dinamalar telegram
Advertisement

தண்டனையை பரிசாக பெற்ற ஆவின் அதிகாரிகள்!

Share

தண்டனையை பரிசாக பெற்ற ஆவின் அதிகாரிகள்!
''கட்சியில தான் புதுசா வந்தவங்களுக்கு மரியாதைன்னா, கான்ட்ராக்ட்லயும் அப்படித்தான் இருக்கு ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார்
குப்பண்ணா.

''ஆளுங்கட்சி தகவலா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.


''ஆமாம்... நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில சில 'டெண்டர்'களை எடுக்க, தி.மு.க.,வினர் உட்பட சில கான்ட்ராக்டர்கள் விண்ணப்பிச்சிருக்கா... ஆனா, வேற கட்சியில இருந்து தி.மு.க.,வுக்கு வந்திருக்கற கான்ட்ராக்டருக்கு தான் பணி ஒதுக்கீட்டுல முக்கியத்துவம் தரணும்னு, நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவு போட்டிருக்காராம் ஓய்...

''இதனால, தி.மு.க., கான்ட்ராக்டர்கள், 'நாங்களே 10 வருஷமா வேலையில்லாம காய்ஞ்சு கிடக்கறோம்... நம்ம ஆட்சியில டெண்டர் எடுத்து நாலு காசு சம்பாதிக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் ஆப்பு வைக்கறாரே'ன்னு கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''மத்திய அரசு சம்பளத்தை தரணும்னு போராட்டம் நடத்த போறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்த துறை ஊழியர்களை சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.


''தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துல, ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் 'ஸ்பெஷலிஸ்ட்'களுக்கு மட்டும், மத்திய அரசின் ஊதியத்தை தமிழக அரசின் அனுமதி இல்லாம வழங்கிட்டு இருக்காங்க... அதாவது, மாநில அரசின் ஊதியம், 50 ஆயிரம் ரூபாய்னா, அவங்களுக்கு, 85 ஆயிரம் ரூபாய் வழங்குறாங்க பா...

''இதனால, 'வாரியத்துல அனைத்து ஊழியர்களுக்கும் மத்திய அரசின் ஊதியம் வழங்கணும்... இல்லேன்னா எல்லாருக்கும் மாநில அரசின் ஊதியம் வழங்கணும்'னு பலரும் கேட்கிறாங்க பா... அதுவும் இல்லாம, வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் சிலர், லஞ்சம் வாங்கிட்டு தகுதி இல்லாதவங்களை வேலைக்கு நியமிச்சு, அதிகப்படியா ஊதியம் வழங்குறாங்களாம்...

''இதுல உரிய நடவடிக்கை எடுக்கலைன்னா, போராட்டம் நடத்துவோம்னு குடிசை மாற்று வாரிய ஊழியர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தண்டனையே பரிசா கிடைச்சிட்டு வே...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''ஆவின்ல முறைகேடா பல நியமனங்கள் நடந்துட்டதா, தி.மு.க., அரசு புகார் சொல்லிட்டு இருக்குல்லா... இதுல, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாம், 'எப்ப நம்ம கழுத்துக்கு கத்தி வரும்'னு திக்திக்னு காத்துட்டு இருந்தாவ வே...

''சமீபத்துல மாநிலம் முழுக்க 34 பொது மேலாளர்களை அதிரடியா இடம் மாத்தினாங்கல்லா... இதுல என்ன வேடிக்கைன்னா, முறைகேடுல சிக்கி விஜிலென்ஸ் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட பலருக்கும், பசையான இடங்கள்ல மாறுதல் கிடைச்சிட்டு வே...

''இதனால, புல்லரிச்சு போன அதிகாரிகள், ஞாயிற்றுக் கிழமை லீவு நாளா இருந்தாலும், உடனே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்ல போய் பொறுப்பு ஏத்துக்கிட்டாவ... இதுல, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சருக்கு விசுவாசமா இருந்த பல அதிகாரிகளும் உண்டு... இதை பார்த்து, நேர்மையான கீழ்மட்ட ஊழியர்கள் விரக்தியில இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • raja - Cotonou,பெனின்

    விடியல் அரசின் CCC விழா கோலம்.... உருப்படுமா தமிழகம்... ஐந்து வருட இந்த ஆட்சிக்கு பிறகு இருக்குமா தமிழகம் என்ற மாநிலம்.....

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே கான்ட்ராக்ட்டில் 'காசு பார்க்க' தான் கட்சியில் இருக்கோம்னு எவ்வளவு அழகா புட்டு புட்டு வெச்சிட்டார் 'பத்து வ்ருஷ பசி ' பளிச்சென்று தெரிந்துவிட்டதே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement