dinamalar telegram
Advertisement

புத்தநேசனும் மனசாட்சியும்..

Share


புத்தநேசன் குடும்பத்தார் நமக்கு போன் செய்து எங்கள் கோரிக்கை நிறைவேற தயவு செய்து வேண்டிக் கொள்ளுங்கள் என்று கேட்டனர்
யார் இந்த புத்தநேசன்
நாகப்பட்டினத்தில் வசிப்பவர்,திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளியிலல் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார்.மனைவி கோமதி பள்ளியில் படிக்கும் மகள் சுவாதியா என்று சின்னக்குடும்பம்.
சிறு வயது முதலே உழைத்து பிழைக்க வேண்டும், சுற்றுச் சுழல் காக்க வேண்டும்,மரம் நட வேண்டும், சக மனிதர்கள் சிரமத்தை முடிந்தவரை போக்க வேண்டும் என்பது போன்ற உயர்ந்த குணங்களால் வளர்ககப்பட்டவர்.
கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக பள்ளிக்கு சரி வர செல்ல முடியவில்லை, வழக்கமாக பணிகளைச் செய்ய முடியவில்லை. இதற்கு இவர் காரணமில்லை என்றாலும் வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்யவில்லையே என்ற இவரது மனசாட்சி இவரைபல நாட்கள் துாங்கவிடாமல் செய்திருக்கிறது.
வேலையை விட்டு விடுவோம் இதனால் முதலில் தனது சம்பள செலவு அரசுக்கு மிச்சமாகும் இரண்டாவது தான் வேலையை விட்டால் பணப்பலனாக பல லட்ச ரூபாய் கிடைக்கும் அதை அப்படியே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார்.உடனடியாக தன்னை வேலையில் இருந்து விடுவித்து அதன் பணப்பலன் முழுவதையும் நிவாரண நிதியாக எடுத்துக் கொள்ளச் சொல்லி கடிதம் எழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தார்.
இப்படி ஒரு கோரிக்கை கடிதத்தை எதிர்பார்க்காத கலெக்டர் நீங்கள் வேலையை விட்டால் உங்களுக்கு பென்ஷன் கூட கிடைக்காது தெரியுமா? என்று கேட்டு இருக்கிறார் நன்றாக தெரியும் சார் என்று புத்தநேசன் பதில் தந்திருக்கிறார்.
வேலை கிடைப்பதே சிரமம் அதிலும் அரசு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு போல உங்களுக்கு இன்னும் ஐந்து வருடத்திற்கு மேல் சர்வீஸ் இருக்கிறது வீட்டில் இருக்கும் மனைவி படித்துக் கொண்டு இருக்கும் மகள் எதிர்காலம் பற்றி யோசித்தீர்களா? என்ற அடுத்த கேள்விக்கு என்னை விட அவர்கள்தான் சார் நான் வேலையை விட்டுவிட்டு கிடைக்கும் பணபலனை நிவாரண நிதியாக கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார் புத்தநேசன் அருகில் இருந்த இருவரும் அதை ஆமோதித்தனர். சரி நான் கடிதத்தை கல்வித்துறைக்கு அனுப்புகிறேன் என்று சொன்ன கலெக்டரிடம் இருந்து விடைபெறும் முன் கடைசியாக ஒரு வேண்டுகோள் என்றார் புத்தநேசன், என்ன ? என்றார் கலெக்டர்.
என்னால உழைக்காமல் இருக்க முடியாது, அதுனாலே வேலையை விட்டபிறகு கொரோனா நிவாரண பணிகள் எது என்றாலும் கொடுங்கள் சார், நானும் எனது மனைவியும் இலவசமாக செய்யத்தயராக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
நிமிர்ந்து பார்த்த கலெக்டருக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை எழுந்துநின்று கைகூப்பி புத்தநேசன் குடும்பத்தை வழியனுப்பிவைத்தார்.
இந்த செய்தி மறுநாள் ஊடகங்களில் கசிந்ததும், சுளையா எழுபது ஆயிரம் சம்பளம் இந்தக் காலத்தில் யார் கொடுப்பாங்க அதுவும் அரசாங்க வேலை உனக்கு என்னய்ய புத்தி கித்தி பிசகிடுச்சா என்றெல்லாம் உறவுகளும் நட்புகளும் ஆலோசனை என்ற பெயரில் பணத்தையே பிரதானமாகக் கொண்ட பொது புத்தியுடன் அறிவுரை சொல்ல சின்ன சிரிப்புடன் அதை புத்தநேசன் எதிர்கொண்டாரே தவிர ஏற்றுக் கொள்ளவில்லை.
நாட்கள் நகர்ந்தன நாம் நமது விருப்பத்தை சொல்லிவிட்டோம் அதற்கு மேல் அரசாங்கத்தின் விருப்பம் எப்படியோ அப்படியே நடந்து கொள்வோம் என்று புத்தநேசன் நினைக்கவில்லை.
கலெக்டர் அனுப்பிய தனது விண்ணப்பம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்று விசாரித்தார் அதை விரைவு படுத்தினார் எல்லோருக்கும் இந்த விண்ணப்பம் புதுமாதிரியாகப்படவே தங்கள் கோர்ட்டில் இருக்கும் பந்தை அடுத்த கோர்ட்டிற்கு அடித்துவிடுவது போல விண்ணப்ப பைலை மேலதிகாரிகள் முடிவிற்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில்தான் புத்தநேசன் மற்றும் அவரது மனைவி கோமதி ஆகியோர் நமக்கு போன் செய்து அண்ணே எங்க விண்ணப்ப மனு எப்படியாவது ஏற்கப்படணும்னு வேண்டிக்குங்கண்ணே என்றனர்.
சரி அது வரை உங்க சம்பளத்தை உங்க விருப்பப்படி உதவலாமே என்றதும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது, எங்க மகள் சுவாதியா கூட நாங்கள் கொடுத்த கைச்செலவு பணம் முழுவதையும் கொண்டு போய் இரண்டு முறை கலெக்டர பார்த்து கொடுத்துட்டு வந்துட்டா? முழுசா பெருசா ஒரு தொகை அரசாங்கத்திற்கு கொடுக்கணும் அதுதான் எங்க விருப்பம் என்று சொல்லி முடித்தனர்.
புத்தநேசனுடன் பேசுவதற்காக எண்:96559 32781.
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    செய்திக்கு செய்த தவறான முடிவு .மாற்றிக்கொள்ளுங்கள் .

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement