dinamalar telegram
Advertisement

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் முகாம் மாற முடிவு!

Share

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் முகாம் மாற முடிவு!''டாஸ்மாக் கடைகளை மூடுனதுல, போலீசாருக்கு நல்ல வரும்படியாமுல்லா...'' என்றபடியே, போன் அரட்டையில் இணைந்தார், அண்ணாச்சி.

''அதெப்படிங்க...'' என, புரியாமல் கேட்டார் அந்தோணிசாமி.

''திருச்சி மாவட்டம், பச்சைமலையில இருக்கிற மலை கிராம மக்கள், தங்களது சொந்த உபயோகத்துக்காக சாராயம் காய்ச்சுவாவ... இப்ப, டாஸ்மாக்கை மூடிட்டதால, அதிகமா காய்ச்சி விற்பனையில இறங்கிட்டாவ வே...

''பச்சைமலையில, பல மலை கிராமங்கள்ல காய்ச்சுற சாராயத்தை, கீழே எடுத்துட்டு வந்து, திருச்சி மாவட்டம் முழுக்க 'சப்ளை' செய்தாவ...

''துறையூர் போலீஸ் அதிகாரி, உப்பிலியபுரம் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு முறையா மாமூல் போயிடுது வே...

''இவங்க எல்லாம், இப்ப லட்சக்கணக்குல சம்பாதிச்சிட்டு இருக்காவ...'' என்ற அண்ணாச்சி,

''மிதுன்குமார் 'லைன்'ல வராரு... முக்கிய விஷயம் பேசணும்... நீங்க பேசிட்டு இருங்க வே...'' என்றபடியே, 'ஜூட்' விட்டார்.உடனே, ''வெட்டியா இருந்தவங்களை வேலைக்கு அனுப்பிட்டாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கோவை சிட்டி போலீஸ் கமிஷனரா புதுசா வந்திருக்கிற தீபக் தாமோர், முதல் வேலையா, போலீஸ் அதிகாரிகள் வீடுகள்ல தோட்ட பராமரிப்பு, சமையல் வேலைன்னு இருந்த பல போலீசாரை, உடனடியா ஸ்டேஷன் மற்றும் ஆயுதப்படைக்கு அனுப்பிட்டாரு பா...

''கொரோனா தடுப்பு பணிக்கு, ஆள் இல்லாம திண்டாடிட்டு இருக்கிற நேரத்துல, அதிகாரிகள் வீட்டுல யாரும் வெட்டியா இருக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு... இப்ப, அதிகாரிகள் வீடுகள்ல, அவங்களது டிரைவர் மட்டுமே இருக்காங்க...

''எல்லாத்துக்கும் முன்னுதாரணமா, கமிஷனருமே, தன் வீட்டுல டிரைவர் தவிர, மற்ற போலீஸ்காரங்க எல்லாரையும், வழக்கமான 'டூட்டி'க்கு அனுப்பிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''நல்ல விஷயம் தான்...'' என பாராட்டிய அந்தோணிசாமி, ''அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க பேரவையினர் கடும் அதிருப்தியில இருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''எதிர்க்கட்சியா மாறிட்டதால, விரக்தியா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''அதில்லைங்க... ஆளுங்கட்சியா இருந்தப்பவே, பல்வேறு கோரிக்கைகளை தலைமையிடம் வச்சும், அதுக்கு பலன் இல்லை... தொழிற்சங்க நிர்வாகிகளின் 'ஆப்சென்டை' விடுப்புல கழிக்காதது; 2018 கடைசியில போட வேண்டிய, 14வது ஊதிய ஒப்பந்தத்தை போடாம விட்டதுன்னு பல கோரிக்கைகளை, அ.தி.மு.க., மேலிடம் கண்டுக்கலைங்க...

''அதே மாதிரி, பணியிட மாற்றம், பதவி உயர்வு, தண்டனை குறைப்புன்னு பல விஷயங்களுக்கு பணம் வசூலிச்ச உயர்மட்ட நிர்வாகிகள், அதை செய்து தராமலேயே அல்வா குடுத்துட்டாங்க...

''இப்ப, 'போக்குவரத்து ஊழியர்களை முன்கள பணியாளர்களா அறிவிக்கணும்'னு, ஓ.பி.எஸ்., அறிக்கை விட்டதை பார்த்து, தொழிற்சங்கத்தினர் சிரிக்கிறாங்க... 'இதே கோரிக்கையை, போன வருஷம் நாம வச்சப்ப கண்டுக்காத ஓ.பி.எஸ்., இப்ப மட்டும் கோரிக்கை வைக்கிறாரே'ன்னு புலம்புறாங்க...

''இதனால, விரக்தியில இருக்கிற பல நிர்வாகிகள், தி.மு.க.,வின் தொ.மு.ச.,வுல ஐக்கியமாக முடிவு பண்ணிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, இணைப்பை நண்பர்கள் துண்டித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    இந்தப்பகுதியில் இந்துக்கள் மட்டும் உரையாடினால் போதும்.

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    ”'போக்குவரத்து ஊழியர்களை முன்கள பணியாளர்களா அறிவிக்கணும்'”.... பஸ் ஓட்டாம வீட்லயே உட்கார்ந்து சம்பளம் வாங்குறாங்களே..... அதுக்காகவா...??? அதே போல கடந்த ஒண்ணரை வருஷமா வேலைக்குப் போகாமயே வீட்ல உட்கார்ந்து சம்பளம் வாங்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களையும் முன்களப் பணியாளர்களா அறிவிக்கணுமுங்க... அது தான் சமூக நீதி....

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பதவியில் இருந்தபோது திறக்காத வாய், இப்போது முழங்குகிறது இதுதான் முதிர்ந்த அரசியல்வாதி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement