dinamalar telegram
Advertisement

அனைவருக்கும் தடுப்பூசி காலத்தின் கட்டாயம்

Share

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை, தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாடு முழுதும் ஒவ்வொரு நாளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும், 1.45 லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்திலும், 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை, 6,௦௦௦த்தை நெருங்கி விட்டது.

கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணி, ஜனவரி, 16ல் துவங்கியது. முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அடுத்த கட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பின் இணை நோயுள்ள, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில், 600 மையங்கள் வாயிலாக, தடுப்பூசி போடுவது துவங்கியது. இதுவரை, 1.39 கோடி பேருக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், 37.32 லட்சம் பேருக்கு தான் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படாமல், ஒவ்வொருவரும் தாங்களாகவே முன்வந்து போட்டுக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டதால் இந்த நிலைமை.

அதே நேரத்தில், நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை, 10 கோடியை கடந்துள்ளது. அதாவது, 85 நாட்களில், 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகம் என, மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்கு, 38.93 லட்சம் டோஸ் என்ற அளவில், நம் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

அத்துடன் கொரோனா 2வது அலை, முதல் அலையை விட, வேகமாகவும், வீரியமாகவும் பரவுவது, பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.இதனால், மஹாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி போன்ற மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு, கூட்டம் கூடுவதற்கு தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும், நேற்று முன்தினம் முதல், சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், லட்சக்கணக்கானவர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். பிரியமான உறவுகளையும் இழக்க நேரிட்டது. அதுபோன்ற நிலைமை மீண்டும் வந்து விடக்கூடாது, மக்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், தற்போது, தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்திருந்த நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பாக நடந்த பிரசார கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றாலும், மக்களின் அஜாக்கிரதை காரணமாகவும், கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், தைரியமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைவாகவே உள்ளது.

எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்க வேண்டும். வயது வரம்பு இல்லாமல், அனைவரும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை குறைத்து, உள்நாட்டில் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.

உலகிலேயே தடுப்பூசிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சீரம் நிறுவனம், 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிப்பையும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்க, 3,000 கோடி முதலீடு தேவை எனக் கூறியுள்ளது. அதை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர கூட்டங்களில், மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதை முழுமையாகவும், தீவிரமாகவும், சில மாதங்களுக்கு அமல்படுத்த அரசு நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.

ஏனெனில், பொதுமக்கள் எங்கெல்லாம் அதிக அளவில் கூடுகிறார்களோ, அவையே கொரோனா பரப்பும் மையங்களாக உள்ளன. பிப்ரவரி மாதத்தின் முற்பகுதியில், நாடு முழுதும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 9,000த்திற்கும் கீழ் இருந்தது. அது தற்போது, 1.5 லட்சமாக அதிகரித்திருக்கிறது என்றால், அதற்கு மக்களின் அஜாக்கிரதையே காரணம். தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையான விதிகளை அமல்படுத்தினாலும் தவறில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் அல்லது தீவிர பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும். இல்லையெனில், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகி விடும். நிலைமை விபரீதமாகும் முன் தடுப்பதே சிறந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement