dinamalar telegram
Advertisement

சவால்கள் அதிகம் சாதிப்பாரா ஸ்டாலின்?

Share

தமிழக சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற தி.மு.க., 10 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், முதல் நாளிலேயே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி, 4,000 ரூபாய், பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உட்பட்ட ஐந்து முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.


கொரோனா இரண்டாவது அலை, மாநிலத்தை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. தொற்றால் தினமும்பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 28 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அதனால், இன்று முதல் வரும், 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தருணத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரண தொகை, 4,000த்தில், முதல் தவணையாக, இந்த மாதமே, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது ஆறுதல் தரும் விஷயமே.இதன் வாயிலாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளில், சிலவற்றை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

குடும்ப தலைவியருக்கு மாதம்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை, சமையல் காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி.முதியோர் உதவித் தொகை, 1,500 ரூபாயாக உயர்வு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, பெட்ரோல், டீசல் விலை, 4 ரூபாய் முதல், 5 ரூபாய் வரை குறைப்பு உட்பட, பல அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், முதல்வர் கூறியுள்ளார். இந்த அறிவிப்புகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் எனில், ஸ்டாலின் தலைமையிலான அரசு பெரிய அளவிலான நிதிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த ஆண்டு பிப்ரவரியில், அ.தி.மு.க., தலைமையிலான அரசு, சட்டசபையில், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது, இந்த ஆண்டு மார்ச், 31 வரை மாநிலத்தின் கடன் சுமை, 4.85 லட்சம் கோடி. 2022 மார்ச்சில் இந்தக் கடனின் அளவு, 5.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என, தெரிவித்தது. கொரோனா தொற்றால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்து விட்டது. மக்கள் நலன் காக்க செலவினங்கள் அதிகரிக்கப்பட்டன. அதனால், அரசு கடன் பெறுவதை தவிர்க்க இயலாது. நடப்பாண்டில் வருவாய் வரவினங்கள் அதிகரிக்கும் என, நம்புவதாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 'அ.தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மையால், மாநிலத்தின் கடன், 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும், 1.25 லட்சம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்தப் பிரச்னைகளை தீர்ப்பதற்கான, செயல் திட்டங்களை வகுக்க, நிபுணர்கள் குழு அமைக்கப்படும்' என, கூறப்பட்டது. தற்போதைய கொரோனா தொற்று பரவல் காலத்தில், சுகாதார உள்கட்டமைப்புகளுக்காகவும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் பெரும் தொகையை மாநில அரசு செலவிட நேரிடும். அத்துடன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்க வேண்டும். இதனால், ஏற்படும் நிதிச்சுமையை தமிழக அரசு எப்படி கையாளப்போகிறது என்பது, பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படும் கேள்வியாகும்.


மேலும், கொரோனா ஊரடங்கால், அமைப்புசாரா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்ய வேண்டிய அவசியமும் மாநில அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில், ௭௫ சதவீத வேலைவாய்ப்புகளை, தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றுவது, இதர பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை அதிகரிப்பது, தனியார் துறையில், பிற்பட்ட வகுப்பினர்,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை ரத்து செய்வது, தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை போன்ற, மத்திய அரசின் ஒத்துழைப்போடு தீர்க்க வேண்டிய பல வாக்குறுதிகளையும், நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில், தி.மு.க., அரசு உள்ளது.

இதுவரை பல விஷயங்களில், மத்திய அரசுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வரும் ஸ்டாலின், இந்த அறிவிப்புகளை எல்லாம் நிறைவேற்ற, மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்து. அதற்கு ஏற்றார் போல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேண்டுகோளின்படி, பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கப்பட வேண்டும்.


இவை தவிர, இன்னும் ஏராளமான அறிவிப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில், அதற்கான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் ஸ்டாலின் உள்ளார். அத்துடன் தன் கட்சியினரின் அடாவடிகளால், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு கெட்ட பெயர் வராமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கு உள்ளது. அவற்றை எல்லாம், வரும் ஐந்தாண்டு காலத்தில், அவர் திறமையாக எதிர்கொள்வாரா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement