dinamalar telegram
Advertisement

ஓட்டுப்பதிவு சதவீதம் கூட மாற்றங்கள் அவசியம்

Share

தமிழகத்தில், 16வது சட்டசபைக்கான தேர்தல் இம்மாதம், 6ம் தேதி நடந்தது. அந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே, 2ம் தேதியன்று தான் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது முதல், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் தமிழகத்தில், 72.78 சதவீத ஓட்டுகள் தான் பதிவாகியுள்ளன. மொத்த வாக்காளர்களான, ஆறு கோடியே, 28 லட்சத்து, 69 ஆயிரத்து, 955 பேரில், 4.57 கோடி பேர் மட்டுமே ஓட்டளித்து உள்ளனர். மீதமுள்ள, 1.71 கோடி பேர், ஓட்டு போடவில்லை. சென்னையில் மட்டும், 16.6 லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், சென்னையில் தான் ஓட்டுப்பதிவு சதவீதமும் குறைவு. அதாவது, 59.06 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

கடந்த, 2011, 2016 சட்டசபை தேர்தல்களில், 78.01 மற்றும், 74.24 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதை ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம் குறைவே. அதாவது, முந்தைய தேர்தல்களை விட, இந்தத் தேர்தலில் சில லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தும், ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவில்லை என்பது வருத்தம் தருகிறது.

ஓட்டுப்பதிவு குறைவுக்கு கொரோனா பரவல் பயம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், அது முழுமையானதல்ல. ஏனெனில், ஓட்டுச் சாவடிகளில் வைரஸ் பரவலை தடுக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன; வாக்காளர்கள் நலன் கருதி கையுறைகள் வழங்கப்பட்டன. அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இந்த தேர்தலில் ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு முறை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போதும், ஒவ்வொருவரும் தங்களின் பெயர், பட்டியலில் உள்ளதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என, சரி பார்த்துக் கொள்ளும்படியும், அந்த பிரச்னையை தீர்க்க விண்ணப்பிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தும், அதற்கு பெரும்பாலானவர்கள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

ஓட்டு போடும் நேரத்தில் சென்று, வாக்காளர் பட்டியலை பார்த்து, பெயர் இல்லை என்றதும், குமுறுவதே வழக்கமாக உள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் பல குறைபாடுகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய பலர் விண்ணப்பிக்கும் போது, அதை முறையாக பரிசீலிப்பதில்லை.தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்கள், விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு சென்று முறையாக ஆய்வு செய்வதில்லை. அதனால், பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விடுபடுகின்றன. பெயர் மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்ற குளறுபடிகளும் நிகழ்கின்றன.

'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் செய்பவர்களும், பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும், ஓட்டுப்பதிவு நாளன்று தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தாலும், அவற்றில் பணிபுரிவோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களால் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலவழித்து, சொந்த ஊருக்கு சென்று ஓட்டுப் போட முடியாத நிலை உள்ளது.

எனவே, இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம், தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். அதே நேரத்தில், வேட்பாளர்கள் மீதுள்ள அதிருப்தி காரணமாகவோ அல்லது கட்சிகள் மீதுள்ள அதிருப்தி காரணமாகவோ, பலர் ஓட்டுப் போட முன்வருவதில்லை. அவர்களை எல்லாம் ஓட்டுப் போட வைக்க, அவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து, அவர்களிடம் விபரம் கேட்க வேண்டும். இதற்காக சில குழுக்களை அமைத்தாலும் தவறில்லை.

மேலும், சொதப்பலான காரணங்களை கூறி, ஓட்டு போடாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது ரேஷன் பொருட்கள், மானியங்கள் மற்றும் சலுகைகளை சில மாதங்களுக்கு ரத்து செய்யவோ நடவடிக்கை எடுக்கலாம். அத்துடன், வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயித்தல், கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்தல் போன்ற பல சீர்திருத்த நடவடிக்கைகளும் அவசியம்.

சென்னை போன்ற நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போர், அடிக்கடி வீடு மாறும் நிலைமை உள்ளது. அவர்களுக்காக, மாதம் ஒரு முறை விடுமுறை நாட்களில், சிறப்பு முகாம்கள் நடத்தலாம். ஆதார் அட்டை அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இதனால், யாரும் எங்கிருந்தும் ஓட்டளிக்கும் நிலைமையை ஏற்படுத்தலாம்.

மொத்தத்தில் சிறிய அளவில் உள்ள பிரச்னைகளை எளிதில் தீர்த்து விட்டாலே, வாக்காளர்கள் நிம்மதியாக ஓட்டளிப்பர். ஓட்டுப்பதிவு சதவீதமும் அதிகரிக்கும். அதை, காலத்தோடு தேர்தல் ஆணையம் செய்தால், மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement