dinamalar telegram
Advertisement

முதல் திருநங்கை போட்டோ ஜர்னலிஸ்ட் சோயாவிற்கு விருது

Share

கொரோனா காலத்தில் சிறந்த போட்டோக்கள் எடுத்தவர்களுக்கான பரிசளிப்பு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.
விருது பெற்றவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தவர்களில் லோபோவும் ஒருவர் முழுப்பெயர் சோயா தாமஸ் லோபோ இவர் இந்தியாவின் முதல் திருநங்கை போட்டோகிராபர் ஆவார்.மும்பை மாகிம் பகுதியில் ஏழைப் பெற்றோருக்கு பிறந்த லோபோ சிறு வயதிலேயே தந்தையை இழந்தார் தாய்தான் வீட்டு வேலை பார்த்து லோபோவை காப்பாற்றிவந்தார்.இந்த நிலையில் தனது பதினோராவது வயதில் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்தார் அம்மாவிடம் சொன்னார் ஏழைகளுக்குதான் எல்லா துயரமும் என்று அழுதாலும் மகளான மகனை அரவணைத்துக் கொண்டார்.
தாயார் இறந்த பிறகு வீட்டிலும் ஆதரவு குறைய தனக்கென ஒரு வாழ்க்கையை தேடி வெளியேறினார்,அவரிடம் அன்பு காட்டிய சல்மா உணவிற்கும் உறைவிடத்திற்கும் வழிகாட்டினார்.
திருநங்கையாக இருப்பவர்கள் ஒன்று உடலை விற்று பிழைக்க வேண்டும் இல்லையேல் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டும் என்ற நிலையில் எக்காரணம் கொண்டும் உடலை முதலீட்டாக்குவது இல்லை என்று முடிவெடுத்த லோபோ மின்சார ரயில்கள் பிச்சை எடுத்து பிழைத்துவந்தார்.மனதிலும் உடலிலும் நல்ல வலு இருந்தும் பிச்சை எடுக்கிறோமே என்ற வலி மனதில் இருந்து கொண்டே இருந்தது அப்போது அவர் சந்தித்த சில புகைப்படக்கலைஞர்களின் செயலால் ஈர்க்கப்பட்டடு அவர்களிடம் புகைப்படக்கலையை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்.பிறகு உணவு உடைக்கு கூட செலவழிக்காமல் சிக்கனமாக இருந்து பணம் சேர்த்து ஓரு செகண்ட்ஹாண்ட் என்று சொல்லப்படக்கூடிய உபயோகித்த பழைய கேமிராவை முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.
அந்த கேமிராவைக் கொண்டு அவ்வப்போது படம் எடுத்து தன்னை போட்டோகிராபியில் பட்டை தீட்டிக் கொண்டே வந்தார் இந்த நிலையில்தான் கொரோனா சூழல் ஏற்பட்டது.நாட்டில் முதல் முறையாக மின்சார ரயில்கள் ஒட்டம் நின்று போனது அதனைச் சார்ந்திருந்த லோபோ போன்ற திருநங்கைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
ஆங்காங்கே கிடைக்கும் அன்னதானங்களில் நாட்களை நகர்த்தி வந்தவர் ஒரு நாள் பாந்ரா பகுதியில் ரயில் நிலையமே கொள்ளாத அளவு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சூழ்ந்திருந்ததை பார்த்தார்.சொந்த ஊர் திரும்ப விரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் விடப்படுவதாக வந்த பொய்யான தகவலை நம்பி குழந்தை குட்டிகளுடன் குவிந்தவர்கள் அவர்கள்.
அவர்களின் இடைவெளி இல்லாத கூட்டத்தையும் அவர்களின் துயரத்தையும் ஒரு சேர கேமிராவில் பதிவு செய்தார்.இந்த பதிவை செய்தி நிறுவனம் ஒன்று அனைவருக்கும் பகிர்ந்தது.ஒரே நாளில் லோபோவின் பெயர் பரவியது.லோபோ புகைப்ப செய்தியாளராக மாறியது இப்படித்தான்.இவரது படத்தை பலரும் பாராட்டினர் திருப்தியான சன்மானமும் கிடைத்தது அதன்பிறகு முழுநேர புகைப்பட செய்தியாளராக லோபோ மாறிவிட்டார்.
பத்திரிகையாளர் அடையாள அட்டை இருந்தால்தான் எல்லா இடங்களுக்கும் செல்லமுடியும் என்பதால் மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ஆனால் தான் எடுக்கும் படங்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார்.
கொரோனா காலத்தில் சிறந்த படங்கள் எடுத்தவர்களுக்கான பாராட்டு விழாவில் என்னையும் மேடையேற்றி கவுரவித்தனர் அப்போதுதான் நாட்டின் ஒரே திருநங்கை புகைப்பட செய்தியாளர் நான் என்பது தெரிந்தது.
எனது புகைப்பட செய்தியாளர் பணியில் நிறைய சாதிக்க விரும்புகிறேன் கூடவே திருநங்கைக்கு நோய் வந்தால் அவரை எந்த வார்டில் அனுமதிப்பது என்பதில் மருத்துவர்களுக்கே ஒரு புரிதல் இல்லை எங்களைப் போன்றவர்களின் இது போன்ற சிக்கல்களை தீர்ப்பதில் எனது பங்களிப்பு இருக்கும் என்றார் லோபோ தீர்க்கமாக..
-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • Tamil - Virudhunagar,இந்தியா

    எல்லாத் திருநங்கைகளும் இவரைப் போன்று பாலியல் தொழிலையும் பிச்சை எடுப்பதையும் விட்டு விட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement