dinamalar telegram
Advertisement

உயிருக்கு மன்றாடுகிறது ஒரு குரங்கினம்...

Share


பெண்கள் தங்களின் உதடுகளில் பூசும் உதட்டுச்சாயம் நீடித்திருக்க
முகங்களில் தடவிக்கொள்ளும் கீரிம் போன்றவைகளின் மென்மை அதிகரிக்க
இப்படி அழகு சாதனங்களின் குணங்களை அதிகப்படுத்த பாமாயில் கூறுகள்தான் பயன்படுத்தப்படுகிறது.
உடல்ஆரோக்கியத்திற்கு,முக அழகிற்கு என்று பல்வேறு பசப்பு வார்த்தைகளால் முன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது, பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணமழை பொழிகிறது.
இதன் காரணமாக நிறுவனங்கள் குறுகியகால எண்ணெய் பனைமரங்களை மானாவாரியாக நடுவதற்கு காடுகள் தேவைப்படுகிறது.

இதற்காக காடுகளை உருவாக்கமுடியாது, என்ன செய்யலாம் இருக்கிற காடுகளை அழித்துவிடுவதுதான் ஒரேவழி.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள காடுகளில் கையை வைத்தால்சுட்டுவிடுவார்கள்,காரணம் அவர்களுக்கு தெரியும்காடுகள்தான் நம் நாட்டைக் காக்கும் செல்வங்கள் என்று.
வளரும் நாடுகளான இந்தியாவில் பாதிப் பேர் பல்வேறு வித போதைகளில் எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாதிருந்தாலும் மீதிப் பேர் வரும் தலைமுறைக்கான விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் இவர்களை சமாளித்து உடனடியாக காடுகளை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதில்லை.
பிறகு யார் இருக்கிறார்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படக்கூடிய இந்தோனேசியாபோன்ற நாடுகள் இருக்கின்றனவே.
கொஞ்சமாக உங்கள் நாட்டு காடுகளை விட்டுக்கொடுங்கள், அதில் நாங்கள் கொஞ்சமாக பனைமரம் வளர்த்து அதில் இருந்து எண்ணெய் எடுத்து வரும் லாபத்தில் பெரும் பங்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்.
மரம்தானே வளர்ப்பதாக கூறுகிறார்கள் பதிலுக்கு பணமும் தருகிறார்களே என்று தலையாட்டினார்கள் அப்புறம் என்ன நாம் பள்ளிக்கூடத்தில் படித்த மழைக்காடுகள் என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவின் போர்னியா தீவுக்காடுதான் பாமாயில்மரத்திற்கு முதல் இரையானது.
போர்னியாதீவு தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மூன்றாவது பெரிய தீவு இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்கள் உள்ளன. அதைவிட அதிசயமாக உலகில் அருகி வரும் இனமான உராங் ஊடான் என்ற குரங்கினம் வாழ்ந்து வருகிறது. கொரில்லா,சிம்பன்சி போன்றதுதான் என்றாலும் உராங் ஊடான் தனித்துவமானது மனிதர்களை மிஞ்சும் பாசம் கொண்டது.
குட்டைக்கால்கள் நீண்டகைகள் ஆரஞ்சு நிறத்துடன் அது நெஞ்சை நிமிர்த்தி நடந்துவரும் அழகேதனிதான்.
பழங்களை சாப்பிட்டு மரங்களில் வாழும் மிக மெதுவான யாருக்கும் எந்த தீங்கும் தராத அமைதியான விலங்கினம்.
குழந்தைகளே உலகம் என வாழ்வது, குட்டிக்குரங்கு ஒரு கிளையில் இருந்து இன்னோரு கிளைக்கு செல்வதற்காக தாய்க்குரங்கு தனது உடலையே பாலம் போல அமைத்துதரும் ,இரு மரத்தின் கிளையை பிடித்தபடி உயிரைப் பொருட்படுத்தாமல் ஊசலாடியபடி இருக்கும்தாய்க்குரங்கின் முதுகின் மீது நடந்து சென்று குட்டி மறு கிளையை அடையும்,குட்டி தானாக கிளைகளுக்கு தாவும் வரை இது சாதாரணமாக நிகழும்.
இது ஒரு உதாரணம்தான் இப்படிதான் பெற்ற பிள்ளைக்காக தாய்க்குரங்கு பல சிரமங்களை தாங்கிக்கொள்ளும் ஆனால் அதை எல்லாம் தியாகம் என்ற கணக்கில் ‛பேஸ்புக்கில்' பதிவிடுவதி்ல்லை தன் கடமையாகவே கருதும்.
பிறந்து வளர்ந்து இரண்டு மூன்று வருடங்களானாலும் தாய்ப்பால் கொடுக்கும், ஐந்து வருடங்களானாலும் உணவு தேடிக்கொண்டு வந்துதரும்.அதன் வாழ்க்கை சுமராக நாற்பது வருடங்கள் என்றால் இருபது வருடங்கள் வரை தாயுடன்தான் இருக்கும். அப்படி ஒரு பாசக்கார குடும்பம்தான்உராங்குட்டான்குடும்பம்.
அது பாட்டிற்கு உயரமான காட்டுமரங்கள் அது தரும் பழங்கள் தனது குடும்பம் குழந்தைகள் என்று தீவில் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தது அதற்கு பங்கம் வைக்கவந்ததுதான் இந்த எண்ணெய்பனை.
ஒவ்வொரு மரமாக வெட்டி எப்போது காட்டை அழித்து பிறகு பனைநட்டு துட்டு பார்ப்பது என்று பொறுமை இழந்த பனை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக காட்டை அழிக்கும் உபாயமாக காட்டிற்கு தீ வைத்தது.
ஆயிரம் ஆண்டு மரங்கள் அழிந்ததுஅதில் தஞ்சம் அடைந்திருந்த உராங் ஊடான் குரங்குகள் எங்கு போவது எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் நெஞ்சில் அடித்துக் கொண்டு ஊளையிட்டது நெருப்பு சுடாமல் குழந்தைகளை அனைத்துக் கொண்டு ஒடி தப்பிக்க முயன்றது அது முடியாமல் கருகி இறந்தது இல்லையில்லை இறந்தன.உண்யைில் கருகியது உராங் ஊடான் காட்டுயிர்களின் சந்தோஷமும் நிம்மதியும்தான் சுதந்திரமும்தான்.
யாருமற்ற காட்டுக்குள் எழுந்த இந்த பாவப்பட்ட விலங்குகளின் அவலக்குரல்கள் மரண ஒலங்கள் யார் காதிற்கும் கேட்கவில்லை, கேட்கும் நிலையிலும் யாரும் இல்லை பணம் காதைப் பொத்தியது.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் இன்றைய தினம் கூட அங்கே எங்கோ ஒரு காடு தீவைத்து எரிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும், ஏதோ ஒரு உராங் ஊடான் குடும்பம் அந்த தீக்கு பலியாகிக் கொண்டுதான் கிடக்கும்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரும் பெங்களூருவில் வளர்ந்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான பிரபல காட்டுயிர் போட்டோகிராபரான தாமஸ் விஜயனுக்கு பிடித்த வன விலங்குகளில் உராங் ஊடானும் ஒன்று.
அழிந்து வரும் இந்த அப்பாவி இனத்தைப் பற்றி வெளி உலகிற்கு காட்டுவதற்காக அது பற்றிய டாகுமெண்டரி போட்டோ எடுப்பதற்காக போர்னியா தீவிற்கு சென்றார்.
அங்கு நாள் கணக்கில் தங்கியிருந்து மரங்களின் மீது மணிக்கணக்கில் காத்திருந்து உராங் ஊடான் குரங்குகளை படம் எடுத்தார்.
எடுத்த படங்களில் ஒன்றை இயற்கை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் டிடிஎல் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய வனம் தொடர்பான புகைப்படப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
வந்த எட்டாயிரம் படங்களில் இவர் அனுப்பிய படம் நடுவர்களால் முதல் பரிசுக்குரிய படமாக தேர்வு செய்யப்பட்டது.
‛தலைகீழாகச் செல்லும் உலகம்'என்ற தலைப்பில் கடந்த வாரம் பரிசு பெற்ற இந்த படம் இப்போது ஒட்டு மொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பழமையான மரங்களையும் விலங்குகளையும் அழித்துதான் பனைஎண்ணெய் எடுக்கவேண்டுமா? என்ற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும்எழுந்துள்ளது, அந்தவகையில்ஒருபடத்தின்மூலம்தாமஸ்விஜயன்பாடம்எடுத்துள்ளார்.
அடுத்த முறை உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளும் போது சற்றே உற்றுப்பாருங்கள் அதில் உராங் ஊடானின் ரத்தமும் கலந்து இருக்கலாம்.

-எல்.முருகராஜ்.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement