dinamalar telegram
Advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வு: நல்ல முடிவு எடுக்கப்படுமா

Share

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் ருத்ரதாண்டவம் ஆடி வருவதால், தமிழகத்தில் இம்மாதம், 5ம் தேதி துவங்கவிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதேபோல, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட வேண்டிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில அரசுகளின் பள்ளி தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த, ௨௩ம் தேதி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில், 'கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், பிளஸ் ௨ மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்த வேண்டும்' என, பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையில், மாணவர்களில் ஒரு பிரிவினரும், பெற்றோர்களில் ஒரு தரப்பினரும், மற்ற வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல, பிளஸ் 2 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.

அதற்கு ஏற்றார் போல, டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'கொரோனா பரவல் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பு ஆண்டில் தீவிரமாக உள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரியுள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது. அதற்குள், மத்திய அரசும் ஏதேனும் முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வானது, மாணவர்களின் எதிர்காலம் தொடர்பானது. இதை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவித்தால், எதிர்காலத்தில் பல குழப்பங்கள் நிலவ வாய்ப்பு உண்டு. அப்போது, மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படலாம். அதனால், தேர்வை நடத்த வேண்டும் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது பாராட்டத்தக்கது. பிளஸ் 2 தேர்வை நடத்தும் முன், அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என, சில தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கு சாத்தியமில்லை என, மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், ஏராளமான பிளஸ் 2 மாணவர்கள், 18 வயதை அடைந்திருக்க மாட்டார்கள். மேலும், கொரோனா பரவல் முற்றிலும் ஓயாத நிலையில், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், தலைமை தேர்தல் ஆணையம், பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி முடித்துள்ளது. பல கோடி பேர் பங்கேற்ற தேர்தலையே நடத்தி முடிக்கும் போது, சில லட்சம் மாணவர்களுக்காக தேர்வை நடத்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மேலும், மொழிப்பாடங்கள் மட்டுமே, பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். அவற்றை தவிர்த்து விட்டு கூட, உயர் கல்விக்கு செல்வதற்கான பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாம். இல்லையெனில், குறைவான மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி விட்டு தேர்வு நடத்தலாம்.

தேவைப்பட்டால், தேர்தலின் போது ஓட்டுச் சாவடிகளை அதிகரித்தது போல, தேர்வு மையங்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கலாம். மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கின்றனரோ, அந்த பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைக்கலாம். இதனால், நீண்ட துாரம் பயணித்து தேர்வு எழுத செல்வது தடைப்படும். இல்லையெனில், மூன்று மணி நேரம் தேர்வு என்பதற்கு பதிலாக, ஒன்றரை மணி நேர தேர்வாக நடத்தலாம். அதுமட்டுமின்றி, 'ஆன்லைன்' வாயிலாகவும் தேர்வை நடத்தலாம். ஆனால், இதற்கு பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியிருக்கும்.

குறுகிய காலத்தில், தற்போதைய கொரோனா சூழ்நிலையில், அதை செய்வது கடினமானது என்ற வாதமும் ஏற்கக் கூடியதே. அத்துடன், ஆன்லைன் வாயிலான தேர்வுகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. குடும்ப ரீதியாக நடைபெறும் திருமணம் உட்பட, சில நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், கூட்டமாக கூடி கிரிக்கெட் விளையாடுவது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட நிலையில், தனித்தனியாக அமர்ந்து தேர்வு எழுதுவதால் பாதிப்பு வந்து விடாது. மேலும், கொரோனா பரவல் கருதி, ஏற்கனவே பாடத்திட்டங்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதனால், தாமதமாக நடத்தினாலும், தக்க கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிளஸ் ௨ பொதுத்தேர்வை நடத்துவதே சரியாக இருக்கும். கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.தேர்வு நடந்தால் தான், மாணவர்கள் உயர் கல்விக்கு செல்வதிலும், வேலைவாய்ப்புகளை பெறுவதிலும் பாதிப்புகளை சந்திக்காமல் இருப்பர். அதனால், இந்த விஷயத்தில் நல்ல முடிவை, மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் என, நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement