dinamalar telegram
Advertisement

ஜனநாயக கடமையாற்ற மறந்து விடாதீங்க!

Share

தமிழகத்தில், 16வது சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., --- பா.ஜ., - பா.ம.க., -- த.மா.கா., கட்சிகள் ஒரு அணியாகவும்; தி.மு.க., -- காங்கிரஸ் - ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் களமிறங்கி உள்ளன.

இவை தவிர, கமலின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சில கட்சிகளும்; தினகரனின் அ.ம.மு.க., தலைமையில் சில கட்சிகளும்; சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் களமிறங்கி உள்ளன. மொத்தத்தில் தேர்தல் களத்தில், பிரதானமாக ஐந்து அணிகள் போட்டியிட்டாலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அணிகள் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அதிலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மட்டும், 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

இதுவரை நடந்த தேர்தல்களைப் போல அல்லாமல், இந்தத் தேர்தல் சற்று வித்தியாசமாக உள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் உயிரோடு இருந்த நேரத்தில், கட்சிகளின் செயல்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் வகுப்பது, தேர்தல் அறிக்கைகளில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதெல்லாம், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் அமைந்தன. ஆனால், தற்போதைய தேர்தலில், பிரதான கட்சிகள் இரண்டும் ஆலோசனை நிறுவனங்களை நியமித்து, அவற்றின் வழிகாட்டுதல், வகுத்து தரும் திட்டங்கள் அடிப்படையில் செயல்படும் நிலைமையே காணப்பட்டது.

மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு, தொண்டர்களும், பொதுமக்களும் தானாகவே கூடும் நிலைமை மாறி, பணம் கொடுத்து ஆட்களை திரட்டி வரும் நிலைமையும் உருவாகி விட்டது. முன்னர் நடந்த சட்டசபை தேர்தல்களின் போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளுக்கும், ஓட்டுப்பதிவு நாளுக்கும் இடையே, நீண்ட இடைவெளி இருந்தது. அதனால், வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரத் திட்டம் வகுப்பது போன்ற விஷயங்களில், கட்சிகள் நிதானமாக செயல்பட்டன. ஆனால், இம்முறை குறைந்த கால அவகாசமே இருந்ததால், அனைத்து கட்சியினரும், தலைவர்களும் சூறாவளியாக செயல்பட நேரிட்டது. அது மட்டுமின்றி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில், ஏப்ரல், 2ம் தேதி வரை, 412 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதலாகி உள்ளன.

மேலும், இத்தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற சில கட்சிகள், தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், பிரதான கட்சிகளின் சின்னத்திலேயே போட்டியிடும் நிலைமையும் காணப்படுகிறது. அதே நேரத்தில், தொகுதிப் பங்கீடு விஷயத்திலும், அ.தி.மு.க., -- தி.மு.க., போன்ற கட்சிகள், கூட்டணி கட்சிகளிடம் சற்று கெடுபிடியாகவே நடந்து கொண்டன.ஏனெனில். குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைமை. பிரதான கட்சிகளுக்கு ஆலோசனை கூறும் நிறுவனங்களின் அறிவுரையும் இது தான் என்று கூறப்படுகிறது. அத்துடன், இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் கால் பதிக்க முடியாமல் திணறி வந்த, மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., கட்சி, இம்முறை எப்படியும் குறிப்பிட்ட அளவு இடங்களை பெற்று விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியது.

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.இது தவிர, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் ஆணையமும், கடந்த சில நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பணப் பட்டுவாடாவை தடுக்க, அரசியல் தலைவர்களின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில், வருமான வரித்துறை சோதனையும் திடீர் திடீரென நடைபெற்று, தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்தது. வேட்பு மனு தாக்கல் துவங்கியது முதல் நடைபெற்று வந்த, கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் தீவிர பிரசாரமும், ஓட்டு வேட்டையும் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்து விட்டன.

நாளை காலை, 7:00 மணிக்கு, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. எனவே, ஓட்டு போட தகுதியுள்ள அனைவரும், தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு சென்று, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் மிகுந்த எச்சரிக்கையோடு, முக கவசம் அணிந்து சென்று, தங்களின் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். மக்கள் நலனில், நாட்டு நலனில் அக்கறை கொண்ட கட்சி மற்றும் வேட்பாளர்களை கண்டறிந்து, மறக்காமல் ஓட்டை பதிவு செய்வது அவசியமாகும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement