dinamalar telegram
Advertisement

பார்லிமென்ட் முடக்கம் முற்றுப்புள்ளி அவசியம்

Share

இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும், சமீப நாட்களாக சர்ச்சையை கிளப்பியுள்ள விவகாரம் பெகாசஸ்.

மேற்காசிய நாடான இஸ்ரேலின் பாதுகாப்பு துறையில் உள்ள ஒரு பிரிவான, என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் தயாரிப்பு தான் பெகாசஸ்; இது ஒரு உளவு மென்பொருள். இந்த மென்பொருள், பல்வேறு நாடுகளின் உளவு மற்றும் ராணுவ பிரிவுக்கு விற்கப்பட்டு வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்களில் ஈடுபடுவோரை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மென்பொருளை பயன்படுத்தி, நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், அதிகாரிகள் உட்பட பலரின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தாலும், விவசாய சட்ட திருத்த மசோதா, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளாலும், கடந்த மாதம், 19ம் தேதி துவங்கிய பார்லிமென்ட் முழுமையாக நடக்கவில்லை.

இரு சபைகளும் தொடக்க நாளில் இருந்தே முடக்கப்படுகின்றன.பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்து இதுவரை, இரு சபைகளும், ௧௦௭ மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு உள்ளன. 89 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களின் வரிப்பணம், 130 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், சந்தேகப்படும் நபர்களின் மொபைல் போன்களை மத்திய அரசு ஒட்டு கேட்கலாம். அதற்கு சட்டப்பூர்வமான விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறினால், அது தனிமனித உரிமை மீறலாகும். ஆனால் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி, எந்த உளவு வேலையும் நடக்கவில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.

பார்லிமென்டில் இதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை யும் நிராகரிக்கிறது. அதனால், தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்புகின்றன. அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளன. அதேநேரத்தில், பார்லிமென்ட் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் கருதி, சபைகள் முடக்கப்படுவது, இந்த வாரத்திலாவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு நிறுவனங்கள் எதுவும் வாங்கவில்லை என்றால், அன்னிய நாட்டு நிறுவனம், அதை இந்திய குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்தியதா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படிச் செய்தால், அது நம் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் விடும் சவாலாகும்.

மேலும், சபையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க, மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, விரிவான பதில் அளிக்க வேண்டிய அவசியமும் ஏற்படும். இதற்கிடையில், நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாக, ஆளும் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தையும் மறுப்பதற்கு இல்லை.

எது எப்படியோ இந்த விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக் குழு நியமிப்பதன் வாயிலாகவோ அல்லது இதற்கு முன், பல விவகாரங்களில் பின்பற்றப்பட்டுள்ள நடைமுறைகள் வாயிலாகவோ விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டியது அவசியமே. அப்போது தான் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல், மத்திய - மாநில அரசுகளும், பொதுமக்களும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னை களை சந்தித்து வருகின்றனர்.

ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்து, ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கொரோனா மூன்றாவது அலை பரவல் என்ற மிரட்டலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் பள்ளிகள், கல்லுாரிகளை திறப்பது தள்ளிப் போகிறது. நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அதற்கேற்ற வகையில் தேவையான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.

இப்படி ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில், அவற்றை பற்றி இந்த தருணத்தில், பார்லிமென்டில் விவாதிக்க வேண்டியது அவசியம். அவற்றை எல்லாம் விட்டு விட்டு ஒற்றைபிரச்னையை எதிர்க்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கையில் எடுத்து, அதற்காக சபையை முடக்கி வருவதும் அழகல்ல.

ஏற்கனவே, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமாக குறைந்துள்ள நிலையில், ஆக்க பூர்வமான விவாதங்கள் நடத்தி, அவற்றின் வாயிலாக, மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதை விடுத்து, சபையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவது, அந்தக் கட்சிகளுக்கு தான் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஜனநாயகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் எனில், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் சபையின் உள்ளே தான் நடைபெற வேண்டும்; அதுவே நல்லது. இதை எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியினரும் உணர வேண்டியது அவசியம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement