dinamalar telegram
Advertisement

கொரோனாவை ஒழிக்க தொடரட்டும் அதிரடி

Share

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, காட்டுத் தீ போல பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 4 லட்சத்திற்கும் மேல் உள்ளது. தமிழகத்திலும் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. நேற்று முன்தினம் மட்டும், 33 ஆயிரத்து, 658 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, பிப்ரவரியில் மிகவும் குறைந்திருந்த நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வீட்டிற்குள் இருந்த மக்களை வீதிக்கு வரவழைத்து, பாதிப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து விட்டது. கொஞ்சம் தாமதமாக தேர்தலை அறிவித்திருந்தால், இந்த அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

கொரோனா, 2ம் அலை தீவிரமாக உள்ளதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உயிர்காக்கும் மருந்து இல்லை என, கூறப்பட்டாலும், நோயாளிகளுக்கு செலுத்த, 'ரெம்டெசிவிர்' மருந்து வாங்கி வரும்படி, பல டாக்டர்கள் பரிந்துரைப்பதால், அந்த மருந்து விற்பனையாகும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மருத்துவமனைகளில், இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட உறவுகளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை, தமிழக அரசு அதிகரித்து, காலை, 10:00 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என, அறிவித்துள்ளது. அத்துடன், ஆக்சிஜன் சிலிண்டர், 'ரெம்டெசிவிர்' மருந்தை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றும் கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே.

அதேநேரத்தில், பல சாலைகளில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்வதை பார்க்கும் போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உண்மையிலேயே அமலில் உள்ளனவா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், போலீசாருக்கு இன்னும் சற்று சுதந்திரம் கொடுத்தால், அவர்களின் சோதனைகள் அதிகரித்து, தேவையற்ற வகையில் சாலையில் சுற்றுவோர் எண்ணிக்கை குறையும்.

அத்துடன், கொரோனா நிவாரண தொகை வழங்க, பொதுமக்களுக்கு டோக்கன் கொடுத்து, அவர்களை ரேஷன் கடைகள் முன் குவிய வைப்பதும் சரியானதல்ல. அதற்கு பதிலாக, ரேஷன் ஊழியர்கள் வாயிலாக டோக்கன் கொடுத்த போதே, 2,000 ரூபாய் பணமும் கொடுத்திருக்கலாம் அல்லது அந்த ஊழியர்கள் வாயிலாக, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கு விபரங்களை பெற்று, அதில் செலுத்தியிருக்கலாம்.

கடந்த, 2015ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது, 5,000 ரூபாய் உதவித் தொகை, வங்கி கணக்கு வாயிலாக செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது சில குளறுபடிகள் நிகழ்ந்தாக புகார்கள் உண்டு. இருப்பினும், அந்த குறைகளை நிவர்த்தி செய்து, அந்த முறையில் பணம் வழங்குவது, இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பல விஷயங்களுக்கு நல்லது.

இதற்கிடையில், சர்வதேச டெண்டர்கள் வாயிலாக, மூன்று மாதங்களில், 5 கோடி தடுப்பூசிகள் வாங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது நல்ல முயற்சியே.தற்போதைய நிலையில், கொரோனா பரவலின் வேகத்தை பார்க்கும் போது, வரும், 24ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது.

மரணத்தில் இருந்து ஏராளமான மக்களை காக்க, அது அவசியம் எனில், அதை செய்வதில் தப்பில்லை. அதேநேரத்தில், பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க, ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது எடுத்து வரும் துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

கிராமங்களில் தற்போது, கொரோனா பரவலின் வேகம் குறைவாக உள்ளது. அது, அதிகரித்து விடாமல் தடுக்க வேண்டும். பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணியாளர்கள் வாயிலாக, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். மேலும், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். எங்கும், எந்த சூழ்நிலையிலும் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில், அவசர நிலை பிரகடனம் அமலில் இருப்பது போன்ற நிலைமை இருந்தாலும் தப்பில்லை. மேலும், சிறு சிறு தவறுகள் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பதால், மக்களும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நிடி ஆயோக் அமைப்பின் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால், 'நாட்டு மக்களுக்கு, இன்னும் ஐந்து மாதங்களில், 216 கோடி தடுப்பூசிகள் தயாராக இருக்கும். அப்போது, வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்' என, தெரிவித்துள்ளது, நம்பிக்கை தருவதாக உள்ளது. அத்துடன், எட்டு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அந்த நாள் வரை, பொதுமக்கள் அனைவரும், அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டு நடப்பதே முற்றிலும் சரியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement