dinamalar telegram
Advertisement

குழந்தை பெறாவிட்டால் குற்றமா?

Share

நம் கலாச்சாரத்தில் காலம்காலமாக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களை தெய்வமாக மதித்தனர். ஆனால் இன்றிருக்கும் மக்கட்தொகையை பார்த்தால், குழந்தைகளை பெற்றெடுக்காத பெண்களையே நாம் தெய்வமாக வணங்க வேண்டும் போலிருக்கிறது. குழந்தைப்பேற்றை சுற்றி நமக்கு உருவாகும் மன உளைச்சல்களுக்கு சத்குருவின் பதில் இதோ...

Question:குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை ராசியில்லாதவர்கள் என்று பலர் கருதுகிறார்களே?

சத்குரு:
முன்காலத்தில் நம் முழு சமுதாயமும் வேளாண்மையை சார்ந்துதான் இருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமக்கு விளைவித்து உண்பது தான் பழக்கமே தவிர்த்து, வேட்டையாடி உண்பது நம் வழக்கமல்ல. நம்மில் பழங்குடியினர் வெகுசிலரே வேட்டையாடி வாழ்ந்தனர்.
இதில் வேளாண்மை என்று பார்த்தால், அதற்கு எப்போதும் அதிகமான உடல் உழைப்பு தேவைப்படும். இன்று நாம் கூலிக்கு வேலையாட்கள் சேர்த்து நம் நிலங்களை உழுது கொள்கிறோம். ஆனால் அன்றோ அவரவர் நிலங்களில் அவரவரே பாடுபட்டு உழுது, உணவுப் பொருட்களை விளைவித்தனர்.

முன்காலத்தின் நிலை
இதனால் அக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் எத்தனை குழந்தைகள் இருந்ததோ, அதுவே அவருக்கு இருக்கும் பெரும் செல்வமாக கருதப்பட்டது. அதிலும், கடைசிவரை தங்கள் கூடவே இருந்து, நிலத்தில் உடல் உழைப்பு செய்யக் கூடிய ஆண் குழந்தைகள் இருப்பது மாபெரும் வரமாக இருந்தது. அதனால் அக்காலத்தில் குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அக்குழந்தை ஆணாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த எண்ணம் தொடர, காலப் போக்கில் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றெடுக்கும் பெண் ராசியற்றவள் என்று முத்திரை குத்த ஆரம்பித்தனர்.

அரசர்களின் மனநிலை
இது பொதுமக்கள் கருத்தாக மட்டும் இல்லாமல், 'ஆண் குழந்தைகளைப் பெற்றால் அவள் ராசியானவள்' என்று அரசர்களே நிலைநாட்டத் துவங்கினார்கள். ஆம், அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லையென்றால், அவர்களுக்குப் பின் அந்த நாட்டை யார் ஆள்வது என்பது கேள்விக்குறியாகுமே! தன்னுடைய இரத்தம், தன்னில் ஒரு பகுதியாக இருப்பவன் மட்டுமே அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அரசர்கள் எண்ணத் துவங்கினார்கள் போலும். அவ்வகையில், தங்கள் மரணத்திற்குப் பின்பும் தாங்களே அந்த மண்ணை ஆள்வதாக அவர்களின் உள்மனம் கருதியிருக்கக் கூடும். அதனால் வேறு ஒருவர் ஆட்சிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இது அவர்கள் மனநிலையாக இருந்ததால் ஆண்குழந்தை பிறப்பது அவர்களுக்கு முக்கியமானது.

ஒரு பெண்ணிற்கு எது தேவை?
இப்படி காலகட்டத்திற்கு ஏற்றாற் போல் பல நம்பிக்கைகள் வழக்கத்தில் வந்தன. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறக்கவில்லை எனில், அவள் கேலிப் பொருளாக மாறினாள். இந்த சமூகத்தில் எல்லா வகையான இயலாமையும் பரிகாசத்திற்கு ஆட்படுத்தப்படுகின்றன. ஏன் காது கேட்காவிட்டால், கண் தெரியாவிட்டால், பிறக்கும் போதே உடலில் ஊனத்துடன் பிறப்பது என இவையனைத்துமே கூட ஒரு காலம்வரை சமூகத்தின் பரிகாசத்தை சந்தித்தன, தானே? நீண்ட காலத்திற்குப் பின், ஓரளவிற்கு முதிர்ச்சி ஏற்பட்டு, இப்போதுதான் ஒருவரால் நடக்க முடியவில்லை எனில் அதைப் பார்த்து சிரிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இயலாதவர்களுக்கு, அன்பும், பரிவும், உதவியும் தேவை என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் ஒரு பெண்ணால் குழந்தையை ஈன்றெடுக்க முடியவில்லை எனில், அவளுக்கு அன்பும், பரிவும், அமைதியும் தேவை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் பிடிக்கும். இன்று ஓரளவிற்கு அந்தப் புரிதல் வந்திருக்கிறது என்றாலும், இது நிலைபெற கொஞ்சம் காலம் பிடிக்கலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement