dinamalar telegram
Advertisement

ஒலிம்பிக் சாதனை தொடர உதவ வேண்டும் அரசுகள்

Share

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில், ௩௨வது ஒலிம்பிக் போட்டிகள், ஜூலை ௨௩ல் துவங்கி நேற்று முன்தினத்துடன்(ஆக.,6) நிறைவு பெற்றன. அதில், இந்திய வீரர்கள் பங்கேற்ற போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன.

இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.நேற்று முன்தினம் வரை வெள்ளி இரண்டு, வெண்கலம் மூன்று என, ஐந்து பதக்கங்கள் பெற்று, மொத்தம் 204 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக்கில், 66வது இடத்தில் இந்தியா இருந்தது.
பளுதுாக்கும் போட்டியில், மீராபாய் சானு; ஆண்கள் ஹாக்கி அணி; பெண்கள் தனிநபர் பிரிவு பேட்மின்டனில் பி.வி.சிந்து; குத்துச் சண்டையில், லவ்லினா போர்கோஹைன்; மல்யுத்தத்தில், ரவிகுமார் தாஹியா ஆகியோர் பதக்கங்களை வென்றிருந்தனர்.

இந்நிலையில்,(ஆக.,5)ல் நடந்த மல்யுத்த போட்டியில், பஜ்ரங் புனியா வெண்கலம் வென்று, நம் நாட்டின் பதக்கப் பட்டியலை ஆறாக உயர்த்தினார். அதே நேரத்தில், ஈட்டி எறிதல் போட்டியில் அடுத்து களமிறங்கிய, ஹரியானா மாநிலம், பானிப்பட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று அபார சாதனை படைத்தார்.

ஒலிம்பிக்கில், 1920 முதல் இந்தியா பங்கேற்கிறது. இதன் தடகளத்தில் பதக்கம் வெல்வது, இந்தியாவுக்கு எட்டாக்கனியாக இருந்தது. தற்போது, அது நிறைவேறியுள்ளது. இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்த நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.இவரின் வெற்றி வாயிலாக, பதக்கங்கள் பெற்ற நாடுகள் பட்டியலில், 66வது இடத்தில் இருந்த இந்தியா, 48வது இடத்திற்கு முன்னேறியது.
அதே நேரத்தில், வெள்ளியன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி நான்காவது இடம் பெற்று, பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டது. அது, அந்த அணியினரை மட்டுமின்றி, நாடு முழுதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.இருப்பினும், மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நான்காவது இடம் பெற்றாலும், இந்தியர்கள் பலரின் இதயங்களில் இடம் பிடித்தது.

தோற்றிருந்தாலும், அந்த அணியின் வீராங்கனையருக்கு தலா, 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக, ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன், அந்த அணியினரை பிரதமர் பாராட்டியது, அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய ஹாக்கி அணியினர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினர். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற போட்டிகளிலும், அந்த அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதன்பின், 2012ல் லண்டன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தான், இந்திய வீரர்கள் ஆறு பதக்கங்களை வென்று, முந்தைய சாதனைகளை முறியடித்தனர். தற்போதைய போட்டியில், ஒரு தங்கம் உட்பட, ஏழு பதக்கங்களை வென்றதன் வாயிலாக, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஒலிம்பிக்கில் தமிழகம் சார்பில் பங்கேற்ற, 13 பேரில் யாரும் குறிப்பிடத்தக்க சாதனை படைக்காதது வருத்தமே.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய வீரர்கள் எல்லாம், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை சேர்ந்தவர்களே. இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு முன், அவர்கள் சந்தித்த சிரமங்கள், துயரங்கள் ஏராளம். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சி பெற, போதிய வசதிகள் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள். அத்துடன், வசதிகள் நிறைந்த நகரங்களில் தங்கி பயிற்சி பெற, போதிய பண வசதியும் இல்லாதவர்கள்.

இவர்களை போன்ற பலர் இன்னும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்தாலும், அவர்களால் உள்ளூர் அளவில் சிறப்பான பயிற்சி பெற முடியாததால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே, விளையாட்டு வீரர்கள் சிறப்பான பயிற்சி பெறும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகங்களை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும். மேலும் பெரிய நகரங்களில், ஆசிய, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும்

அளவிற்கான ஸ்டேடியங்கள் அமைப்பதுடன், பயிற்சி மையங்களையும் உருவாக்க வேண்டும். பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை, பள்ளிகள் அளவிலேயே கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்; அதற்கேற்ப ஊக்கச் சலுகைகளையும் வழங்க வேண்டும். உள்ளூர் அளவிலேயே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆர்வத்தை, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் துாண்ட வேண்டும். அதுவே, எதிர்காலத்தில், அவர்கள் பெரிய அளவில் சாதிக்க உதவும்.

இனி வரும் சர்வதேச போட்டிகளில், விளையாட்டு வீரர்கள் வெற்றி தொடர, பதக்கங்கள் பட்டியல் அதிகரிக்க, பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம். அதுவே, இந்திய வீரர்கள் மென்மேலும் சாதிக்க உதவும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement