dinamalar telegram
Advertisement

தேச துரோகச் சட்டம் மறுபரிசீலனை அவசியம்

Share

கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் தாக்கல் செய்த மனு ஒன்றை, சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'சுதந்திர போராட்ட காலத்தில், காந்தி, திலகர் போன்ற விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்கள் நடத்திய போராட்டங்களையும் ஒடுக்க, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட, தேச துரோகச் சட்டம் பிரிவு, 124 - ஏ தேவையா' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.


'நாடு விடுதலை அடைந்து, 75 ஆண்டுகளான பிறகும், தேச துரோகச் சட்டம் தேவையா, அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், தண்டனை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த சட்டத்த்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவோருக்கு, அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க முடியும். மேலும், 'வாரன்ட்' எதுவும் இல்லாமல், போலீசார் ஒருவரை கைது செய்ய முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் போது, அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்படுகிறது.

'ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியின் கருத்தை ஏற்கவில்லை என்றால், இதுபோன்ற சட்டங்களை பயன்படுத்தி, பிடிக்காத சிலரை வழக்கில் சிக்கவைக்கலாம். தேவையற்ற, தற்காலத்திற்கு ஒவ்வாத பல சட்டங்களை, மோடி தலைமையிலான அரசு ரத்து செய்துள்ளது. அதுபோல, பழமையான இந்தச் சட்டத்தையும் ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்றும், தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

சில ஆண்டுகளாக, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக அதிருப்தி குரல் எழுப்புவோர், அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்போர் போன்றோரை ஒடுக்க, இந்தச் சட்டம் அடிக்கடி தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்சேப குரல் எழுப்புவோரை தேச விரோதிகள் என, முத்திரை குத்த பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும், உண்மை நிலவரத்தை ஆராயாமல் பலர் மீது, இந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதையே, தலைமை நீதிபதியின் கருத்து பிரதிபலித்துள்ளது.


அதே நேரத்தில், 1962ல், கேதார்நாத் சிங் என்பவரது வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'தேச துரோகச் சட்டம், அரசியல் சட்டப்படி செல்லும். இருப்பினும், வன்முறையில் ஈடுபடாத வரை அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்க, பொதுமக்களுக்கு உரிமையுண்டு' என்று தெரிவித்துள்ளது. இதிலிருந்தே, இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதில், எச்சரிக்கையான அணுகுமுறை தேவை என்று சொல்லப்பட்டுள்ளது.


இருந்தாலும், அணுமின் நிலையங்களை எதிர்த்துப் போராடியவர்கள், குடிமக்கள் திருத்தச் சட்டம், விவசாய சட்ட திருத்த மசோதாக்கள் போன்றவற்றை எதிர்த்துப் போராடியவர்கள் மீதும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதும், அரசின் கொள்கைகளை எதிர்த்த பத்திரிகையாளர்கள் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனாலும், இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம், 2019ல் வெளியிட்ட தகவல்களின்படி, 3 சதவீதம் பேர் மட்டுமே இந்த தேச துரோக குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராயாமல், கீழ் கோர்ட்டுகள் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க மறுக்கின்றன என்றும் கூறப்படுகிறது.


இதையெல்லாம் பார்க்கும் போது, தலைமை நீதிபதி கூறிய கருத்தை, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளதை உணரலாம். மேலும், 2016ம் ஆண்டில், 'தேச துரோகம் என்பதற்கான விளக்கம், தற்போதைய சட்டத்தில் மிக விரிவாக உள்ளது. எனவே, அதை மாற்றி அமைக்க வேண்டியது குறித்து, பரிசீலிக்க வேண்டியது அவசியம்' என, பார்லிமென்டில், மத்திய அரசே தெரிவித்துள்ளது.


மேலும் ஜனநாயக நாட்டில், அரசின் ஒவ்வொரு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, மாறுபட்ட கருத்துக்கள் எழுவது அவசியம். எல்லாரும் அரசின் முடிவுகளை ஏற்றுக் கொள்வர்; அதற்கு ஜால்ரா போடுவர் என, எதிர்பார்க்க முடியாது. நாட்டின் மீதும், பொதுமக்களின் மீதும், தங்களுக்கு உள்ள அக்கறையை ஒவ்வொரு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தங்களுக்கு தெரிந்த வழியில் வெளிப்படுத்துவர். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அத்துடன், மாறுபட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் சொல்லப்படும் போது தான், எது சிறந்தது என்பதையும், ஒவ்வொன்றிலும் உள்ள பிரச்னைகளையும் அறிய முடியும்.


எனவே, தேச துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படாமல் தடுக்க, தெளிவான வழிகாட்டி குறிப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்.தேவையெனில், தற்போதைய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, தேச விரோத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரிக்க அனுமதித்து விடக்கூடாது. எனவே, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இந்த விஷயத்தில், மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement