dinamalar telegram
Advertisement

ஒட்டத்தை நிறுத்திய மில்கா சிங்(கம்).

Share

சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக முதல் தங்க பதக்கத்தை பெற்றுத் தந்தவரும், ஏாராளமான விளையாட்டு வீரர்களின் ஆதர்ச நாயகராகவும் விளங்கிய,‛ பறக்கும் சீக்கியர்' பட்டம் பெற்ற மில்கா சிங் கொரோனாவிற்கு பிந்திய சிகிச்சை பலனிக்காமல் இறந்தார்.சுதந்திரத்திற்கு முன் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்து இப்போது பாக்கிஸ்தானாக உள்ள கோவிந்த்புரம் பகுதியில் பிறந்தவர்.
சுதந்திரத்தின் போது நாடு பிளவு பட்ட போது மில்கா சிங்கின் பெற்றோரும் உற்றோரும் கொல்லப்பட்டனர்.உயிர்பிழைக்க இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த பல ஆயிரக்கணக்கானவர்களில் மில்கா சிங்கும் ஒருவர்.
இங்கு வந்த பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் அங்கு உடல் திறனுக்காக நடந்த ஒட்டப்பந்தயத்தில் இவர் காட்டிய தனித்திறன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
முறையான பயிற்சிக்கு பிறகு நடைபெற்ற பல போட்டிகளில் பதக்கங்களை குவித்தார் ஆசியா மற்றும் காமன்வெல்த் போட்டிகள் மூலம் நாட்டிற்கு ஐந்து தங்க பதக்கங்களை பெற்றுத் தந்தார்.
1960 ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 400 மீட்டர் போட்டியில் நுாலிழையில் பதக்கத்தை தவறவிட்டார் ஆனாலும் அவர் அந்த துாரத்தை கடந்த நேரம் 45.73 வினாடியாகும்.இந்த சாதனை நாற்பது ஆண்டுகளாக இந்தியர் எவராலும் முறியடிக்கபடாத சாதனையாகவே இருந்தது.பாக்.கில் நடைபெற்ற போட்டியின் போது, என்னையாடா இந்த நாட்டைவிட்டு ஒடவிட்டீர்கள் இப்போது பார் உன் நாட்டு வீரர்கள் மட்டுமல்ல உலகமே என் பின்னால்தான் ஒடிவருகிறது என்று சொல்லாமல் சொல்லும்படியாக, அதிக வேகத்தில் ஒடினார் அன்று இவர் ஒடியதைப் பார்த்துவிட்டு இவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம்தான் ‛பறக்கும் சீக்கியர்' என்ற பட்டமாகும்.இந்தியாவில் விவசாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிக் கொண்டு இருந்த இளைஞர்கள் மத்தியில் விளையாட்டையும் வீரத்தையும் அந்நாட்களில் கொண்டு போய்ச் சேர்த்தவர் மில்கா சிங்தான்.
இவரை ரோல் மாடலாகக் கொண்டு நாடு முழுவதும் விளையாட்டு வீரர்கள் முகிலை கிழித்து வந்த மேகம் போல வெளிப்பட்டனர்.
‛ஓடு மில்கா ஓடு ' என்று இவரது கதை சினிமாவாகவும் வந்து சக்கை போடு போட்டது, விளையாட்டு தன் ரத்தத்தில் ஊறியது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இவர் தன் மகனையும் சிறந்த விளையாட்டு வீரராக்கினார். இன்று பிரபலமாக விளங்கும் கால்பந்தாட்ட வீரர் ஜீவ் மில்கா சிங் இவரது மகனாவார்.
இப்படி வாழ்க்கையை விளையாட்டிற்காக முழுமையாக அர்ப்பணித்த மில்கா சிங் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மீண்டார் ஆனால் பிந்திய சிகிச்சையில் பலனின்றி தனது 91 வயதில் நேற்று இறந்து போனார். தொற்று காரணமாக கடந்த வாரம்தான் இவரது மனைவி நிர்மல் இறந்து போனார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பத்ம ஸ்ரீ விருது உள்ளீட்ட பல்வேறு விருதுகள் பெற்ற இவர் தன் வாழ்க்கையை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் அது வளரும் விளையாட்டு வீரர்களுக்கு பாடமாகும்.
அந்தப் புத்தகத்தில், நான் நுாலிழையில் தவறவிட்ட ஒலிம்பிக் தடகள போட்டிக்கான பதக்கம் இன்னமும் பெறப்படாமல்தான் இருக்கிறது விரைவில் நமது வீரர்கள் அதைப் பெறவேண்டும் அதுதான் என் ஒரே விருப்பம் வேண்டுகோள் வேண்டுதல் என்று குறிப்பிட்டிருந்தார்.
நடைபெற உள்ள டோக்கியா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நமது வீரர்கள் மில்கா சிங்கின் கனவை நனவாக்குவதே அவருக்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement