dinamalar telegram
Advertisement

மலிவாக கிடைத்தது கொரோனா மட்டுமே...

Share

அடைத்து கிடந்த கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன
கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்டவர்களைப் போல மளிகை காய்கறிப் பொருட்களை மக்கள் வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்.
முழு ஊரடங்கிற்கு முதல் நாளான இன்று ஒரு நாள் கடைக்காரர்களுக்கு திருநாள் என்று தான் சொல்லவேண்டும்.கத்திரிக்காயில் இருந்து தக்காளி வரை பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தது, மளிகை பொருட்கள் பற்றி கேட்கவேண்டியதே இல்லை.காய்கறியாவது மொத்த விலைக்காரர்கள் ஏற்றியிருப்பார்கள் அதனால் சில்லரை விற்பனையாளர்களும் ஏற்றி விற்கின்றனர் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் மளிகை கடையில் இருந்தது எல்லாம் பெரும்பாலும் பழைய ஸ்டாக்தானே! ஏன் விலையை ஏற்றினார்கள்? இந்த கடுமையான சூழலில் லாப நோக்கோடு செயல்படலாமா? என்ற கேள்விக்கு நாங்களும் மனிதர்கள்தான் ஓரு வாரத்திற்கு தேவையான லாபத்தை இன்று ஒரு நாள் சம்பாதித்தால்தான் உண்டு என்ற பதிலையே தந்தனர்.இதே மனநிலைதானே மருத்துவமனைகளிலும்,மருந்து விற்பதிலும் நடக்கிறது அவர்களை எந்த மனதோடு இவர்கள் இனி குறை சொல்ல முடியும்.வறுமையிலும் நேர்மை போல செய்வது வியாபாரமாக இருந்தாலும் அதில் ஓரு உண்மை இருந்திருந்தால்தானே சக மனிதனை இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆதரித்தது போலவும் அன்பு காட்டியது போலவும் இருக்கும்.
இந்த தத்துவம் எல்லாம் நாளைக்கு பேசலாம் இன்னைக்கு கொஞ்சம் வியாபாரத்திற்கு வழிவிட்டு விலகி நிற்க முடியுமா? என்ற கடைக்காரர் ஒருவரின் கேள்வியில் நிறைய கேலி கலந்து இருந்தது.
மக்கள் தங்கள் வீடுகளில் மளிகை பொருட்கள் வைக்கப்போவது போல மொத்தம் மொத்தமாக வாங்கிக் குவித்துக் கொண்டு இருந்தனர்.இவர்கள் வாங்கும் வேகத்தில் விற்பவர் வாங்குபவர் என்ற இருபாலரும் அணிந்திருந்த ‛மாஸ்க்குகள்' பெரும்பாலும் நாடிக்கு கிழேதான் தொங்கிக் கொண்டு இருந்தது.
ஒரு வாரம்தான் முழு ஊரடங்கு இந்த ஊரடங்கு நாட்களிலும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் என்பதை மக்கள் நம்ப தயராக இல்லை என்பது அவர்கள் வாங்கும் வேகத்தில் தெரிந்தது.
எந்த பொருளையும் யாரும் பேரம் பேசுவதாகவும் இல்லை,பொருள் கிடைத்தால் போதும் என்று வாங்கிக் குவித்தனர்.கொடுக்கப்பட்ட பத்து நிமிடத்தில் ஸ்டோரில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு வெளியே வரவேண்டும் என்ற ரேசில் அரிசி பருப்பு மட்டுமின்றி துடைப்பம்,கால் மிதியடி போன்றவகைள் கூட இடம் பெற்றிருந்தன.
கடந்த வருடம் கூட இவ்வளவு மோசமாக இல்லையே கொரோனா வந்தால் ஆஸ்பத்திரியில் படுக்கை கூட கிடைக்கவில்லையே என்ன கொடுமை ஈஸ்வரா என்று நாளும் அங்கலாய்த்தவர்கள் தங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல கடைவீதியில் அரக்க பரக்க பைகளுடன் உலாவந்தனர்.
இந்த ஆர்வத்தை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் காட்டியிருந்தால் கொஞ்சமாவது மனதிற்கு ஆறுதலாக இருந்திருக்கும் வீடுகளுக்கு பக்கத்திலேயே திறந்து இருந்த இலவச தடுப்பூசி மையங்கள் பல காற்று வாங்கிக் கொண்டிருந்தது.
இரவு ஒன்பது மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்று அறிவித்திருந்தாலும் மதியத்திற்குள் அனைத்து பொருட்களும் விற்றுத்தீர்ந்து இருந்து. மொத்த சந்தையில் மலிவாக அல்லது விலை இல்லாமல் பலருக்கும் கிடைத்தது கொரோனா மட்டுமாகத்தான் இருக்கும்.
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement