டுகளில் நடந்த உள்நாட்டு போரில் வளர்ச்சி அடைந்த தலிபான்கள், 1999 செப்டம்பரில் காபூலை கைப்பற்றினர். அப்போது, ஐக்கிய நாடுகள் சபை அலுவலக வளாகத்துக்குள் மாறுவேடத்தில் நுழைந்த தலிபான்கள், அங்கு தஞ்சம் அடைந்திருந்த முன்னாள் அதிபர் நஜிபுல்லாவை பிடித்து, கடுமையாக சித்திரவதை செய்து கொன்றனர்; உடலை ஒரு மின் கம்பத்தில் கட்டித் தொங்க விட்டனர். தலிபான்களின் கொடூரங்களுக்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும். அதுபோன்று நடக்காமல் இருக்கவே, அஷ்ரப் கனி தப்பி விட்டார் என்று நம்பப்படுகிறது.

தலிபான் பயங்கரவாதிகள் வசம் ஆப்கன் வீழ்ந்தது முதல், அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற முற்பட்டு வருகின்றனர். அதற்கேற்ற வகையில், தங்களுக்கு எதிரானவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில், தலிபான்கள் ஆங்காங்கே ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவரையே கொடூரமாக கொன்றனர்.

ஆப்கன் பெண்களும், தங்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் தலிபான்களால் ஆபத்து இருப்பதாக அஞ்சுகின்றனர். அதற்கு காரணம், 1999 முதல்,2001 வரையிலான தலிபான்களின் இருண்ட ஆட்சிக் காலத்தில், பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்ந்ததே காரணம். அப்போது, ஷரியத் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்திய தலிபான்கள், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும், சிறுமியர் மற்றும் மாணவியர் பள்ளிக்கு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

பொது இடங்களுக்கு, பெண்கள் உடல் முழுதும் மறைக்கக் கூடிய ஆடைகள் அணிந்து தான் வர வேண்டும்; ஆண்களின் துணையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்தனர். இதனால், ஆப்கன் பெண்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. அந்த துயர நிலைமை மீண்டும் வந்து விடுமோ என்பது தான், அங்குள்ளவர்களின் அச்சம்.

அத்துடன் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்பதுடன், 'கிராப்' வெட்டியிருந்த இளைஞர்களுக்கு பொது இடங்களில் சவுக்கடியும் தரப்பட்டது. 'டிவி' பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன்பின்,2001 ல் அமெரிக்க படையெடுப்புக்கு பின், ஆப்கனில் தலிபான்கள் ஆதிக்கம் குறைந்த போது, சிறுமியர் பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவானது; பெண்கள் சுதந்திரமாக செயல்பட துவங்கினர். கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், ஆய்வு தகவல்கள் தெரிவித்தன.

தற்போது, அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுமோ என்ற பீதி உருவாகியுள்ளது. புதிதாக ஆட்சி அமைக்க உள்ள தலிபான்கள், ஷரியத் சட்டம் பின்பற்றப்பட்டாலும், பெண்களின் கவுரவம் மற்றும் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் வார்த்தைகளில், உறுதியுடன் இருப்பரா அல்லது சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற, அவர்கள் சொல்லும் பாசாங்கு வார்த்தைகளா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மத ரீதியான சட்டங்களை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் ஆப்கன் மண்ணில் மீண்டும் நிகழ, சர்வதேச அமைப்புகளும், நாடுகளும் அனுமதிக்கக் கூடாது. தலிபான்களின் நிர்வாகத்தை உடனடியாக அங்கீகரிக்கவும் கூடாது. ஒரு வேளை அங்கீகரிக்கக் கூடிய சூழ்நிலை உருவானால், அதற்கான முன் நிபந்தனையாக, பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; அதற்கான உத்தரவாதத்தை தலிபான்களிடம் இருந்து பெற வேண்டும். அந்த உத்தரவாதம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, சர்வதேச அமைப்பினர் பிரதிநிதிகள் இடம் பெற்ற குழுவையும் நியமிக்க வேண்டும்.

குறிப்பாக, சர்வதேச மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அங்கு முகாமிட்டு களநிலவரங்களை கண்டறிய வேண்டும். எந்த வகையிலும், 2001ம் ஆண்டுக்கு முந்தைய நிலைமை உருவாகி விட அனுமதிக்கக் கூடாது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவும், சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement