dinamalar telegram
Advertisement

எதிர்பார்ப்புகள் ஏராளம்: அறிவிப்போ அளவானது

Share

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசின் முதல் பட்ஜெட் அதாவது 2021-22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கடந்த வெள்ளியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுவும், முதல்முறையாக காகிதம் இல்லாத 'இ-பட்ஜெட்'டாக தாக்கலாது.அதற்கு முன் 9 ம் தேதி நிதி அமைச்சர் தியாகராஜன், தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மாநிலத்தின் கடன்சுமை 5.75 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2.50 லட்சம்ரூபாய் கடன் சுமை உள்ளது. தினமும் 115 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.

இதனால் பட்ஜெட்டில் அதிக வரி விதிப்பு இருக்கும். சிலவற்றுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி இல்லாவிட்டாலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.அதனால், அரசுக்கு 1160 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்றாலும், கொரோனாவால் பொருளாதாரம் நலிந்து குடும்பத்தை நடத்த சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏராளமானோருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இருப்பினும் டீசல் மீதான வரியை குறைக்காதது வர்த்தக வாகன உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பற்றியும் எதுவும் சொல்லப்படவில்லை.இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வருவதும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான குடும்பங்களை தேர்வு செய்த பின் அதற்கான வழிமுறைகளை உருவாக்கியபின் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அடுத்த சில மாதங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படலாம்.

இதுதவிர 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும். பெண்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாகனங்கள் பூங்கா திண்டிவனம் மணப்பாறை தேனியில் உணவுபூங்காக்கள் அமைக்கப்படும். 10 ஆண்டுகளுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்பது உட்பட பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன.

இருப்பினும் இந்த அறிவிப்புகள் எல்லாம் ஏட்டளவில் இல்லாமல் விரைவில் செயல்பாட்டிற்கு வந்தால் தான் வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன் மக்களின் வாழ்க்கை தரமும் உயரும்; அரசின் மீதான நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.

அதேநேரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு கொரோனாவால் கடுமையாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும் வரும் காலத்தில் இதுபோன்ற கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பதே நல்லது.இல்லையெனில் கடன்கள் தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் அதை செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.

அதற்கு மாறாக குறிப்பிட்ட காலம் அவகாசம் கொடுத்து அதன்பின் கடனை திருப்பி செலுத்தும்படி கூறலாம். அதேபோல், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளபடி விவகாரத்திலும் தகுதியானவர்கள் பலன்பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவதே சரியாக இருக்கும்.

காவல்துறையில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்பதும் நல்லதே. அதேநேரத்தில் கல்லூரிகளை துவக்கினால் மட்டும் போதாதஉ அவற்றுக்கான உட்கட்டமைப்புகள் பேராசிரியர் நியமனங்கள் போன்றவற்றை சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுதவிர இந்த முறை புதிய முயற்சியாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டும் கடந்த சனியன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு அவர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் 34 ஆயிரத்து 220 கோடி ரூபாய் வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில் இந்த பட்ஜெட் தாக்கலாகியுள்ளது.

அதேநேரத்தில் இலவசங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெறாதது ஆறுதல் தருவதாக உள்ளது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பட்ஜெட் நிறைவேற்றவில்லை என்றாலும் மாநிலத்தின் நிதி நிலைமை கருதி எச்சரிக்கையோடு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் என்றே சொல்லலாம். அடுத்து வரும் பட்ஜெட்டுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement