கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் அவர்களை போலீசார் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இந்நிலையில், அதேபோன்ற சம்பவம் சமீபத்தில், சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த மாவட்டத்தின் இடையப்பட்டி, வில்வனுார் மேற்கு காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்ற மளிகை வியாபாரி, போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ஒருவரால் தாக்கப்பட்டதில் மரணம் அடைந்துள்ளார்.
தங்கள் ஊருக்கு அருகேயுள்ள மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்திற்கு சென்று மது அருந்தி, நண்பர்களுடன் திரும்பும் போது, வனத்துறை சோதனை சாவடியில், போலீசாருக்கும், முருகேசனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முருகேசன் மரணம் அடைந்ததால், அவரின் மனைவியும், மூன்று பிள்ளைகளும் நிர்கதியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முருகேசனை தாக்கிய எஸ்.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டு, அவர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, சாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பல கட்சிகள், சேலம் சம்பவம் விஷயத்தில் வாய் திறக்க மறுப்பதும், போலீஸ் அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்குவதும் விந்தையாக உள்ளது. போலீஸ் அத்துமீறலில், அவர்களின் கொடூர தாக்குதலில், விசாரணை கைதியாக உள்ளவர்களும், அப்பாவிகள் பலரும் இறப்பது அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், போலீஸ் உயர் அதிகாரிகள், கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஆலோசனைகள் வழங்கினாலும், நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலைமை மாற வேண்டும் எனில், தற்போதைய போலீஸ் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழ, பொதுநல அமைப்புகளும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் ஒருமித்த அளவில் குரல் கொடுக்க வேண்டும். கடந்த ௨௦௧௭ - ௧௮ம் ஆண்டில், தேசிய மனித உரிமைகள் கமிஷன் அளித்த அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் ௧௫க்கும் மேற்பட்டோர், போலீஸ் காவலில் வன்முறை மற்றும் கொடுமைகளுக்கு ஆளாவதாகவும், நீதிமன்றம் மற்றும் போலீஸ் காவலில், ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒன்பது பேர் பலியாவதாகவும் தெரிவித்துள்ளது.
அதனால், சிறிய குற்றங்களுக்காக போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு அப்பாவிகள் பலியாவது, இனியும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும். அதற்கு போலீஸ் துறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பயிற்சியின் போது, கடுமையான ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றும்படி போதிக்க வேண்டும். போலீஸ் காவலில், நீதிமன்ற காவலில் அப்பாவிகள் இறந்தால், கடும் தண்டனை உண்டு என்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. அதனால் தவறு செய்வோருக்கு பயம் இல்லாமல் போகிறது.
மனித உரிமை அமைப்புகள் பிறப்பிக்கும் ஆணைகளை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் சட்ட விதிகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்த அமைப்புகளின் உத்தரவுக்கு அதிக வலுசேர்க்க வேண்டியது அவசியம். மேலும், இத்தகைய போலீஸ் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழக்கும் குடும்பங்களை காப்பாற்ற, தவறு செய்த போலீசாரின் சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை பிடித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, மாநில அரசு எடுக்க வேண்டும். தவறு நிரூபணமானால், பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
ஒரு கட்சியின் ஆட்சியில் தவறு செய்துவிட்டு, மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், 'சஸ்பெண்ட்' போன்ற துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் மீண்டும் பணியில் சேருவது தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற போலீஸ் அத்துமீறல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் கூட அமைக்கலாம்.சமூகத்திற்கு சேவை செய்வது, பொதுமக்கள் உயிரை காப்பாற்றுவது, பொதுச் சொத்துக்களை காப்பது, அடக்குமுறைகளை தடுப்பது, அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு மதிப்பளிப்பது போன்றவற்றை அடிப்படை கடமையாக நினைத்து போலீஸ் துறையில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். அதற்கு சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!