dinamalar telegram
Advertisement

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

Share

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
தெருநாய்களுக்கு சாப்பாடு புளூகிராஸ் ஏற்பாடு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளளே உள்ள அந்தப் பாதை மஞ்சள் கொன்றை மலர்களாலும் வேம்பு மர நிழல்களாலும் நிறைந்து நீண்டு கிடக்கிறது ஆனாலும் மாணவர்களோ மனிதர்களோ இல்லாமல் வெறுமை சூழ்ந்து காணபடுகிறது.ஊரடங்கு காரணமாக அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டனர் இது எதுவும் தெரியாமல் வளாகத்தின் ஒரு ஒரத்தில் உள்ள மாணவர்களுக்கான மெஸ் என்று சொல்லப்படும் உணவகத்தை சுற்றி சுற்றி தெருநாய்கள் நின்று கொண்டிருந்தன.
மாணவர்களுக்காக அந்த மெஸ்சில் தயார் செய்து சாப்பிடாமல் மீந்து போகும் உணவுகள் இந்த நாய்களுக்கு போதுமானதாக இருந்தது இப்போது ஏன் இந்த மெஸ்சை மூடிவிட்டனர் என்பது தெரியாமல் நாய்கள் பசியுடனும் ஏக்கத்துடனும் காணப்பட்டன.எத்தனையோ மாணவர்கள் நமக்காகவே பிஸ்கட் வாங்கிக் கொண்டு வந்து போடுவார்களே அவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள் அவைகளின் கண்கள் தேடுகின்றன,சில மாணவியர் தங்களது சாப்பாட்டை பங்கிட்டு நமக்கு ஊட்டாத குறையாக தந்துவிட்டு அல்லவா அவர்கள் சாப்பிடுவர் அந்த அன்பு உள்ளங்கள் எங்கே என்பதும் அதன் தேடுதலாக இருந்தது.
எல்லாவற்றுக்கும் காரணம் ஊரடங்கு என்று சொன்னால் அவைகளுக்கு புரியுமா என்ன? அதன் தேவை சாப்பாடு அதற்காக வளாகத்தை விட்டு வெளியே போய் பழக்கமில்லை யாராவது கொண்டு வந்து தருவார்களா என்று மனித நடமாட்டமே இல்லாத ரோட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. புது ஆட்களை பார்தால் குறைக்க வேண்டும் என்பது கூட பசி மயக்கத்தில் மறந்து போய் நம்மை என்ன கொண்டு வந்து இருக்கிறாய் என்பது போல பார்த்தது.
இந்த நேரம்தான் அந்த வளாகத்திற்குள் ஒரு வேன் நுழைந்தது.புளூகிராஸ் சின்னம் கொண்ட அந்த வேனைப் பார்த்ததும் நாலு கால் பாய்ச்சலில் இந்த நாய்கள் அனைத்தும் அங்கே ஒடி வந்தது இந்த வளாகத்தினுள் இத்தனை நாய்கள் இருக்கிறதா என்று வியக்குமளவிலான எண்ணிக்கையில் நாய்கள் அந்த வேனைச்சுற்றி திரண்டன.
வேனின் பின் பக்க கதவு திறந்து இரண்டு அண்டாக்கள் பார்வையில் பட்டதுமே நாய்களின் வால்கள் வேகமாக ஆடின நன்றியை முன்கூட்டியே சொல்கின்றதாம்.
கைகளில் கையுறை போட்டு சுகாதாரமான முறையில் சுத்தமான உணவை எடுத்து பேப்பரில் குறிப்பிட்ட துார இடைவெளியில் வைத்துக் கொண்டே போகின்றனர் இருவர், நாய்கள் தங்கள் உணவிற்கு எந்த பங்கமும் இல்லை என்பதால் அமைதியாக சாப்பிடுகின்றன.
ஒருவர் வாகன ஒட்டுனர் தங்கராஜ் மற்றொருவர் அமைப்பின் மேலாளர் வேலு அவரிடம் பேசியபோது..
வாயில்லாத ஜீவன்களில் ஒன்றான தெருநாய்களுக்கு அதன் இருப்பிடங்களுக்கு தேடிச்சென்று உணவளித்து வருகிறது சென்னை புளூகிராஸ் அமைப்பு.
பொதுவாக தெரு நாய்கள் ஒட்டல்கள் டீக்டைகளில் விழக்கூடிய மிச்சங்களை சாப்பிட்டு வளரக்கூடியவை இதே போல மாணவர்களின் ஹாஸ்டல் பகுதிகளில் உள்ள மெஸ்களில் மீதமாகும் உணவுகளையும் சாப்பிட்டு உயிர் வாழ்பவை.ஒட்டல்கள்,டீக்கடைகள்,மெஸ்கள் ஆகியன ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல் தெரு நாய்கள் தவித்து வந்தன.
வாய் இருப்பவர்கள் பசிக்கிறது என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுக்கொள்வர் ஆனால் இந்த வாயில்லா ஜீவன்கள் எங்கே யாரிடம் போய் பசியைச் சொல்லி சாப்பாடு கேட்கும்,மிகப் பரிதாபமாக உணவிற்கு அலைமோதின.
இது பற்றி கேள்விப்பட்டதும் புளூகிராஸ் அமைப்பினரான நாங்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்கும் களத்தில் இறங்கினோம்.
கடந்த சில நாளாக நாங்கள் எங்கள் பொது மேலாளர் டான் வில்லியமின் வழிகாட்டுதலின்படி சென்னை முழுவதும் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் பணியை செய்து வருகிறோம் எங்களுடன் இதற்காக தனியாக ஒரு குழு இயங்குகிறது.
ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து ஐநுாறு நாய்களுக்கு உணவு வழங்குகிறோம் இதற்காக புளூகிராஸ் அமைப்பிலும் உணவு தயார் செய்யப்படுகிறது எங்களுக்கு உதவ நுங்கம்பாக்கத்தில் உள்ள ‛கீரின் பார்க்' ஒட்டல் நிர்வாகமும்,பள்ளிக்கரணையில் உள்ள ‛அங்கிள் சாம் கிச்சன்' நிர்வாகமும் நாய்களுக்கான உணவை சமைத்து இலவசமாக எங்களிடம் வழங்கி வருகின்றனர்.ஒரு நாய்க்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை இருநுாறு கிராம் அளவிலான உணவு போதும்,அதற்கு பிடித்தாற் போல நெய் ஊற்றிய பருப்பு சாதம் போட்டு ‛பெடிகிரியை' மேலாக போட்டுவிடுவோம் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடும்.
நாங்கள் எங்கள் வேனில் பல இடங்களுக்கு சென்று சாப்பாடு கொடுக்கிறோம் எங்களால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் போக முடியாது என்பதால் சில இடங்களுக்கு தன்னார்வலர்களிடம் சாப்பாட்டை கொடுத்து விடுவோம் உங்கள் தெருவில் நாய்கள் பசியோடு இருக்கிறது என்றால் 96772 97978 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்தால் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்றவர் மெரினா கடற்கரை பகுதியில் நாய்கள் பசியோடு காத்திருக்கும் கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
வண்டி போகும் திசையைப் பார்த்து நாய்களின் வால்கள் ஆடிக்கொண்டிருந்தன.
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    இதற்க்கு பெயர் தான் மனிதம் .....தொடரட்டும் உங்கள் சேவை ..வாழ்த்துக்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement