dinamalar telegram
Advertisement

84 வயது சேவுகம்பட்டி ஜெகநாதனின் கதை

Share

ஜெகநாதனின் கதை நாடு சுதந்திரமடைவதற்கு முன் துவங்குகிறது
பசியும் பஞ்சமும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த காலமது
ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஜெகநாதன் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் அதற்கு மேல் படிக்க ஆசையிருந்தாலும் உள்ளூரில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இன்றைக்கு எண்பத்தி நான்கு வயதாகும் ஜெகநாதன் பதினொரு வயதிலேயே உழைக்க ஆரம்பித்தார் இருபது கிலோமீட்டர் துாரம் நடந்து சென்று அங்கு தரப்படும் நெல்லை தலைச்சுமையாக பெற்று திரும்ப இருபது கிலோமீட்டர் துாரம் நடந்து வந்து உரிய இடத்தில் சேர்த்தால் நான்கு ரூபாய் கூலி கிடைக்கும்.
ஆனால் அன்றைய ஆங்கிலேயே அரசு ஒரு ஊரில் இருந்து இன்னோரு ஊருக்கு நெல் கொண்டு செல்ல தடை விதித்ததன் காரணமாக அந்த சுமைகூலித் தொழிலை தொடரமுடியாமல் போனது.
இன்றைய சிவகெங்கை மாவட்டம் திருப்பத்துாரில் உள்ள ஒருவர் வீட்டில் சாப்பாடு போட்டு மாதம் ஒரு ரூபாய் ஐம்பது பைசா சம்பளத்திற்கு வேலை வேலை பார்த்தார்
உறவினர் ஒருவர் குடும்ப கஷ்டம் என்று சொல்லி ஐம்பது ரூபாயை பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை ஜெகநாதனின் சம்பளத்தில் கழித்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் அந்த செல்வந்தர் வீட்டில் காணாமல் போனாதாக கருதப்பட்ட தங்க நகை ஜெகநாதனின் கண்ணில் பட்டது அதை நேர்மையுடன் கொண்டு போய் கொடுத்தார்
செல்வந்தருக்கு பிடித்துப் போய் மாத சம்பளத்தை இரண்டு ரூபாயாக உயர்த்தினார் அவரிடம் வேலை பார்த்து தனது கடனை அடைத்துவிட்டு ஊர் திரும்பினார்.
ஊரில் நிலவரம் ஒன்றும் சரியில்லை
மீண்டும் ஒரு உறவினர் மூலமாக திருச்சியில் உள்ள ஒரு ஒட்டலில் வேலைக்கு சேர்ந்தார் சாப்பாடு போட்டு சம்பளம் நான்கு ரூபாய்
ஒட்டலுக்கு பால் கொடுக்கும் வீட்டில் உள்ள ஒரு பாட்டியின் உதவியால் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை கிடைத்தது,சம்பளம் 42 ரூபாய்.
இந்த நிலையில் தன்னை தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்த தனது தாய்மாமன் இறந்துவிட அவரது குடும்பத்தையும் நிலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காரணமாக பியூன் வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆனார்
கிராமத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பிய காய்கறி பழங்கள் போன்றவற்றிக்கான பணம் தர மறுத்த சென்னை வியாபாரியிடம் பணம் வாங்க சென்னை வந்த ஜெகநாதனுக்கு பணம் கிடைக்கவில்லை ஆனால் நிறைய அனுபவம் கிடைத்தது.
அங்கே கிராமத்தில் சொற்ப விலைக்கு வாங்கி சென்னையில் நல்ல விலைக்கு விவசாய பொருட்கள் விற்கப்படுவதை அறிந்தார் இதை சொந்த பந்தங்களிடம் சொன்னார்
அப்படியானால் ஒன்று செய் சென்னையில் போய் நீ கடைபோடு உன் கடைக்கு விவசாய பொருட்களை அனுப்பிவைக்கிறோம் நீயும் பிழைத்துக் கொள் எங்களுக்கும் பிழைப்பைக் கொடு என்றனர்
சரி என்று வந்தவரை,சென்னை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை சில பல சிரமங்களை கொடுத்த பின் வாரி அணைத்துக் கொண்டது.
கொத்தவால் சாவடியில் சிறு வியாபாரியாக தனது வாழ்க்கையை துவக்கினார்.வாரத்தில் ஏழு நாள் வருடத்தில் 365 நாட்கள் என விடுமுறை இல்லாமல் காலை நான்கு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரை கடுமையாக உழைத்தார் விறுவிறுவென உயர்ந்தார்.
சில்லரை வியாபாரியாக இருந்தவர் மொத்த வியாபாரியானார் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார். ஜெகநாத் அண்ட் கோ என்ற பெயரில் வெளி மாநிலங்களுக்கு தக்காளி வெங்காயம் விற்பனை செய்தார்,சொந்த வீடு நிலம் என்று அந்தஸ்து உயர்ந்தது.
தனது செல்வத்தையும் செல்வாக்கையும் நல்ல விதமாக பயன்படுத்தினார் காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளராக இருந்து பல நல்ல காரியங்களை செய்தார் அதில் கோயம்பேடு காய்கறி கடைகளுக்கு நியாய விலை நிர்ணயம் பெற்றது முக்கியமானதாகும்.சொந்த ஊரில் இருந்த பெருமாள் கோவிலுக்கு பெரியளவில் கும்பாபிசேகம் நடத்தினார்,பள்ளி வகுப்பறைக்கு நன்கொடை கேட்டு வந்தவர்களிடம் நானே நல்ல முறையில் அந்த வகுப்பறையைக் கட்டித்தருகிறேன் என்று சொல்லி கட்டிக்கொடுத்தார்.
இவரது நேர்மையும் உண்மையும் போலித்தனமில்லாத பேச்சும் பாசங்கின்றி பழகுவதும் இவரை சிங்கப்பூர்,மலேசியா அமெரிக்கா பாரீஸ் லண்டன் வரை அழைத்துச் சென்றது.
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் வந்த பாதையை மறக்காதவர் ஏற்றிவிட்ட ஏணியை மறக்காதவர்.
நீ தைரியமா போ உனக்கு வேணுங்கிற தக்காளி சரக்கை நான் அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி உதவிய உறவினர் வெங்கிடுசாமி,வாழ்த்தி வழியனுப்பிய கோவில் பூசாரி நாகமநாயக்கர்,இந்தா செலவிற்கு பத்து ரூபாய் வைத்துக் கொள் இது பல ஆயிரமாக பெருகும் பார்த்துக்கொள் என்று மனசார வாழ்த்திய பாட்டி ராமஜெயம்,தாயாக இருந்து வளர்த்த தாய்மாமன் சோலைமலை,சென்னைக்கு வந்த புதிதில் உதவிய சுக்கூர் பாய் போன்றவர்களை இப்போதும் மனதில் வைத்து நன்றி கூறுகிறார்.
வீட்டிலும் வெளியிலும் உள்ளவர்கள் நலத்திற்கும் வளத்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளை பொறுப்பாக செய்து முடித்துவிட்டு தற்போது முழு ஒய்வில் இருப்பார் என்று நினைத்தால் அதுதான் இல்லை.
நாற்பது ஆண்டுகளாக தினமலர் வாசகராக இருக்கும் 84 வயது ஜெகநாதன் பத்திரிகையில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு சொந்தமானவர்களுக்கு உடனடியாக போன் போட்டு வாழ்த்து தெரிவித்துவிடுவார் . மேலும் உதவி கேட்டு வரும் செய்திகளில் இடம் பெறுபவர்களுக்கும் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் அவரிடம் உள்ள பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று.
தான் இந்த அளவிற்கு வந்ததற்கும் வளர்ந்ததற்கும் காரணம் ஊரில் உள்ள தனது இஷ்ட தெய்வம் ஸ்ரீ சோலை மலை அழகர் பெருமாள் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் தற்போது அந்தக் கோவிலின் தலவரலாறு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார் இதற்கான ஆவணங்களை தேடி இளஞைரைப் போல ஒடிக்கொண்டே இருக்கிறார் இதைப்படிப்பவர்கள் அவருக்கு இது குறித்து உதவ முடிந்தால் சந்தோஷப்படுவார்.
சிறிய வயதில் தனக்காக ஒட ஆரம்பித்து இப்போது சமூகத்திற்காக ஒடிக்கொண்டு இருக்கும் பெரியவர் ஜெகநாதனை வாழ்த்த விரும்புவோருக்கான எண்:87782 68848.

-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • satheesh kumar - Kanyakumari,இந்தியா

    உழைப்பே உயர்வு.எவ்வளவு வளர்ந்தாலும் கை தூக்கி விட்டவர்களை மறக்காத மாமனிதர்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement