Load Image
Advertisement

குடும்பத்திற்கு பட்ஜெட் அவசியம்!

குடும்ப பட்ஜெட் எந்த அளவுக்கு அவசியம் என விளக்குகிறார், நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்: உங்கள் குடும்ப செலவுகளை பட்ஜெட் போட்டு மேற்கொள்ளும் போது, பணத்தை திட்டமிட்டு செலவு செய்வீர்கள். அது, அனாவசிய செலவுகளை குறைக்கும்; மேலும் சேமிப்புக்கும் வழிவகுக்கும். உங்கள் பணம், எந்தெந்த விதங்களில் செலவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள, குடும்ப பட்ஜெட் உதவும். நிதி ரீதியில் பாதுகாப்பாக உணர வேண்டுமானால், குடும்ப பட்ஜெட் மிகவும் அவசியமே. ஆனால் பெரும்பாலானோர் பட்ஜெட் போட்டு செலவு செய்வதில்லை. அப்படி செய்யும் போது, தன் வருமானம் பற்றியும், வருமானத்தை செலவு செய்யும் முறை பற்றியும் தெளிவு இருக்காது.

இதே நிலை தொடர்ந்தால், அனாவசிய செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய தேவைக்குக் கூட கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு, அதிக கடன் சுமை ஏற்பட்டு, பொருளாதாரத்தில் பாதுகாப்பின்மை நிலை உருவாகி விடும்.பெரிய அளவில் வருமானம் இருப்பவர்கள் மட்டும் தான் பட்ஜெட் போட வேண்டும் என்பதில்லை. மிகக் குறைவாக வருமானம் பெறுபவர்களும், பட்ஜெட் போட்டு செலவு செய்வது தான் நல்லது. அத்தியாவசிய பொருளை வாங்குவதற்கு செலவிடுவதை விட, ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு தான் அதிக பணத்தை அடிக்கடி நாம் செலவிடுகிறோம்.நம் மீது திணிக்கப்படும் விளம்பரங்களும், அந்த ஆசையை நமக்கு ஏற்படுத்துகின்றன.

இந்த சிக்கலில் இருந்து மீள, குடும்ப பட்ஜெட் மிகவும் அவசியம். விரயச் செலவுகளை கட்டுப்படுத்தி, கட்டுக்கோப்பாக குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என விரும்புவோர், அவசியம் செய்ய வேண்டிய வேலை, குடும்ப பட்ஜெட் போடுவது தான். பட்ஜெட் போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறோம்; திடீரென எதிர்பாராத செலவு வந்து விடுகிறது. அந்த நேரத்தில் பட்ஜெட் போட்டு தான் செலவு செய்வோம் என, நிற்க முடியாது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு என, ஒதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.


அதில் சேர்ந்திருக்கும் தொகையை வைத்து, எப்போவாவது வரும் அவசர, எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள வேண்டும். வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் என்றில்லாமல், ஒரு காலத்தில் வயதாகப் போகும், ஓய்வுபெறப் போகும் நபர்களும், இப்போதே குடும்ப பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும். குடும்ப பட்ஜெட் போட, அதற்கான எண்ணமும், சிறிது நேரமும், பேனாவும், நோட்டு புத்தகமும் தான் வேண்டுமே தவிர, வேறு எதுவும் தேவையில்லை!சொல்கிறார்கள் - நாணயம் விகடன் - 18.4.21 பக்: 30



வாசகர் கருத்து (1)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இப்பொழு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு இருக்கும் விலைவாசியில் எங்கத்த பட்ஜெட் போட்டு செலவு செய்யறது ???அதெல்லாம் அந்தக் காலம் .ஒரு சமயம் வருமானம் இருக்கு மற்றொரு சமயம் வருமானமே இல்லை என்ன செய்வது ???இந்தியா நாட்டின் ரிசர்வ் வாங்கி நாட்டின் அவசரத் தேவைக்காக நெருக்கடி நேரத்திற்கு என வைத்து இருந்த ஒருலட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் கோடி நிதியை தனியாருக்கு தாரை வார்த்துட்டாங்க ,இதுல என்ன பெரிய சேமிப்புத் திட்டம் வேண்டிக் கிடக்கு ????நமது நாட்டில் நெருக்கடி நிலை வந்தால் மக்களுக்கு இனி என்னசெய்யப் போகின்றனர் ???என்ன திட்டம் போடுகின்றனர் ???இனி என்ன திட்டம் போடப்போகின்றனர் புரியவில்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement