dinamalar telegram
Advertisement

கைமீறிய டில்லி நிலைமை இங்கு வராமல் தடுப்போம்!

Share

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, சுனாமியாக உருவெடுத்து, நாடு முழுதும் உள்ள மக்களை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாடு முழுதும், 3.50 லட்சத்தை தாண்டிவிட்டது.

தமிழகத்தில், இந்த எண்ணிக்கை, ௧௪ ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அதேநேரத்தில், நோயாளிகளின் உயிர்காக்க தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை, பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, டில்லி, ஜெய்ப்பூர் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், ௫௦க்கும் மேற்பட்டோர், கடந்த வாரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர்.நாட்டின் முதன்மையான மருத்துவமனையான, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஆக்சிஜன் பிரச்னையை சரி செய்வதற்காக, நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் வரை, தன் அவசர சேவை பிரிவை மூடி, பின்னர் திறந்துள்ளது. இதேபோல, டில்லியில் உள்ள வேறு சில மருத்துவமனைகளும், தங்களுக்கான ஆக்சிஜன் சப்ளையை சீராக்கவில்லை எனில், புதிதாக நோயாளிகளை அனுமதிப்பது கடினம் என, அறிவித்துள்ளன.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்ற மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'உங்கள் மாநிலத்தில், ஆக்சிஜன் உபரியாக இருந்தால், டில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொடுத்து உதவுங்கள்' என, கடிதம் எழுதியுள்ளார்.இதற்கிடையில், 'டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பானது அலையாக அல்ல; சுனாமியாக உருவெடுத்துள்ளது. நோயாளிகளின் உயிர் காக்க தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், டில்லிக்கு வரவிடாமல் தடுக்கும் அதிகாரிகளை துாக்கிலிட உத்தரவு பிறப்பிப்போம்' என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இதிலிருந்தே அங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதற்கிடையில், மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன், மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆக்சிஜன் மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி மற்றும் சுகாதார, 'செஸ்' வரி போன்றவற்றுக்கு மூன்று மாதங்கள், மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதன் வாயிலாக, ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பான அனைத்து கருவிகளும், எளிதாக கிடைக்க வழிவகை செய்துள்ளது. ஆனால், இது காலம் தாழ்ந்த நடவடிக்கையே. கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதே, மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் தயாரிப்பு உட்பட, கொரோனா உட்பட தொற்று நோய்கள் சிகிச்சைக்கான சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும், 8,000 டன்னுக்கு மேலான மருத்துவ ஆக்சிஜன் தயார் செய்ய முடியும் என, தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டின் தற்போதைய ஆக்சிஜன் தேவையில், ௬௦ சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி, ௪௦ சதவீதம் பற்றாக்குறை உள்ளதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அந்தப் பற்றாக்குறையை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேருவதற்கான நேர அளவை குறைக்க வேண்டும்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், தினமும், ௧,௨௫௦ டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அவை அனைத்தும், அம்மாநில நோயாளிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அங்கு, ௬.௫௦ லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், ௬௫ ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு, ௪௦௦ டன், புதுச்சேரியில், ௧௫௦ டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், ௧,௧௬௭ டன் ஆக்சிஜன் தமிழகத்தில் கையிருப்பு உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அதனால், இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை இல்லை என்றாலும், சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்கையில், இங்கும் டில்லி, மஹாராஷ்டிரா போன்ற நிலைமை உருவானாலும் ஆச்சரியமில்லை.எனவே, தமிழக அரசு நிர்வாகம் இப்போதே சுதாரிக்க வேண்டும். வரும் நாட்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிப்பதுடன், அங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில், 1,000 டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இருப்பதால், அந்த ஆலையை உச்ச நீதிமன்றம் கூறியது போல, அரசே ஏற்று நடத்தி, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.மக்களும் கொரோனா நிலைமை விபரீதமாகாமல் தடுக்கவும், உன்னதமான உறவுகளின் உயிர்கள் பலி போகாமல் தவிர்க்கவும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement