dinamalar telegram
Advertisement

கொரோனா 3வது அலை தடுப்பது நம் கையில்!

Share

கொரோனா 2வது அலையின் துவக்கத்தில், நாடு முழுதும், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 50 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.இது, சீக்கிரமே கொரோனாவை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், 'அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களில், கொரோனா 3வது அலை தாக்கும்' என, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளது, மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை உருவாக்குவதாக உள்ளது.


கொரோனா உயிரிழப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவ துறையினர் கூறிய போது, ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய மக்கள், தற்போது தடுப்பூசியே தீர்வு என்பதை உணர்ந்து, அதை போடுவதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் தினமும் கூட்டம் நிரம்பி வழிவதே அதற்கு சாட்சி. அதே நேரத்தில், 3வது அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு முடிக்கும் வரை, கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்என மருத்துவ நிபுணர்கள் கூறுவதை புறக்கணிக்க முடியாது. எனவே, மக்கள் கூட்டம் அதிகம் கூடும் சந்தைகள் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகள் சில மாதங்களுக்கு தொடர்வது அவசியம். திருவிழாக்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கும் தடைகள் நீடிக்க வேண்டும். அதற்கேற்ற வகையிலான உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும்.

கொரோனா முதல் அலையின் பாதிப்பு, நாடு முழுதும் பிப்ரவரியில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த போது, பல கொரோனா சிகிச்சை முகாம்கள் மூடப்பட்டன. அப்போது, முக கவசம் அணிந்திருப்போர், அதை தாடை வரை இழுத்து விட்டுக் கொள்வது, ஏராளமான வாகனங்களை இயக்க அனுமதித்து, சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது, சுற்றுலா தலங்களில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட அனுமதித்தது போன்றவற்றால் தான், இரண்டாம் அலை பரவத் துவங்கி, ஏப்ரல் மாதத்திற்குப் பின் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கி விட்டது. தற்போதும், நாம் முழுமையாக திருப்தி அடையும்அளவுக்கு கொரோனா பரவல் குறையவில்லை. தினமும் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 50 ஆயிரம் அளவுக்கு உள்ளதால், இந்த சூழ்நிலையில், நாம் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தினால், அது மூன்றாவது அலையை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போன்றதாகும்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த போது, ஏப்ரல், மே மாதங்களில் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள், ஆம்புலன்ஸ்களில் காத்திருந்ததையும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, பல நுாறு உயிர்கள் பறிபோனதையும், சடலங்களை எரிக்கும் மயானங்கள் நிரம்பி வழிந்ததையும், உறவினர்களின் உயிர்களைக் காப்பாற்ற, ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ஏராளமானவர்கள், பல இடங்களில் வரிசையில் காத்திருந்ததையும், நாம் எளிதில் மறந்து விடக்கூடாது. அத்துடன், மூன்றாவது அலை தாக்கினால், அது பெரும்பாலும் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது. எனவே, அதற்கு நாம் இடம் தந்து விடக்கூடாது. குழந்தை செல்வங்கள் எந்த வகையிலும் பாதிப்புக்கு ஆளாக அனுமதிக்க கூடாது.


மேலும், கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளிலும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை ஒப்பிடுகையில், நாம் பின்தங்கித் தான் இருக்கிறோம். அதுவும், இரண்டாவது அலை பரவலின் போது, அதிக உயிரிழப்புகள் ஏற்பட முக்கிய காரணம். எனவே, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும். இதன் வாயிலாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, சாம்பிள்களை அனுப்பி அவற்றின் முடிவுக்காக காத்திருப்பதும், சிகிச்சை பெற தாமதமாவதும் தவிர்க்கப்படும் தொற்று பாதித்தவர்களை, விரைவில் தனிமைப்படுத்தவும் முடியும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3.5 சதவீதம் பேர் மட்டுமே, இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 15 சதவீதம் பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகளையும் முடிந்த அளவுக்கு இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.

அத்துடன், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றிலும், ஊழியர்கள் முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை இன்னும் சில மாதங்கள் நீடிக்க அரசுகள் உத்தரவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு உருவானால், அதை உடனடியாக தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய வேண்டும்.அப்போது தான், மூன்றாவது அலை தாக்குவதை முறியடிக்கலாம். அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை தவிர்க்கலாம். தளர்வுகளால் மக்கள் மனநிறைவு அடைந்து விடக்கூடாது. இன்னும் கொஞ்ச காலம் உஷாராக இருப்பதே நல்லது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement