சைக்கிளில் இந்தியாவை சுற்றிவருபவர் நெகிழ்ச்சி
சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றிவரும் ஆங்கிட் (31) தான் பார்த்த மாநிலங்களிலேயே தமிழகம் வித்தியாசமானது அன்பானது என்கிறார்.
தற்போது சென்னை வந்துள்ள ஆங்கிட்டின் அனுபவங்கள் சுவராசியமானதாகும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஆங்கிட் அரோரா.அங்குள்ள பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை பார்த்து வந்தார்.திருமணமாகதவர்.இவருக்கு சைக்கிள் ஒட்டுவது என்பது மிகவும் பிடித்தமானது அவ்வப்போது சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்காவது ஒரு வார காலம் பயணிப்பர்.
ஏன் இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்ற பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு இந்தியாவை சுற்றிப்பார்க்க சைக்கிளில் கிளம்பிவிட்டார்.கடந்த 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ம்தேதி தனது சைக்கிள் பயணத்தை ஜெய்ப்பூரில் துவக்கினார்.இன்றைக்கு இந்த ஊர் இத்தனை கிலோ மீட்டர் பயணம் என்பது போன்ற எந்த இலக்கும் இல்லாமல் பயணத்தை மேற்கொண்டார்.
இரண்டு செட் டிரஸ்,ஒரு மொபைல் போன்,சிறிய அளவில் சைக்கிள் ரிப்பேர் செய்ய தேவைப்படும் பொருட்கள் கொஞ்சம் பணம் இவ்வளவுதான் பயணத்தின் போது எடுத்துக் கொண்டவை.
பத்திரிகையாளர் என்பதால் நிறைய மக்களை சந்திக்க வேண்டும் சிறு சிறு கிராமங்களை காணவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்ததால் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய நாள் எடுத்துக் கொண்டார்.
அந்த கிராமத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் கலைகள் கதைகள் பழக்க வழகங்கள் திருவிழாக்கள் அதிசயங்கள் போன்றவைகளை மூத்த குடிமக்களின் உதவியுடன் பதிவு செய்து கொண்டு வருகிறார்.
பயணம் துவங்கி நான்கு வருடமாகப் போகிறது இதுவரை 15 மாநிலங்களையும்,8 யூனியன் பிரதேசங்களையும் பயணித்து முடித்துள்ளார்.புதுச்சேரியில் பல நாள் தங்கியிருந்து விவசாயம் கற்றுக் கொண்டார் இதே போல நாக்பூரில் மரவேலைகளும்,கிருஷ்ணகிரியில் ஆர்கனிக் பண்ணை வேலைகளையும்,மகராஷ்ட்ராவில் காதி கிராப்ட் வேலைகளையும் கற்றுக் கொண்டார்.
பெரும்பாலும் பகலில்தான் பயணம் மேற்கொள்கிறார் இரவில் கிடைத்த இடங்களில் தங்கிக் கொள்கிறார்,மாணவர்களிடம் இயற்கை பற்றி உரையாடுகிறார் இந்தியாவின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார்.
தமிழக பயணம் மேற்கொண்டுள்ள இவர் தற்போது சென்னையில் தங்கியுள்ளார்.இங்கே மக்கள் குறிப்பாக கிராமத்தில் உள்ளவர்கள் மிகவுமு் பாசமுடன் பழகுவதாகவும் உணவு உடை கொடுத்து பயணச் செலவிற்கு பணமும் கொடுத்து உதவினார்கள் என்கிறார் நெகிழ்வுடன்.
தனது சைக்கிளை ரிப்பேருக்கு கொடுத்திருப்பதாகவும் அது தயராகும் வரை சென்னையில் தங்கியிருந்து இங்கேயுள்ள பழமையான விஷயங்களை தேடிப்பார்க்கவும் அது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசவும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்,அவருக்கு ஆங்கிலமும் இந்தியும் மட்டும் தெரியும் பேசுவதற்கான எண்:96361 40888.
-எல்.முருகராஜ்.
தமிழக மக்கள் அன்பானவர்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!