dinamalar telegram
Advertisement

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது அவசியம்

Share

பெட்ரோல், டீசல் விலையை, நீண்ட காலமாக மத்திய அரசே நிர்வகித்து வந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகமாக இருந்தாலும், உள்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்றபடி, மக்களின் நலன் கருதி, கணிசமான அளவில் மானியங்களை அளித்து, பெட்ரோல், டீசல் விலை உயராமல் தடுக்கப்பட்டது.

இதன்பின், 2010ம் ஆண்டில் கொள்கையை மாற்றிய மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. இதன்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், எண்ணெய் நிறுவனங்களே, அவ்வப்போது பெட்ரோல் விலையை மாற்றி வந்தன.

அதைத் தொடர்ந்து, 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அரசு, டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தையும், பொதுத்துறை நிறுவனங்கள் வசமே ஒப்படைத்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திட வேண்டும்; கச்சா எண்ணெய் விலை குறையும் போது, இரண்டின் விலையும் குறைக்கப்பட வேண்டும்.

ஆனால், சமீப ஆண்டுகளாக இந்த முறையானது சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது; விலை குறையும் போது குறைக்கப்படுவதில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை என, காங்கிரஸ் உட்பட, பல எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

கடந்த 2008ல், 140 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் முதல் அலை, உலகையே உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில், 20 டாலர்களாக சரிந்தது. சர்வதேச சந்தையில், இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மாறாக, அப்போது நடைமுறையில் இந்த விலையையே தொடர்ந்தன. இது தொடர்பாக, விமர்சனங்கள் எழுந்தபோது, கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய அரசு கணிசமான தொகையை செலவு செய்கிறது. அதை ஈடுகட்டும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தற்போது, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையானது, பேரல் ஒன்றுக்கு 70 டாலர்கள் அளவில் தான் உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை எட்டி விட்டது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை 98.63, டீசல் விலை 91.94 ரூபாய். போக்குவரத்து செலவு உட்பட, சில காரணங்களால், மாநிலத்தின் சில நகரங்களில் அவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது.

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 46.56 டாலராக இருந்த பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த மே மாதத்தில் 99.95டாலராக உயர்ந்துள்ளது. அதாவது 20 டாலர்கள் அளவுக்கு தான் உயர்வு கண்டுள்ளது.அதே நேரத்தில், 2018 ஜூன் 19ல், பெட்ரோல் விலை 98.02, டீசல் விலை 57.41 ரூபாயாகவும் இருந்தது. அதை ஒப்பிடுகையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையானது, லிட்டருக்கு 30 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.அதனால், இந்த விலை உயர்வு கடுமையானது, சாதாரண மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.


அதனால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது.பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஆரம்பத்தில் ஒரு மாதம் என்ற ரீதியிலும், பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற ரீதியிலும் மாற்றம் செய்து வந்தன. 2018ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி தான், தினமும் விலையை நிர்ணயிக்கும் முறையை அறிமுகம் செய்தன. அதன்பின், இவ்வளவு விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முதல், பொருளாதார ரீதியாக, பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தொற்று பரவல் முழுதும் கட்டுக்குள் வந்தாலும், பாதிப்புகளில் இருந்து அனைத்து தரப்பினரும் மீள, குறிப்பிட்ட மாதங்களாகும் என்பதில் சந்தேகமில்லை.அதனால், மக்களின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள், இந்த எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை கணிசமாக குறைத்தால் நல்லது. இந்த விஷயத்தில், மத்திய அரசு கருணை மனப்பான்மையோடு விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசும், தங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கும் வகையிலான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதால், அவற்றை குறைத்தாலே பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement